‘‘நோ...’’ தேன்மொழி அலறினாள். ‘‘நான் நம்ப மாட்டேன்...’’
‘‘எதை நம்ப மாட்டீங்க?’’ நிதானமாக அதே நேரம் அழுத்தத்துடன் கேட்டார் பெரியவர்.
‘‘ஸ்காட் வில்லியம்ஸ் ‘ரெட் மார்க்கெட்’ வியாபாரத்துக்காகத்தான் தமிழகம் வந்திருக்கான்னு சொல்றீங்களே, அதை...’’
‘‘ஏன்?’’
‘‘ஏன்னா ‘ரெட் மார்க்கெட்’ பத்தி எனக்குத் தெரியும்...’’
‘‘என்ன தெரியும்..?’’ ‘‘அது சிவப்பு சந்தை. மனித உறுப்புகளை அவங்களுக்கே தெரியாமயும், தெரிஞ்சும் எடுத்து கள்ள மார்கெட்ல விக்கறது. இது சட்ட விரோதமானது. எல்லா நாடுகள்லயும் இதை தடை செய்திருக்காங்க. நம்ம நாட்ல சான்ஸே இல்ல...’’
‘‘சான்ஸே இல்லையா?’’ நிதானத்தை முதன் முறையாக கைவிட்டார் பெரியவர். ‘‘யங் பிரதர்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா?’’ அடிக்குரலில் சீறினார்.
தேன்மொழி பயந்து போனாள். இந்த அளவுக்கு பெரியவர் கோபப்படுவார் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அறையில் இருந்த ராமையும், ரங்கராஜனையும் ஏறிட்டாள். இருவரும் அமைதியுடன் பெரியவரையே பார்த்து கொண்டிருந்தார்கள். சட்டென்று ஓர் உண்மை அவளுக்கு புலப்பட்டது. இந்த உரையாடலில் இவர்கள் இருவரும் இனி கலந்து கொள்ள மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் பெரியவரிடம்தான், தான் பேச வேண்டும். பேசினாள்.‘‘இல்ல...’’
‘‘அதனாலதான் ‘ரெட் மார்க்கெட்’ பத்தி உங்களுக்கு தெரியல...’’ என்றபடி அருகில் வந்த பெரியவர், அவள் கண்களை உற்றுப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.
‘‘மேற்கு வங்க மாநிலத்துல ‘புர்பஸ்தலி’னு ஒரு ஊர் இருக்கு. அங்கதான் ‘யங் பிரதர்ஸ்’ ஏற்றுமதி நிறுவனம் இருந்தது. மனித எலும்புகளைத்தான் அவங்க ஏற்றுமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எங்க தெரியுமா? அமெரிக்காவுல இருக்கிற மருத்துவக் கல்லூரிகளுக்கு.
அங்க படிக்கிற பசங்களுக்கு பாடம் கத்துக்க எலும்புகள் தேவை இல்லையா? அதுக்காக மேற்கு வங்க மாநிலத்துல இருக்கிற ஏழைகளோட எலும்புகளை மொத்தமா அள்ளி வித்துக்கிட்டு இருந்தாங்க. எத்தனை வருஷங்களா தெரியுமா? 150 வருஷங்களா. முக்தி பிஸ்வாஸ்தான் அந்த நிறுவனத்தோட ஓனர். அவரோட அப்பா, அவர், அவரோட மகன்னு மூணு தலைமுறைகளா இந்த முறைகேட்டை செஞ்சுட்டு இருந்தாங்க. நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு சொன்னீங்களே, நம்ம நாட்டோட சட்டம்... அதனால ஒண்ணும் பண்ண முடியலை. அப்புறம் பெரிய போராட்டங்களுக்கு பிறகுதான் ‘யங் பிரதர்ஸ்’ நிறுவனத்தை மூடினாங்க. அப்ப அங்கேந்து கைப்பற்றப்பட்ட எலும்புகளோட மதிப்பு எவ்வளவு தெரியுமா? எழுபதாயிரம் அமெரிக்க டாலர்கள்...’’
‘‘பொய்...’’
‘‘இல்ல நிஜம். வேணும்னா கூகுள்ல ‘யங் பிரதர்ஸ்’னு டைப் பண்ணி தேடிப் பாருங்க. ரத்தம் படிந்த அந்த கொடூரமான வரலாறு உங்களுக்குக் கிடைக்கும்...’’
