அது என்ன இரண்டாவது விபத்து



காப்பாற்றத் தவறுதல் என்கிற கொலை

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் சாலை விபத்துகளில் மட்டும் 17 உயிர்கள் பறிபோவதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். 'இந்த இறப்புகளில் பாதிக்குப் பாதி இரண்டாவது விபத்தினால் நடக்கிறது’ என்றும் கட்டம் கட்டியிருக்கிறது அதே புள்ளிவிவரம். அதென்ன இரண்டாம் விபத்து? ‘சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நபர்களுக்கு முறையான முதலுதவிகளைச் செய்யாததும் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாததும்தான் இரண்டாம் விபத்து’ என்கிறது மருத்துவ உலகம்.

 ‘‘ ‘அய்யய்யோ ஆக்ஸிடென்ட்’ என்று பதறி ஓடாமல், ‘நமக்கென்ன’ என ஒதுங்கிப் போகாமல், நாம் அனைவரும் மனிதாபிமானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால், இந்த இரண்டாம் விபத்தைத் தடுக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் உயிருக்குப் போராடும் 17 பேரில் எட்டு பேரைக் காப்பாற்றலாம்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

‘‘விபத்து நடந்து சுமார் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்தை கோல்டன் ஹவர்... அதாவது பொன்னான நேரம் என்பார்கள். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும் பொன்னானது!’’ எனத் துவங்குகிறார் ‘ஆக்சிடென்ட் டெத் கேர் செல்’ என்ற அமைப்பின் தலைவரான பி.டி.அலி. சென்னையில் இயங்கும் இந்த அமைப்பு, சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுவோருக்கான எமர்ஜென்சி, சட்ட, இன்சூரன்ஸ் உதவிகளைச் செய்து வருகிறது.

‘‘இன்று ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் விபத்துகளைப் பார்க்கும் நபர்கள் தங்கள் வண்டியை நிறுத்துவதே அரிதாக இருக்கிறது. கண் முன் உயிருக்குப் போராடுபவரைக் காப்பாற்றத் தவறுவதும் கொலைதான். இதைப் பலரும் உணருவதில்லை. அப்படியே உதவ நினைக்கும் நபர் ஆம்புலன்ஸை அழைத்தாலும், அவர்கள் வந்து சேர அதிக நேரம் பிடிக்கும். அதற்குள் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி கொடுத்து உயிர் காக்கவும் நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. வெளிநாடுகளில் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கூட முதலுதவிகள் பற்றித் தெரியும். ஆனால் இங்கு... ‘உடனடியாக ஓடி வந்துவிடு’ என்றுதான் நம் குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

விபத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால், அங்கே ‘எஃப்.ஐ.ஆர் போட்டியா’ என்று கேட்பது போலத்தான் நம் சினிமா காட்டுகிறது. ஆனால், நிஜத்தில் நிலைமையே வேறு. சட்டப்படி, விபத்து என்று வருகிறவர்களுக்கு ஒரு மருத்துவமனை உடனடியாக சிகிச்சை அளித்தாக வேண்டும். அது இறப்பில் முடிந்தால், போலீஸுக்கு தகவல் தந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உதவி செய்வதெல்லாம் மருத்துவமனையின் வேலை. அதே போல ஆம்புலன்ஸுக்கு போன் செய்யும் நபரின் தொலைபேசி எண்ணையோ பெயரையோ அவர்களின் அனுமதி இன்றி, யாருக்கும் தர மாட்டார்கள். எனவே, வம்பு வரும் என்ற தயக்கம் தேவையே இல்லை!’’ என்கிறார் அவர் ஆதங்கத்தோடு.

