எனக்குக் கேட்கும்படி மிக சப்தமாக நீ என்னை அழைக்கிறாய்; உனக்குத் தெரியாமல் மிக ரகசியமாக நான் உன்னிடம் வருகிறேன்!
- பாபா மொழி
காசிராம் வழக்கம் போல பாபாவிடம் வந்து தன் பணப்பையைக் கொடுத்தான்.
‘‘காசி... இன்று எனக்குப் பணம் தேவைப்
படுகிறது’’ - பாபா கம்பீரத்துடன் சொன்னார்.
‘‘அப்படியானால் எடுத்துக்கொள்ளுங்கள் பாபா. பணப்பையை உங்களிடம் கொடுத்துவிட்டேன். எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்!’’ - அவனுக்கு பாபா கேட்டு வாங்கியது பற்றி ரொம்ப சந்தோஷம். ‘நான் கொடுக்கிறேன்’ என்கிற அகந்தை வேறு!
‘‘எனக்கு எல்லாம் வேண்டும்!’’
‘‘எடுத்துக்கொள்ளுங்கள். நாளை பஜாருக்குப் போனால் இதைவிட இருமடங்கு சம்பாதித்துக் கொண்டுவருகிறேன். நீங்கள் எவ்வளவு கேட்கிறீர்களோ, அவ்வளவு ஆனந்தம் எனக்கு!’’
‘‘மகல்சாபதி, பார்த்தாயா காசியின் பெருந்தன்மையை. எவ்வளவு தாராள குணம், எவ்வளவு பக்தி!’’
பாபா பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு, வெறும் பையைத் திருப்பிக் கொடுத்தார். காசிராமுக்கு சந்தோஷம் மாளவில்லை. பாபாவிற்கு ‘நான்’ ஏதாவது கொடுத்தால், அவர் சந்தோஷத்தோடு வாங்கிக்கொள்கிறார். இரண்டு நாளுக்குள் பணப்பையை நிரப்பிக் கொண்டு வர வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
சாயிபாபா ஒரு மர்மப் புன்னகை பூத்தார். மகல்சாபதியும் மற்றவர்களும் இதைக் கூர்ந்து கவனித்தார்கள்!
தாத்யாவின் டாங்கா வெகு வேகமாகச் சென்றது. இரண்டு குதிரைகள் பூட்டியது. ஒரு குதிரை சாதாரணமானது. இன்னொன்று நல்ல வாட்டசாட்டமாக வளர்ந்த குதிரை. நன்றாக ஓடிக்கொண்டிருந்த டாங்காவில் ஒரு குதிரைக்கு தவறுதலாகக் கால் மாட்டிக்கொண்டதால், டாங்கா நிலைதவறி விழுந்தது. தாத்யா வேகமாகத் தூக்கியெறியப்பட்டான். ‘‘அம்மா, செத்தேன்’’ என்று அலறினான். தோளில் பலத்த அடி. எழுந்து நிற்பதற்கு முயற்சித்தான். தோளிலிருந்து கை வரை எலும்பு முறிந்தது போல் உணர்ந்தான். கண்கள் இருட்டின. பாபா கூறியது அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. அவர் சொன்னதின் உள்ளர்த்தம் புரிந்தது. ஆனால் விபத்து ஏற்பட்டுவிட்டதே? எங்கே பஜார்? எப்படி கோபர்காவ் போவது?
எப்படியோ சமாளித்து உட்கார்ந்தான். ‘பாபா, நீங்கள் சொன்னதை நான் கேட்கவில்லை. கேட்டிருந்தால் நிச்சயம் விபத்து நடந்திருக்காது. நான் ஒரு மந்தபுத்திக்காரன்... அறிவிலி. எனக்கு வேணும் இந்த தண்டனை... அது நடந்துவிட்டது. இனிமேல் இப்படி நடக்கமாட்டேன். பாபா, உங்களுக்குத்தான் என் மேல் எவ்வளவு பிரியம்? என் தாயை உங்களின் தாயாக மதிக்கிறீர்கள். முன்பு உங்களை ‘மாமா’ என்று அழைத்தேன். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். இப்பொழுது ‘பாபா’ என்கிறேன். அதுவும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது! எங்கள் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள். நான்தான் மூர்க்கத்தனமாக நடந்து வாழ்க்கையை வீணாக்குகிறேன். பாபா... என்னை மன்னியுங்கள். மறுபடி நான் இம்மாதிரி அவமானம் செய்ய மாட்டேன்’ என்று இருந்த இடத்திலேயே இரு கைகளையும் கூப்பினான்.
