இளமை துள்ளும் கமலின் தோளில் இளங்கொடியாய் படர்ந்திருக்கும் குட்டி பத்மினி, கமலுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்... ‘‘‘மாணவன்’ படத்தில் இடம்பெறும், ‘விசிலடிச்சான் குஞ்சுகளா...’ பாடல் காட்சியில் எடுத்த படம் இது. அப்போ எனக்கு 14 வயசுதான் இருக்கும்.
எனக்கு பரதம், குச்சுபுடி எல்லாம் தெரிந்திருந்தாலும் சினிமா டான்ஸ் தெரியாது. கமல்தான் கற்றுக்கொடுத்தார். ஏவி.எம் ஸ்டூடியோவில் இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போது, ‘அன்பே வா’ படத்தின் எடிட்டிங் வேலை நடந்துகொண்டிருந்தது. ஏவி.எம் நிறுவனத்துக்கு நானும் கமலும் செல்லப்பிள்ளை என்பதால் ஷூட்டிங் பிரேக்கில் எடிட்டிங் அறைக்கு சென்றுவிடுவோம். எடிட்டிங் பற்றி ஆர்வமாகத் தெரிந்துகொள்வார் கமல்.
அந்தக் காலகட்டத்தில் நானும் அவரும் சென்னை வீதிகளில் சைக்கிளில் சுற்றி வருவோம். அதிகாலை 4 மணிக்கெல்லாம் என்னை எழுப்பி உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் செல்வார். அந்த நாட்களெல்லாம் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஏவி.எம் குடும்பத்தில் கமலைவிட எனக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால், என்மீது செல்லப் பொறாமை காட்டுவார்.
அவருக்கு நிறைய காதலிகள் இருந்தாலும் அந்த லிஸ்ட்டில் நான் வந்ததில்லை. ‘உன்னை பார்த்தால் எனக்கு காதல் வரவில்லை’ என்று சொல்லிக்கொண்டிருப்பார். 7 வயதிலிருந்து அவருடன் பழகியதால் இயல்பான நட்புதான் எங்களுக்குள் இருந்தது. நான் காதல் திருமணம் செய்துகொண்டபோது என் அம்மா என்மீது கோபமாக இருந்தார். அவரது கோபத்தைத் தணித்து என்னுடன் சமாதானப்படுத்தி வைத்ததே கமல்தான். வாழ்க்கையில் மறக்க முடியாத உதவி அது.
நாங்கள் நாடகங்களிலும் இணைந்து நடித்திருக்கிறோம். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கமல் நினைப்பார். ஒருமுறை கே.பாலசந்தர் சாரின் நாடகம் ஒன்றில், ஓடும் பஸ்ஸில் பயணிகளை விலக்கிக்கொண்டு கமல் காதலியைப் பார்ப்பது மாதிரியான ஒரு காட்சி. வெறும் நாடக மேடையில் தன் நடிப்பால் பஸ்ஸையும் கூட்டத்தையும் கண் முன் நிறுத்தி கைதட்டல்களை அள்ளினார் கமல். டெலிஃபிலிம் என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் காலத்தில் கமல் ஒரு டெலிஃபிலிம் எடுத்தார். அதில் நான்தான் ஹீரோயின். சினிமாவில் தயாரிப்பாளராக - இயக்குனராக நான் உருவாவதற்கு கமலின் அந்த ஆர்வமே உந்துதலாக இருந்தது என்று சொல்லலாம்.’’
அமலன்
படம் உதவி: ஞானம்