அதிர்ந்து போய் அப்படியே சுவரில் சாய்ந்தாள் தேன்மொழி.
‘‘2004, டிசம்பர் 26 அன்னிக்கி சுனாமி தாக்குச்சே... நினைவுல இருக்கா?’’
‘‘ம்...’’
‘‘அதுல தங்களோட வாழ்வாதாரங்களையே பல தமிழக மீனவர்கள் பறிகொடுத்தாங்க. குறிப்பா சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த மீனவங்க. அவங்கள்ல பல பேர் கிட்டேந்து கிட்னி திருடப்பட்டிருக்கு. இதெல்லாமே செய்தியாவும் வந்திருக்கு. திருடப்பட்ட அந்த கிட்னிங்க எங்க போச்சு?’’
‘‘...’’
‘‘சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பணக்காரங்களுக்கு அது பொருத்தப்பட்டிருக்கு. இதெல்லாம் ‘ரெட் மார்கெட்’ இல்லையா?’’
‘‘நீங்க சொன்ன எதையும் நான் மறுக்கலை. ஆனா, இதெல்லாமே கள்ளத்தனமா நடந்தது... நடக்கறது. இதுக்கும் ‘மெடிகோ’ நிறுவனத்துக்கும் என்ன சம்பந்தம்? உலகளவுல அது பெரிய மருந்து கம்பெனி. அவங்க இவ்வளவு சீப்பா நடந்துக்க மாட்டாங்க...’’
‘‘இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே டாக்டர்...’’ பெரியவர் சிரித்தார். அந்த சிரிப்பில் கோபமே கொப்பளித்தது. ‘‘இன்னிக்கி உலகளவுல எதிர்ப்பு மருந்து உற்பத்தில புதிய ஆய்வுகளோ, கண்டுபிடிப்புகளோ நடத்தப்படல. ஏன் தெரியுமா? இதெல்லாமே பொது மருத்துவ பயன். அதனால விலையை அதிகமா நிர்ணயிக்க முடியாது. கூடாது. அதனாலதான் புற்றுநோய், இதயநோய் மாதிரியான உயிர் காக்கும் மருந்து உற்பத்தில கவனம் செலுத்தறாங்க. அப்பத்தான் கோடி கோடியா லாபம் கிடைக்கும்.
குத்து மதிப்பா சொல்றேன்னு நினைக்காதீங்க. தகுந்த ஆதாரங்களோடதான் சொல்றேன். கடந்த 12 ஆண்டுகள்ல ஆஸ்திரேலியாவுல மட்டும் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு 1.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை செலவழிச்சிருக்காங்க. இதன் மூலமா கண்டுபிடிக்கப்பட்ட மூவாயிரம் மருந்துகளை 2010ல பயன்பாட்டுக்காக ஒப்புதல் வாங்கியிருக்காங்க. அதுல வெறும் எண்பது மருந்துகள்தான் எதிர்ப்பு மருந்து. மத்தது எல்லாமே புற்றுநோய், இதயத்துக்கான மருந்துகள்தான்... அதாவது உயிர் காக்கும் மருந்துகள்தான்...’’
‘‘பெரியவரே...’’
‘‘உலகளவுல மருந்து பிசினஸ்தான் டாக்டர், பணம் கொழிக்கிற மரம். அதனாலதான் போட்டியை சமாளிக்கவும், டாலர் டாலரா கொள்ளை
யடிக்கவும் ‘மெடிகோ’ தமிழகம் வந்திருக்கு. ‘ரெட் மார்க்கெட்’ல மறைமுகமா இறங்கியிருக்கு. நீங்களே சொல்லுங்க... விஷக் காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்தாங்க. பாதிக்கப்பட்ட நோயாளிகளோட ரத்த மாதிரியை பரிசோதனைக்காக எடுத்தாங்க. ஆனா, ரத்த மாதிரியை வைச்சு காய்ச்சலைத்தானே ஆராயணும்? எதுக்காக நோயாளிகளோட சிறுநீரகம் ஆரோக்கியமா இருக்கான்னு பரிசோதிக்கணும்..?’’
‘‘...’’
‘‘இப்பவாவது நம்பறீங்களா?’’