இரண்டு நாட்கள் கழித்து, காசிராம் பணப்பையை பாபாவிடம் கொடுத்து வணங்கினான்.
‘‘காசி... இன்றும் எனக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது!’’ - பாபா கேட்டார். அவர் கண்கள் பளிச்சிட்டன.
‘‘எடுத்துக் கொள்ளுங்கள்... பையே உங்களுக்குத்தான்!’’
பாபா எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டார்.
மறுநாளும் காசிராம் வந்தான்.
‘‘என்ன காசி?’’
‘‘இன்று நான் வியாபாரத்திற்குப் போகவில்லை. நாளை அல்லது மறுநாள் போவேன். பை நிறைய பணம் கொண்டு வந்து தருகிறேன்!’’
‘‘இன்று கொஞ்சம் பணம் வேண்டியிருக்கு. எனவே உன்னை எதிர்பார்த்திருந்தேன். இப்பொழுது உன் பை காலி... பரவாயில்லை!’’
‘‘இல்லை பாபா..’’ என்று எழுந்தான் காசி, ‘‘வணிகனிடமிருந்து கடன் வாங்கி வருகிறேன். எவ்வளவு வேண்டும்?’’
‘‘ஐந்து... பத்து, இருபது... எவ்வளவு சீக்கிரம் கிடைக்குமோ வாங்கி வா!’’ - அவ
சரமாகக் கேட்டார் பாபா.
‘‘இப்பொழுதே கொண்டு வருகிறேன்’’ - உற்சாகத்துடன் காசிராம் சொன்னான். ‘பாபா என்னிடம் பணம் கேட்கிறார். இல்லை என்றா சொல்வது? இது எனக்கு அவமானமாயிற்றே’ என்று நினைத்தவாறே ஓடினான். ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பினான்.
‘‘பாபா... ஐந்து ரூபாய் கிடைத்தது!’’
‘‘பரவாயில்லை. இன்று ஐந்து ரூபாய்க்குள் வேலையை முடிக்கிறேன். நாளைக்கும் கிடைக்குமல்லவா?’’
‘‘கிடைக்கும்!’’
பாபா மர்மப் புன்னகை புரிந்தார்.
காசிராமிடமிருந்து இப்படி வாரா வாரம் பாபா பணம் வாங்கிக் கொண்டார். சிறிது நாளில் ஓர் ஆச்சரியகரமான மாற்றம் நடந்தது. காசிராம் துணி விற்பதற்காக நாலாபக்கமும் உள்ள கடைவீதிகளுக்கு வழக்கமாகப் போய் வந்தான். ஆனால் அவன் வியாபாரம் சரிந்துவந்தது. இதை அவன் அறிந்திருந்தான்.
ஒருநாள் ஒரு துணிகூட விற்கவில்லை. வெறுங்கையுடன் திரும்பினான். ‘‘பணம் எங்கே?’’ என்று பாபா கேட்டார்.
‘‘என்னிடம் பணம் இல்லை..’’
‘‘யாராவது வியாபாரியிடம் கேட்டு வா!’’
‘‘பாபா, வியாபாரிகளும் இப்போது கொடுப்பதில்லை. ஏற்கனவே எல்லா வியாபாரிகளிடமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கடன் வாங்கி உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்’’ - சக்தி இழந்து சொன்னான் காசிராம்.
‘‘காசிராம், இப்பொழுது என்ன செய்வது?’’ - பாபா பெருமூச்சு விட்டபடி கேட்டார். ‘‘இன்றைக்கு ஒரு நெருக்கடி, பணம் கட்டாயமாக வேண்டும். வேறு யார் எனக்குக் கொடுப்பார்கள்? கொடுப்பவன் நீதான். உன்னால் முடிந்த அளவு பணம் கொடுத்தாய். கொடுக்கும் பலம் உன்னிடம்தான் இருக்கிறது. இந்த பக்கீருக்கு நீதான் உற்ற துணை!’’
‘அப்படியானால்... நான்... என்னுடைய... நான்... நான்... நான்... அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நான் யார்? பாபாவின் முன் நான் வெறும் தூசு. பாபாவே சக்தி மிகுந்த ஒரு யோகி! சாயி என்றால் சாட்சாத் கடவுள். இந்தக் கடவுளுக்கு என்னால் கொடுத்துக் கட்டுப்படியாகுமா? யாருடைய கண் பார்வை பட்டால் மண் பொன்னாகுமோ, அவருக்கா நான் கொடுப்பது?
‘அடக்கடவுளே, எவ்வளவு பயங்கரம்? அகங்காரம் என்னும் மலைப்பாம்பு என்னை விழுங்க இருந்ததே! அதில் மாட்டிக் கொண்டு நான் தவித்த தவிப்பினால், என் ஆத்மசக்தி முழுவதும் ஒடுங்கிவிட்டதே. பாபாவின் மீதுள்ள அளவற்ற பக்திதான் என்னைக் காப்பாற்றியது!’
