கவிதைக்காரர்கள் வீதி



*ஆலாய்ப் பறந்து
அனுமதி கேட்கிறது காதோரம்
ரத்தம் குடிக்க
கொசு

*சிறு பிதுங்கலோ
சற்றுப் பின்வாங்குதலோ
இன்றி
நேர்கோட்டில் பயணிக்கும்
மழைக்காலச் சிற்றெறும்புகள்
உணர்த்துகின்றன
இடம்பெயர்தலின் வலியை...

*அனைவரையும் ஆசீர்வதிக்கிறது
சங்கிலியால்
கால்கள் பிணைக்கப்பட்ட
கோயில் யானை

*நிறைவேறாத
வேண்டுதல்களாகவும்
நிறைவேற
வேண்டியவைகளாகவும்
கிடக்கின்றன உண்டியலினுள்
காணிக்கைகள்

*யாரும் வந்து கேட்கவே இல்லை
இருப்பினும்
அடித்துச் சொல்கிறது மணியை
ஒவ்வொரு மணி நேரமும்
சுவர்க் கடிகாரம்

*எளிமையாய்
எடை போட்டுக்
காட்டி விடுகிறது
எவரையும் ஒற்றை
நாணயத்தில்
எடை பார்க்கும் இயந்திரம்

*தோலுரித்துக்
காட்டிக் கொள்கிறது
தன் குணத்தைத் தானே...
பாம்பு

*கா... கா... எனக்
கரைந்து கதறியது காகம்
கடன் கொடுத்தவர்தான்
வந்தார் காலையிலே

மகிவனி