தன்னையும் அறியாமல் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
‘‘உங்களுக்குள்ளயும் ஏதோ சந்தேகம் வந்ததாலதானே ‘மெடிகோ’ பத்தின ஆராய்ச்சில இறங்கினீங்க? அந்த சந்தேகத்தை நாங்க தீர்த்துட்டோம். ஒரு
வகைல நம்ம ரெண்டு பேரோட நோக்கமும் ஒண்ணுதான். அது, தமிழகத்துக்குள்ள ‘ரெட் மார்க்கெட்’ நுழையாம தடுக்கறது. நாம தனித்தனியா போராடறதுக்கு பதிலா ஏன் சேர்ந்து ‘மெடிகோ’வை எதிர்க்கக் கூடாது..?’’
கேட்ட பெரியவருக்கு பதில் சொல்வதற்காக தேன்மொழி வாயைத் திறந்தாள். அதே நேரம் -ராம் குடியிருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் ஸ்காட் வில்லியம்ஸ் நுழைந்து கொண்டிருந்தான்.
எந்த புத்தகத்தைத் தொட்டதால் பல வௌவால்கள் இறந்தனவோ, எந்த நூலை தான் படித்தால் வேறு மாதிரியாக மாறிவிடுவோம் என்று சில நிமிடங்களுக்கு முன் ஹாரி பார்ட்டரிடம் சூனியக்கார பாட்டி சொன்னாளோ -அந்த ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தின் பக்கங்களுக்குள்தான், தனது சிறகுகள் சிக்கியிருக்கின்றன என்பதைக் கண்டதும் மகேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சி, திகைப்பு... என எல்லாம் கலந்த உணர்ச்சியில் தத்தளித்தான். புக்கை தொட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தொடாவிட்டாலோ அங்கிருந்து செல்லவே முடியாது. சிறகுகள் வசமாக சிக்கியிருக்கின்றன.
என்ன செய்வது என்று அவன் யோசித்தபோது -வௌவால் ஒன்று அந்தப் பக்கம் வந்தது. அதன் காதுகளும், வாயும் ஏதோ ஒரு வௌவாலின் இறகால் மூடியிருந்தன. இப்படியொரு தோற்றத்தில் இதற்கு முன் அந்தக் கோட்டையில் எந்த வௌவாலையும் அவன் கண்டதில்லை. பொதுவாக வௌவால்களுக்கு காதுகள்தான் முக்கியம். ஒலியை வைத்துத்தான், தன் முன்னால் என்ன இருக்கிறது என்பதையே அது கண்டுகொள்ளும். ஒலியை உணரவும், ஒலியை எழுப்பவும் காதுகளும், வாயும் அதற்கு அவசியம் தேவை.
அப்படியிருக்க இந்த வௌவால் எப்படி அந்த இரு உறுப்புகளையும் மூடிக் கொண்டு எதன் மீதும் மோதாமல் பறக்கிறது? ஏதோ ரகசியம் இருக்க வேண்டும். அது என்ன என்று தெரிந்துக் கொண்டால், ஒருவேளை, தான் தப்பிக்கவும் வழி கிடைக்கலாம்...முடிவுக்கு வந்த மகேஷ், இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றான். தொங்கினான். அவன் இருந்த பக்கமாகவே அந்த வௌவாலும் வந்தது. அதற்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, அங்கிருந்த மற்ற இறந்த வௌவால்கள் போலவே அவனும் இருந்தான்.
பறந்தபடியே, தன் கால் அலகால் பக்கத்தில் இருப்பதை தடவிக் கொண்டே வந்த அந்த வௌவால், ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்தை நெருங்கியதும் அப்படியே மரப் பாலத்தில் இறங்கி நின்றது.
மகேஷின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அந்த வௌவால் என்ன செய்யப் போகிறது? மூச்சை இழுத்துப் பிடித்தான். மெல்ல மேல் நோக்கிப் பறந்த அந்த வௌவால், கூர்மையான தன் கால் நகத்தால் புத்தகத்தின் நுனியை தொட்டது. அந்த நுனி, பக்கங்கள் பைண்ட் செய்யப்பட்ட பகுதி என்பதைப் பார்த்தான். அதாவது பக்கங்களை புரட்ட முடியாத பகுதி. புரட்டக் கூடிய பகுதியில்தான் அவனது சிறகுகள் சிக்கியிருந்தன.
ஆஹா... இந்த வௌவால் புத்திசாலியாக இருக்கிறதே... பக்கங்களை புரட்டினால்தானே இறக்கும்? அதை தெரிந்து கொண்டு மறுபக்கமாகத் தொடுகிறதே...
