மாற்றம்





கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருப்புறம்பியம். சக்தி பொருந்திய சித்தர்களின் பூமியான இந்த குட்டி கிராமத்தில்தான் பிரளயம் காத்த விநாயகர் குடியிருக்கிறார். இந்த கிராமத்துக்கு இன்னொரு அடையாளமும் உண்டு. சாக்பீஸ். எந்த திசையில் திரும்பினாலும் சாக்பீஸ் குவியல்கள். மாவைக் கலக்குவதும், அச்சில் ஊற்றுவதும், பெட்டியில் அடுக்குவதுமாக பரபரப்பாக இயங்குகிறார்கள் மக்கள். இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சாக்பீஸ் அனுப்பப்படுகிறது.

தமிழகத்தில் மிகவும் அருகி வரும் தொழில்களில் ஒன்றாக மாறியிருக்கிறது சாக்பீஸ் தொழில். குடிசைத் தொழிலாக நடந்து வந்த இத்தொழிலை இயந்திரத் தொழில்நுட்பம் அழித்து, ஆக்கிரமித்து விட்டது. திருப்புறம்பியம் உள்ளிட்ட சில கிராமங்கள் மட்டுமே இன்னும் குடிசைத்தொழிலாக இதைச் செய்து வருகின்றன.



‘‘ஒரு காலத்துல உக்கார நேரமில்லாம விவசாயம் செஞ்சுக்கிட்டிருந்த ஊர்கள் இதெல்லாம். கடந்த 15 வருஷமா விவசாயம் கைவிட்டுப் போச்சு. அதனால பலபேர் இப்போ இந்த தொழிலுக்கு வந்துட்டாங்க. திருப்புறம்பியம் மட்டுமில்லாம கொட்டையூர், நாச்சியார்கோவில், தாராசுரம், அய்யம்பேட்டை பகுதிகள்லயும் இந்த தொழில் நடக்குது...’’ என்கிறார் திருப்புறம்பியத்தில் சாக்பீஸ் பட்டறை நடத்தும் முத்து. சிறிய கூரைக்கொட்டகை. நான்கைந்து வாளிகள். ஆறேழு அச்சுகள். அட்டைப் பெட்டிகள்... அவ்வளவுதான். பட்டறை பரபரப்பாக இயங்குகிறது. கடந்த மூன்று வருடங்களாக இத்
தொழிலைச் செய்கிறார் முத்து. 2 பேர் வேலை செய்கிறார்கள். ஒருநாளைக்கு 500 பெட்டிகள் தயாரிக்கிறார்.

சாக்பீஸ் தொழிலை திருப்புறம்பியத்துக்குக் கொண்டு வந்தவர் நடராஜன். இப்போது பெரிய அளவில் தொழில் செய்கிறார். 10க்கும் மேற்பட்டவர்கள் இவரிடம் வேலை செய்கிறார்கள். ‘‘எங்க அப்பா ஓரளவுக்கு நிலபுலம் வச்சு விவசாயம்தான் செஞ்சுக்கிட்டிருந்தார். நானும் டிகிரி முடிச்சுட்டு அப்பாவுக்கு உதவியா இருந்தேன். விவசாயத்துல போட்ட காசை எடுக்கிறதே சிரமமாயிடுச்சு. அதனால, வேற ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போ கும்பகோணத்துல சில பேர் சாக்பீஸ் தொழிலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க. அவங்களைப் பாத்து ‘தொழிலைக் கத்துக்
கொடுங்க’ன்னு கேட்டேன். யாரும் சேத்துக்கல.



அப்போ மத்திய அரசோட ஒரு பயிற்சி மையத்துல சாக்பீஸ் தயாரிக்க பயிற்சி கொடுத்தாங்க. அதுல சேந்தேன். பயிற்சி முடிஞ்சதும் சின்ன அளவுல ஆரம்பிச்சேன். இன்னைக்கு பல நூறு பேர் இந்தத் தொழிலுக்கு வந்திருக்காங்க. பல நிறுவனங்கள், எங்க ஊர்ல தயாராகுற சாக்பீஸ்களை கொள்முதல் பண்ணி அவங்க பிராண்டை ஒட்டி இந்தியா முழுக்க விற்பனை செஞ்சுக்கிட்டிருக்காங்க...’’ என்கிறார் நடராஜன்.

