எனக்குள்ளே ரெண்டு ஷங்கர் இருக்காங்க...



ஷங்கர் பேட்டி

‘‘‘என்ன, இந்த ஷங்கருக்கு... இந்தியாவில பொண்ணே கிடைக்கலையா? எமி ஜாக்ஸன் ஹீரோயின் ஆயிட்டாங்க’னு பெரிய ஆச்சரியம் எழுந்தது. ஆனால், நான் பார்த்த பாடல் காட்சியில், அப்படியே தமிழ்ப்பெண் ஜாடை... என்னங்க நடந்தது?’’ ‘‘எவ்வளவோ நடந்தது. படத்தில் அவங்க மாடலா வர்றாங்க.

அதுக்கும் நல்லா இருக்கணும். தமிழ்ப் பொண்ணாகவும் அழகா வளைய வரணும். எமியோட ப்ளஸ், கருப்புக் கூந்தல். பி.சி.ஸ்ரீராம் ஒரு மாதிரி சாஃப்ட் நேச்சரில் சில புகைப்படங்கள் எடுத்தார். கொஞ்சம் இந்தியத்தனம், அதிகம் தமிழ்த்தனமா அவங்களை ஆக்கிட்டோம். சில நடை, உடை பாவனைகளுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து, பயிற்சி கொடுத்துப் பார்த்தால், அட, அச்சு அசல் நம்ம தமிழ்ப் பொண்ணு! பார்க்கிறதுக்கு அமலா ஞாபகம் வந்தது. அவரை வச்சு அடுத்து படம் எடுக்கிறவங்களுக்கு சுலபமா மாத்திக் கொடுத்திட்டோம்!’’

‘‘உங்களுக்குன்னு ஏ.ஆர்.ரஹ்மான் தனியா உழைப்பாரே..?’’ ‘‘ரஹ்மானோட ஆர்வமும் தேடலும்தான் அற்புதம். இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகும் அவர் புதுசாகத்தான் ஃபீல் பண்ணுவார். எந்த விதத்திலும் பழைய பாடல்களை ஞாபகப்படுத்திடக் கூடாது. அதே சமயம் எதிர்பார்ப்பையும் நழுவ விடக்கூடது. நீங்க பார்த்தீங்களே,

இதுவரை ஒரு பாடலை யாரும் இப்படிப் பண்ணலை. மொத்தம் ஐந்து பாட்டு. ஒரு பாட்டுக்கு டியூன் போட்டு, எனக்கும் பிடிச்சு, ‘சரி... எடுத்து வைங்க’ன்னு சொல்லிட்டேன். நானே ஓகே பன்ணிட்டேன்னு விடாம, இன்னும் நிறைவா, இன்னும் அழகா ஒண்ணு போட்டுக் கொடுத்தார். எல்லாப் பாடலும் பிரயாசைப்பட்டு உருவானது. எல்லோருக்கும் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை.’’

‘‘தமிழ் சினிமாவின் பெரிய ஆச்சரியம், உண்மையும் கூட. நீங்க கடந்த 21 வருஷமா லைம் லைட்டில் இருக்கீங்க. எப்படி?’’ ‘‘ஏன்... நான்தான்னு எல்லாம் சொல்ல முடியாது. முப்பது வருஷத்திற்கு மேல பாலசந்தர் சார் ரூல் பண்ணினார். நான் ‘ஜென்டில்மேன்’ பண்ணும்போது 10 வருஷம் தாக்குப் பிடிச்சாலே பெரிய சங்கதின்னு நினைச்சிருக்கேன். ஏதோ கொஞ்சம் நின்னதுக்கு பல காரணங்கள்... முந்தைய படங்களுக்கு குறையாமல் பண்ணணும், புதுசா செய்யணும்னு நினைச்சது. முக்கியமா, ஆடியன்ஸ். ஏன்னா, நானே ஆடியன்ஸ்ல ஒருத்தன்தான். நான் படங்கள் பார்த்துக்கிட்டேதான் இருக்கேன். எனக்குப் புதுசா இருக்கணும்.

ஷங்கரா இருந்தாலும், வேற யாரா இருந்தாலும் புதுசு புதுசா எதிர்பார்க்கிற ஆடியன்ஸ். ‘ஷங்கர்னா..? இத்தனை படம் பண்ணாரே... இப்ப என்ன புதுசா பண்ணப்போறார்’னுதான் கேட்பாங்க. ஆடியன்ஸ் ஷங்கருக்கு வேண்டிய தீனியை, டைரக்டர் ஷங்கர் கொடுத்தே ஆகணும். அதுவும் இந்த டிரெண்டுக்குக் கொடுக்கணும். பழசா இருந்தா போயிக்கிட்டே இருப்பாங்க. அப்படி இருக்கும்போது, படம் பண்றது பெரிய சேலஞ்ச்... சுமை! இதுதான் என்னை ஓட வச்சிக்கிட்டு இருக்கு. அரைச்ச மாவை அரைக்காமல் புதுசா சொல்ல வச்சுக்கிட்டே இருக்கு... எனக்குத் தெரிஞ்சதை நான் பண்ணிக்கிட்டே இருக்கேன்! இந்தப் படத்தில இவ்வளவு புதுமைகளும் செய்ய காரணமா இருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அவர்களுக்கு என் வந்தனம்.’’

