வி.சிவாஜி
‘‘ஏங்க, உங்க தெருவுல தண்ணி சரியா வரலேன்னா அங்கேயே போராட்டம் பண்ண வேண்டியதுதானே? எதுக்கு ஹைவேல வந்து சாலை மறியல் பண்றீங்க?’’ - தேங்கி நின்ற டிராபிக்கில் ஒருவர் எரிச்சலாகிக் கேட்டார். ‘‘எங்க வீட்டு வாசலில் நின்னு கத்தினா யார் வருவாங்க? இப்படி மறியல் பண்ணினாதான் அதிகாரிங்க வருவாங்க!’’ - கூட்டத்தில் ஒருவர் சொல்லி முடிக்கவில்லை. ஒரு ஜீப்பில் நாலு அதிகாரிகள் வந்து இறங்கினார்கள்.
வந்தவர்கள் யாருடனோ மொபைலில் பேசிவிட்டு, ‘‘இன்னும் அரை மணி நேரத்தில் உங்க ஏரியாவுக்கு ரெண்டு தண்ணி லாரி வந்துடும். தயவுசெஞ்சி மறியலை நிறுத்துங்க!’’ கெஞ்சினார்கள்.
எல்லோரும் விலக, வாகனங்கள் போகத் துவங்கின. ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. ஆனாலும் தண்ணீர் லாரிகள் வந்த பாடில்லை. பொறுமை இழந்த மக்கள் மீண்டும் அதிகாரிகளை முற்றுகை இட்டார்கள். அதிகாரிகள் மறுபடியும் மொபைலில் யாருடனோ பேசிவிட்டு வந்தார்கள்.
‘‘இப்படி அடிக்கடி சாலை மறியல் பண்ணறதாலே எங்கேயும் சரியான நேரத்துக்கு போய்ச் சேர முடியலைன்னு இப்ப பொதுமக்கள் டூவீலர், காரையெல்லாம் குறுக்கே நிப்பாட்டி மறியல் பண்ணறாங்களாம். அதுல நம்ம தண்ணி லாரி வர முடியாம நிக்குது... கிளியர் பண்ணணும்!’’ - ஜீப்பில் ஏறிப் பறந்தார்கள்.