எந்தப் பகுதியை தன் நகங்களால் தொட்டதோ, அந்தப் பகுதியின் மேற்புறமாக அப்படியே தன் நகத்தை கொண்டு சென்றது. இறந்த வௌவால் ஒன்றின் வாய்க்குள்தான் அந்த நூல் அழுத்தமாக சொருகப்பட்டிருந்தது. அந்த இடத்தை அடைந்ததும் சற்று நிதானித்தது. அதன் பின்னர் அந்தக் காரியத்தை செய்தது.
அந்த செயல்தான் ஃபீனிக்ஸ் பறவையாக இருந்த மகேஷை பழையபடி சிறுவனாகவும் மாற்றியது... இளமாறன் சிறை வைக்கப்பட்ட அறையில், அவனது உடையை அணிந்தபடி பூரண மயக்கத்துடன் படுத்திருந்த தன் தந்தையை கண்டதும் யவன ராணி ஸ்தம்பித்து நின்றாள். அதே நேரம் புகார் துறை முகத்தை நோக்கி பீப்பாய்கள் சென்று கொண்டிருந்தன. அதற்குள் இளமாறனும், பாண்டிய இளவரசரும் பாதுகாப்பாக மறைந்திருந்தார்கள்...‘‘மாமா...’’
‘‘என்ன?’’ ‘‘தத்துவம் என்றால் என்ன?’’
துரியோதனன் அப்படி கேட்டதும் கடகடவென்று சிரித்தார் சகுனி.
‘‘எதற்காக சிரிக்கிறீர்கள் மாமா?’’
‘‘கேள்வி அரைகுறையாக இருக்கிறது துரியோதனா...’’
‘‘அப்படியானால் முழுமையான வினா எது?’’
‘‘இன்று தத்துவம் என்றால் என்ன...’’
‘‘ஓ... ‘இன்று’வை அவசியம் சேர்க்க வேண்டுமா?’’
‘‘ஆம் துரியோதனா. எப்போதும் இருக்கும் உண்மை என்று எதுவுமில்லை. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப உண்மைகளும் மாறும்... அதனோடு தொடர்புடைய தத்துவங்களும் மாறும்...’’
‘‘ஆனால், வரலாறு திரும்பும் என்கிறார்களே..?’’
‘‘முட்டாள்களின் கூற்று அது. வரலாறு என்பதே ஒரு கற் பிதம்தான். நிறைய அறுந்த இழைகளைக் கொண்டது அது. எந்தவொரு தர்க்கமும் இல்லாமலேயே பலமுறை புது முடிச்சுகள் போடப்பட்டு, அறுந்த இழைகள் இணைக்கப்பட்டு, புது வரலாறு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சொல்லாடல் அல்லது பழக்கம் அல்லது நடத்தை எங்கு தொடங்கியது என்பதை அறிவதால் இன்று அவை எப்படி பயன் படுத்தப்படுகின்றன என்பதை விளக்க முடியாது. அதேபோல் இன்று என்ன இருக்கிறது என்பதை வைத்து தொடக்கத்தில் இருந்த சொல்லாடல் அல்லது பழக்கம் அல்லது நடத்தை எப்படி இருந்தன என்றும் விளக்க முடியாது...’’
‘‘இத்தனைக்கும் அப்பால் மனிதனின் சிறப்பியல்பு என்று எதைச் சொல்லலாம்?’’
‘‘ஒரு சூழ்நிலையைக் கடந்து அதற்கு அப்பால் செல்வதும், தான் என்னவாக ஆக்கப்பட்டுள்ளானோ அதிலிருந்து தன்னை உருவாக்கிக் கொள்வதில் வெற்றியடைவதும்தான் மனிதனின் சிறப்பியல்பே அடங்கியிருக்கிறது...’’
‘‘இதற்கு ஈடுபாடு அவசிய
மல்லவா?’’
‘‘ஆம்...’’
‘‘அப்படியானால் ஈடுபாடு என்றால் என்ன?’’
‘‘மனித வாழ்வில் அறிவற்ற, அறமற்ற போக்குகளை பார்க்கிறோம். அவற்றுக்கு எதிராக செயல்பட வேண்டியது மனிதனின் கடமை. இல்லாவிட்டால் உலகில் தீமைதான் வெற்றி பெறும். இறப்பு நமக்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. நாம் செய்யக் கூடிய மிகச் சிறந்த முயற்சிகள் கூட இறுதி யில் ஒன்றுமில்லாமல் போகக் கூடும். என்றாலும் முயற்சிகளை நாம் கைவிடக் கூடாது... இதைதான் ஈடுபாடு என்கிறார்கள்...’’