‘‘பாபா, என்னை மன்னியுங்கள்... என்னுடைய தவறு என்னவென்று புரிந்தது. உங்களுக்குக் கொடுக்க நான் யார்? இந்த உலகமே உங்களுடையது. கடல் தண்ணீரை உள்ளங்கையில் எடுத்து, அதைக் கடலுக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது! என்னை மன்னியுங்கள்!’’ என்றபடி பாபாவின் பாதங்களில் விழுந்து அழுதான். பாபா அவன் மனச்சுமை தீர அழவிட்டார். பிறகு அவன் சிரசில் கை வைத்து, ‘‘எழுந்திரு காசி... என் அருகில் இப்படி உட்கார்’’ என்றார்.
காசிராம் எழுந்து உட்கார்ந்தான். கண்களைத் துடைத்துக்கொண்டான். ‘‘பாபா... உண்மையில் நான் தப்பு செய்துவிட்டேன்!’’
‘‘காசி... நீ என்னுடைய செல்லம். ஆனால் வெகுளி. நடுநடுவே தப்பு செய்கிறாய். ஒன்றை நினைவில் வை. கடவுளின் கருணை இல்லாவிட்டால், நீர், காற்று, சூரியன் இப்படி ஒன்றும் இயங்காது. எல்லா கிரியைகளையும் இயக்கும் தந்தை அவன்! நாம் யார்? இயற்கையானது எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் இயங்குவது எப்படி? அதற்குப் பணம் கொடுக்க நாம் யார்?
கொடுக்கும்போது பரந்த மனதுடன் கொடுக்கணும். வலது கையால் தானம் கொடுப்பது இடது கைக்குக்கூட தெரியக்கூடாது. அடுத்த கணமே அதை மறந்துவிட வேண்டும். மோட்சத்திற்குத் தடையாக இருப்பது அகங்காரம்! இதை உன்னிடமிருந்து நீக்காவிட்டால், அந்தக் குற்றம் என்னைத்தான் சேரும். இப்பொழுது உன் மனம் தூய்மை அடைந்தது. நீ அமைதியாக இரு. எல்லாம் சரியாகும். அல்லா உனக்கு நன்மை புரிவார்!’’
காசிராம் இதைக் கேட்டுத் தலையசைத்தான். ‘‘பாபா, நான் வேறு ஏதாவது குற்றம் செய்திருந்தால் சொல்லுங்கள்... என்னை மாற்றிக் கொள்கிறேன்!’’
‘‘காசிராம், மனிதன் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கணும். எல்லா வித மோகத்தையும் விட வேண்டும். எறும்புகளுக்கு சர்க்கரை போடுவது நல்லதுதான். ஆனால் அதற்காக சர்க்கரைமேல் எப்பொழுதும் மோகம் கொள்வது நல்லதல்ல. நிதானித்து நடக்கணும். மனிதனுக்கு சில சமயம் கெட்டவை தோணும்... என்மேல் நம்பிக்கை வை, தெளிந்த மனத்துடன் இரு!’’ என்று சொல்லி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார் பாபா.
அவருடைய பார்வை எங்கோ தீர்க்கமாக இருந்தது. எதிர்காலத்தைத் தேடிச் சென்றதுபோல் அது காணப்பட்டது.
பாபாவின் கீர்த்தி நாளுக்குநாள் நாலாபக்கமும் பரவியது. மக்களின் கூட்டமும் அவரைக் காண பெருகி வந்தது. சாதாரண நபர்களைத் தவிர, பிரசித்தி பெற்ற யோகிகளும் சன்னியாசிகளும்கூட ஷீரடியை நோக்கி வந்தனர். வெவ்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்களும் பாபாவின் தரிசனத்திற்காக வந்தார்கள். சிலருக்கு தீராத நோய்களிலிருந்து விடுதலை கொடுத்தார். மனவேதனைகளையும் அகற்றினார். பெரும் பாரத்துடன் வந்தவர்கள், தங்கள் சுமையை ஷீரடியில் இறக்கி, லேசான மனதுடன் திரும்பினார்கள்.
பாபா என்றால் எல்லா விதத்திலும் கற்பகவிருட்சம் எனும்படி இருந்தார். இந்த கற்பக விருட்சத்தின் நிழலில் தங்குவதற்காக எல்லோரும் துடித்தார்கள். எட்டாத உயரத்தில் ஒளிமயமாக உட்கார்ந்துகொண்டு, மனித வாழ்க்கையில் நேரும் அவலங்களைத் துடைக்கும் வழிகாட்டியாக பாபா விளங்கினார். அவர் காட்டிய ஆன்மிகப் பாதையும் சொன்ன நல்ல விஷயங்களும் மனிதனை உய்வித்தன.
