ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்



வழக்கமாக பாதுகாவலர்கள் புடைசூழவே வெளியில் எங்கும் செல்வார் சன்னி லியோன். கடந்த வாரம் அவசரமாக ஃபிளைட் பிடிக்கும் வேகத்தில் தனியாகப் போன அவரை மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு விட்டார்கள். கடைசியில் சில ராணுவ வீரர்கள் வந்து அவரை மீட்டார்கள். இதில் நெகிழ்ந்துபோன சன்னி லியோன், அவர்களோடு போட்டோ எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப் எல்லாம் போட்டுக் கொடுத்தார். ‘‘தேசத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் என்னைப் பாதுகாத்ததில் பெருமைப்படுகிறேன்’’ என்று வேறு சொன்னார்.

தன்னுடைய பர்சனல் பணியாளர்களை நண்பர்கள் போலவே அன்பாக நடத்தும் மிகச்சில நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். அதிலும் குறிப்பாக தனது ஹேர் ஸ்டைலிஸ்ட் தன் திருமணத்தைத் தள்ளிப் போடுவது குறித்து எப்போதும் ஓவராகக் கலாய்க்கும் அவர், அந்த நபருக்காக சீரியஸாக பெண் பார்த்துக்
கொண்டிருக்கிறார்.

பணக்காரர்களிடம்தான் நிறைய பணம் இருக்கிறதே. அவர்கள் மற்றவர்களைவிட அதிக வரி கட்டினால் என்ன?’’ எனக் கேட்டுவிட்டார் நடிகை கிறிஸ்டன் பெல். ஆளாளுக்கு அவரைக் கடுமையாக கண்டிக்கிறார்கள். உச்சமாக ஒருவர், ‘‘நீ செவ்வாய் கிரகத்துக்குப் போ!’’ என சாடியிருக்கிறார்.

இன்னமும் புதுப் பட ஷூட்டிங்குக்கு முதல் நாள் போகும்போது, முதன்முதலில் பள்ளிக்குப் போகும் சிறுமியைப் போல பதற்றமாக உணர்கிறேன்’’ என்கிறார் கேட் வின்ஸ்லெட். 38 வயதாகிறது. 22 ஆண்டுகளாக நடிக்கிறார். குவிக்காத பாராட்டுகள் இல்லை. ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என கொள்கை வைத்திருக்கிறார். இந்த பயமும் அர்ப்பணிப்பும்தான் அவரை உச்சத்தில் வைத்திருக்கிறது.

‘‘சினிமா குடும்பப் பின்னணியோடு வருபவர்களுக்குத்தான் இங்கே வாய்ப்புகள் குவியும். மற்றவர்கள் சிரமப்பட்டுத்தான் மேலே வர வேண்டி இருக்கிறது’’ என வெளிப்படையாகச் சொல்கிறார் நேஹா சர்மா. அழகும் திறமையும் இருந்தாலும், ஐந்து ஆண்டுகளாகப் போராடித்தான் வாய்ப்புகளைப் பெறுகிறார் நேஹா. அந்த எரிச்சல்தான் இப்படிப் பேச வைக்கிறது.