‘‘இதற்கெல்லாம் இருத்தல் அவசியமல்லவா?’’
‘‘ஆம். அவசியம். எது இருத்தல்? பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிந்துவிடுகிறது மனிதனின் வாழ்க்கை. அப்படியிருக்க இன்னும் முடிந்துவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையே ‘இருத்தலியல்’ என்கிறோம். இந்த ‘இருத்தல்’, ‘இறத்தல்’ என்ற முடிவுடனேயே முழுமை பெறுகிறது. எனவே ‘இருத்தல்’ என்பது மனித வாழ்க்கையை பொதுவாக குறிப்பிடவில்லை. முற்றுப் பெறாமல் வாழ்க்கை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதையே குறிக்கிறது...’’
‘‘குழப்புகிறீர்களே மாமா...’’
‘‘ஒரு குழப்பமும் இல்லை. பொருள்களும், வாழ்க்கையும் ஏன் இருக்கின்றன என்பதற்கு உறுதியான காரணங்கள் ஏதும் இல்லை. அவை ஏன் அப்படி யிருக்கின்றன, ஏன் இப்படி இல்லை... என்பதற்கான விளக்கத்தையும் நம்மால் சொல்ல முடியாது. நாமும் அப்படித்தான். புவிக் கோளம் தற்செயலாக தோன்றிய ஒன்று. மனித சமுதாயம் சுயேச்சையானது. எனவே இப்போது இருப்பதுபோல் எப்போதும் அது இருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.
அதை மாற்றுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. உலகில் நமக்குள்ள நிலையை ஒன்று ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இந்த பிரபஞ்சம் நம்மை பற்றி கவலைப் படாமல் இருக்கிறது. நமது செயல்களை குறித்த அக்கறை இந்த பேரண்டத்துக்கு இல்லை. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் ஒரே மாதிரிதான் சூரியன் காய்கிறது. மழை பொழிகிறது. நாம் புற உலகின் அங்கமாக இருக்கலாம்.
சூழல்களால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கூட்டத்தில் வசிக்கலாம். ஆனால், அதிலிருந்து எதை நாம் கைகூடிவர செய்திருக்கிறோம் என்பது முக்கியம். அப்போது தான் இருத்தலுக்குரிய அச
லான மனிதர்களாக வாழ்வோம். அதாவது, நமக்கான உலகில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் என்ன செய்யவில்லை என்பது! ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால் மனிதன் என்பவன் இப்போது என்னவாக இல்லையோ அதுதான்... என்னவாக உள்ளானோ அது அல்ல...’’
சொல்லி முடித்த சகுனி, கண்களை மூடிக் கொண்டார். கவுரவர்களை பழிவாங்கும்படி இறப்பதற்கு முன் தன் தந்தை தன்னிடம் வாங்கிய சத்தியத்தை நினைத்துக் கொண்டார்.
ஆக்ரோஷத்துடன் கண்களைத் திறந்தார். ‘‘வா துரியோதனா... ஆட்டத்தைத் தொடரலாம்...’’ என்றபடி தாயத்தை தன் கைகளில் பரபரவென தேய்த்தவர் அதை தரையில் வீசினார்.
சிதறியது தாயம் மட்டுமல்ல... கவுரவர்களின் எதிர்காலமும்தான்...
‘‘தலைவர் ரொம்ப குழப்பத்துல இருக்கார் போல...’’
‘‘எப்படிச் சொல்றீங்க..?’’ ‘‘கூட்டணி சரியா அமையலைன்னு தேர்தலை ஒத்தி வைக்கச் சொல்றாரே!’’
‘‘இந்த வருஷம் சம்மர் லீவுக்கு ஏன் டூர் போகலை..?’’
‘‘தேர்தல் வருது... பணம் கொடுக்க வர்றவங்க ஏமாந்துடக் கூடாதுன்னுதான்..!’’
‘‘தலைவர் தந்திரமா பெண்களைக் கவர்றார் பாருங்க...’’
‘‘எப்படி?’’
‘‘நாளைக்கு ஒளிபரப்பாகப் போற மெகா தொடரோட கதையை இன்னைக்கே சொல்றாரே!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.
(தொடரும்)
கே.என்.சிவராமன்