‘‘முதல் படம் பண்ணும்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வருவோம்னு நினைச்சதுண்டா! ‘பீக்’கில் இருந்த ரஜினியை வச்சே ரெண்டு படங்கள்... நினைச்சதெல்லாம் நடந்துவிட்டதா?’’
‘‘மகேந்திரன் மாதிரி படம் பண்ணணும்னு வந்தவன் நான். ரூட் மாறிப்போச்சு. கமர்ஷியலா, அதையும் ஒழுங்கா, சந்தோஷத்தோட பண்றேன். நினைச்சதை விட நல்லா இருக்கேன். நாளாக நாளாக தேடலும், திருப்தி லெவலும் மாறிக்கிட்டே வருது.

இன்னும் சாத்தியங்கள் நிறைய இருக்கு. நான் போற ரூட்ல, சினிமா பற்றிய பார்வை விரிவடைய அவ்வளவு விஷயம் இருக்கு. என்னென்னவோ பண்ணலாம். அதற்கு பட்ஜெட், வியாபாரம்னு பெரும் தடைகள் இருக்கு. ஒவ்வொரு படமா உடைச்சு உடைச்சு, எனக்கு உண்டான வசதியை நானே ஏற்படுத்திக்கிறேன். 100 மீட்டர் ஓடி வந்திட்டா, 200 மீட்டர், 1000 மீட்டர், மராத்தான்னு மனசு போகுது. அதற்கான சாத்தியங்கள் அமையணும். பார்க்கலாம்!’’ ‘‘இளைய தலைமுறையை கவனிப்பீங்களா?’’

‘‘நானே ‘ஜென்டில்மேன்’ ஏஜ்லதாங்க இருக்கேன். ‘சூது கவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’னு வேற மாதிரி போகுது இல்ல. அதையும் ஆடியன்ஸ் ஷங்கரும் டைரக்டர் ஷங்கரும் பார்க்கிறான் இல்லையா! நான் சினிமாவை நடிகர்களை வச்சுப் பார்க்கறதில்ல. படம் பிடிச்சா எல்லாரையும் பிடிக்கும்!’’
‘‘நீங்க படங்கள் கொடுத்து எங்களை ரிலாக்ஸ் பண்ணுவீங்க. நீங்க ரிலாக்ஸ் பண்ணிக்கிறது எதில்?’’

‘‘டைமே இல்லை சார்! ரிலாக்ஸ் பண்ற சமயத்தில் ஏதாவது சின்ன வேலையை முடிச்சிடலாமான்னு யோசிச்சு வச்சிருப்பேன். படம்தான் போவேன். பேட்மின்டன் விளையாடுவேன். இன்னும் ஃப்ரீயா இருந்தால் அந்த நேரம் குடும்பத்துக்கு. அவ்வளவுதான்!’’ ‘‘உங்க குடும்பத்தை பத்தி யாருக்கும் அவ்வளவா தெரியாதே...’’ ‘‘தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஃபேமிலி மாதிரிதாங்க. வீட்டைப் பத்தின எல்லா விஷயங்களையும், மனைவி பார்த்துக்கொள்வதால் எனக்கு அதில் நிம்மதி. பெரிய பொண்ணு மெடிசின், அடுத்த பொண்ணு +1 படிக்கிறாங்க. பையன் 6வது படிக்கிறார். நார்மல் ஃபேமிலிதாங்க!’’

‘‘ஆச்சரியம் என்னன்னா, நீங்க இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்கினதில்லை. அழகழகான பெண்களோட ஒர்க் பண்ணியிருக்கீங்க. ஆனாலும்..?’’ ‘‘ஏங்க.... வேலையை பாத்திட்டு இருக்கிறதை கூடவா, ‘ஏன் இப்படி இருக்கீங்க’ன்னு கேட்பீங்க? நான் நார்மலா ஒரு டிசிப்ளின்டு லைஃப் வாழணும்னு முயற்சி பண்றேன். முக்கியத்துவம் தரவேண்டிய வேற விஷயங்கள் குவிஞ்சு கிடக்கு.

இந்த மாதிரி நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது பெருசு சார். எவ்வளவோ பேர் இருக்காங்க. நமக்கு ஒரு படம் பண்ற, டைரக்டர் பண்ற வாய்ப்பும், நம்மளை நம்பி தயாரிக்கிறவங்களும் கிடைக்கிறாங்க. பல பேருடைய உழைப்பைச் சேர்த்து படம் செய்கிற அருமையான வாய்ப்பு எல்லாருக்குமா கிடைக்குது? அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதில் முழுசா கவனத்தை குவிச்சு போறதுதான் சரி. இதெல்லாம் பெருமை இல்லை சார்... இயல்பு!’’

-நா.கதிர்வேலன்

சென்ற இதழ் தொடர்ச்சி...