அவசர கால முதலுதவிப் பயிற்சிகளைப் பொதுமக்களுக்கு அளிப்பதற்காகவே ‘அலர்ட்’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது. விபத்து சமயங்களில் உதவ நினைக்கும் பொதுமக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என விவரிக்கிறார் அதன் உதவி மேலாளரான கார்த்திக்...‘‘முதலில் பாதிக்கப்பட்டவரிடம் மூச்சு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நமது காதுகளை அவரின் நாசிக்கு அருகில் கொண்டு போவதன் மூலம் மெல்லிய சுவாசத்தையும் அறியலாம். அப்படி ஒருவேளை மூச்சு இருக்கிறதென்றால், அவரின் தோள்களைத் தட்டி பேச்சுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். ‘எங்கே வலிக்கிறது... என்ன செய்கிறது’ என்று கேட்டுக்கொண்டால், அதற்கு ஏற்றபடி அவரைக் கையாளலாம். உதாரணத்துக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் நபரை அதே இடத்தில் பிடித்துத் தூக்கும்போது, முறிந்த எலும்பு உள் தசைகளைக் கிழித்து விடும் ஆபத்து இருக்கிறது.

ஒருவேளை மூச்சு இல்லை என்றால், விபத்து நடந்த அதிர்ச்சியில் இதயம் துடிப்பதை நிறுத்தியிருக்கும். உடனே, ‘இறந்து விட்டார்’ என்று முடிவு கட்டிவிட வேண்டாம். கார்டியோ பல்மனரி ரிசஸ்சிடேஷன் எனப்படும் சி.பி.ஆர் சிகிச்சையை உடனடியாகச் செய்தால் மீண்டும் இதயம் துடிக்க வாய்ப்பு இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் மார்புக்கு நடுவே நமது வலது உள்ளங்கையை வைத்து அதற்கு மேல் இடது கையால் முட்டுக் கொடுத்து அழுத்தம் தருவதுதான் சி.பி.ஆர் சிகிச்சை.

இரண்டு அங்குலம் வரை மார்பு இறங்கி ஏறும்படி தொடர்ந்து இப்படி அழுத்தம் தர வேண்டியது முக்கியம். இதுதான் முறையான சி.பி.ஆர் சிகிச்சை என்று சொல்ல முடியாது. ஆனாலும், இந்த அழுத்தங்களால் இதயம் மீண்டும் துடிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது!’’ என்கிற கார்த்திக், தங்களின் அலர்ட் அமைப்பு இதுவரை 25,000 பேருக்கு இந்தப் பயிற்சியை வழங்கியிருப்பதாய்ச் சொல்கிறார்.

‘‘நம் ஊர் சினிமாக்களில் விபத்துக்குள்ளானவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும் வாயில் தண்ணீர் ஊற்றுவதையும் இன்னும் காட்டுகிறார்கள். இவை முற்றிலும் தவறான நடவடிக்கைகள். விபத்துக்குள்ளானவர் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும்போது தெளிக்கப்படும் தண்ணீர், சுவாசத்தை தடை செய்யலாம்.

 மயக்க நிலையில் இருப்பவர்களின் நாக்கு தன் நிலையிலிருந்து சரிந்து உணவுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி இருக்கும். இந்த நேரத்தில் வாயில் கொடுக்கப்படும் நீர், உணவுக் குழாய்க்கு போகாமல் சுவாசக் குழாயில் போய் அடைப்பை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் தவிர்த்து, முதலுதவி முறைகளை நன்கு அறிந்திருப்பவர், விபத்து சமயங்களில் ஒரு டாக்டரை விடவும் முக்கியமான பங்கை ஆற்ற முடியும்!’’ என்கிறார் அவர் நம்பிக்கையோடு!

வெளிநாடுகளில் ஐந்தாம் வகுப்பு
மாணவனுக்கு கூட முதலுதவிகள் பற்றித் தெரியும்.
 ஆனால் இங்கு...
‘உடனடியாக
ஓடி வந்துவிடு’
என்றுதான்
நம்
குழந்தைகளுக்கு
அறிவுறுத்துகிறோம்.

-டி.ரஞ்சித்
படங்கள்:  ஏ.டி. தமிழ்வாணன்