காசிராம் நாவூர் கிராம சந்தைக்கு துணி வியாபாரத்திற்குச் சென்றான். நாள் முழுக்க வியாபாரம். பிறகு துணி மூட்டையுடன் தன் குதிரை வண்டியில் ஷீரடிக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். தன் நிலையை எண்ணிப் பார்த்துக்கொண்டே வந்தான். பாபா அவனுடைய அகந்தையை அகற்றினார். அவருடைய அருளால் சிறுகச் சிறுகக் கடன்களை அடைத்தான்.
மாலை வேளை. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அவனுடைய குதிரை மந்த நடையில் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று அக்கம்பக்கத்திலிருந்த புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த திருடர்கள் சாலையில் வந்து நின்று, எல்லா வண்டிகளையும் மறித்தார்கள். அவர்கள் கைகளில் பளபளக்கும் பட்டாக் கத்தி!
இதைக் கண்டு காசிராமும், அவனுக்கு முன்னால் சென்ற வண்டியில் இருந்தவர்களும் திடுக்கிட்டார்கள். காசிராமின் வண்டிதான் கடைசி. முன் வண்டியிலிருந்த பெண்கள், குழந்தைகள், வயசானவர்கள் எல்லோரும் கத்தினார்கள். ஆனால் திருடர்கள் விடுவதாக இல்லை. கத்தியைக் காட்டி பயமுறுத்தி, நகை, பணம் எல்லாவற்றையும் பறித்தார்கள். பெண்கள் போட்டிருந்த நகைகளை வலுக்கட்டாயமாக இழுத்தார்கள். ஆண்களை அடித்தார்கள். எல்லாம் முடிந்ததும் கடைசி வண்டியிலிருந்த காசிராமை ஒரே அடி கொடுத்து, மண்ணில் தள்ளினார்கள்.
அவனுடைய துணிமூட்டையையும் அருகிலிருந்த பணப்பையையும் எடுத்துக்கொண்டார்கள்.
கீழே விழுந்த காசிராம் சுதாரித்துக் கொண்டு நின்று அக்கம்பக்கம் பார்த்தான். அதற்குள் ஒரு திருடன் காசிராமை சோதனையிட்டபோது ஒரு சின்னப் பை கிடைத்தது. அதை அவனிடமிருந்து பிடுங்கினான். அதை எதிர்த்தான் காசிராம். அவனுடைய எதிர்ப்பைக் கண்டு திருடனுக்கு இன்னும் சந்தேகம் வலுத்தது. ‘பணப் பையையும் துணி மூட்டைகளையும் அபகரித்தபோது தடுக்காதவன், ஏன் ஒரு சிறு பைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறான்? இதில் விலைமதிக்க முடியாத தங்கம், வைரம், வைடூரியக் கற்களை ஒளித்து வைத்திருக்கிறானோ... பார்க்கலாம்!’ என்று எண்ணி, பையைத் திறந்து பார்த்தால், உள்ளே வெறும் ஒரு பிடி சர்க்கரைதான் இருந்தது!
ஜானகிதாஸ் சொன்னபடி, எறும்புகளுக்கு சர்க்கரை போடுகிற விரதத்தைப் பேணிக் காப்பதற்காக எப்பொழுதும் சர்க்கரையை தன்னோடு எடுத்துக் கொண்டுவந்தான் காசிராம். அந்தத் துணிப்பையைத் தன் உயிரைப்போல் பாதுகாத்தான். எனவே, திருடர்கள் அதைப் பிடுங்கியதும் எதிர்த்தான்!
அக்கம்பக்கம் பார்த்தான். ஒரு திருடனின் கத்தி அருகில் கிடந்தது. மின்னல் வேகத்தில் பாய்ந்து அதை எடுத்தான். அதைக் கையில் பிடித்து வெறித்தனமாகப் பாய்ந்தான். திருடர்களுடன் சண்டையிட்டு மயக்கமடையச் செய்தான்.
அந்த வேளையில்...
கடல் தண்ணீரை உள்ளங்கையில் எடுத்து, அதைக் கடலுக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிடுவது எவ்வளவு
முட்டாள்தனமானது!
பெரும் பாரத்துடன் வந்தவர்கள், தங்கள் சுமையை ஷீரடியில் இறக்கி, லேசான மனதுடன் திரும்பினார்கள்.
(தொடரும்...)