சாக்பீஸின் மூலப்பொருள் ஜிப்சம். உப்பளங்களில் உப்போடு சேர்ந்து விளையும் இந்த ஜிப்சம், பற்களைப் போன்ற வடிவத்தில் இருக்கும். இதை பாத்தி ஓரங்களில் வாரிக் கொட்டி விடுவார்கள். அதோடு சுண்ணாம்புக் கல் மாவையும் சேர்த்துதான் சாக்பீஸ் தயாரிக்கிறார்கள்.

‘‘இன்னைக்கு ரெடிமேடா மாவு கிடைக்குது. நான் தொழில் ஆரம்பிச்ச புதுசுல தூத்துக்குடி உப்பளங்கள்ல இருந்து ஜிப்சத்தை இறக்குவேன். உடுமலைப்பேட்டை வட்டாரத்துல உள்ள குவாரிகள்ல பாறைக்கு நடுவில சுண்ணாம்புக் கல்லு ஒதுங்கும். அதையும் வாங்கி ரெண்டையும் தண்ணியில நல்லா அலசி காய வச்சு இருப்பு வச்சுக்குவோம். தேவையான அளவுக்கு ரெண்டையும் சேத்து சூடு பண்ணி, தண்ணியில கலந்துக்கணும். 

325 கிராம் மாவுக்கு 225 மில்லி தண்ணி... இந்தக் கலவை கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் சாக்பீஸ் உடைஞ்சிடும். எழுதும்போது நுணுங்கி கொட்டிடும். இந்தக் கரைசலை அச்சுகள்ல ஊத்தணும். கும்பகோணத்துல உள்ள கார்பென்டர்கள்கிட்ட சொன்னா அச்சுகள் செஞ்சு தருவாங்க.

அச்சுல வெறுமனே மாவை ஊத்தினா கட்டையில ஒட்டிக்கும். அதுக்குன்னு ஒரு ஆயில் இருக்கு. 1 லிட்டர் மண்ணெண்ணெயில 50 மில்லி முந்திரி ஆயிலைக் கலந்து கலக்கி வச்சுக்குவோம். ஒவ்வொரு ஈடு இறக்கும்போதும் கட்டையில இந்த ஆயிலைத் தடவிக்கணும். அப்பதான் ஒட்டாது. உருண்டை ஷேப்ல வரும். அச்சுல மாவை ஊத்தி மேல்பகுதியை ஒரு கத்தியை வச்சு ஃபினிஷ் பண்ணணும். ஒவ்வொருத்தரும் ஆறு அச்சுகளை வரிசையா வச்சுக்கிட்டு மாவை ஊத்துவாங்க. ரெண்டு நிமிஷம் பொறுத்து ஒவ்வொரு அச்சா கழட்டினா ஈரமான நிலையில சாக்பீஸ் வந்திடும். ரெண்டு நாள் வெயில்ல காய வைச்சுட்டு எடுத்து பெட்டியில அடுக்கிடலாம்...’’ என்கிறார் நடராஜன்.

கலர் சாக்பீஸ் தேவையென்றால், மாவில் சேர்க்கும் தண்ணீரில் கலர் பேஸ்ட்டை கலந்துகொள்கிறார்கள். ஊதா, வயலட், ஆரஞ்ச், சிவப்பு, காவி, பச்சை நிற சாக்பீஸ்கள் கிடைக்கின்றன.
அச்சு வார்ப்பது ஆண்களுக்கான வேலை. காய வைத்து பெட்டியில் அடுக்கும் பணியை பெண்கள் செய்கிறார்கள். 100 சாக்பீஸ்கள் அடங்கிய ஒரு பெட்டியை கும்பகோணம் வியாபாரிகள் 10 ரூபாய்க்கு வாங்கி வினியோகிக்கிறார்கள். வெளி மார்க்கெட்டில் 35 ரூபாய் வரை விற்கிறது.

அண்மைக்காலமாக இந்தத்தொழில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மூலப்பொருள் விலையேற்றத்துக்குத் தகுந்தவாறு உற்பத்திக்கு விலை கிடைக்கவில்லை. போதாக்குறைக்கு சீனாவும், கொரியாவும் தங்கள் தயாரிப்புகளை இங்கே கொட்டி இந்த கிராமியத் தொழிலை அழித்துக் கொண்டிருக்கின்றன. சிலேட்டு, பென்சில் விற்பனை செய்யும் நிறுவனங்கள் சீன, கொரிய சாக்பீஸ்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்கிறார்கள். சற்று நவீன தயாரிப்பாக இருப்பதால் பெரும்பாலான பள்ளிகள் அந்த சாக்பீஸ்களையே விரும்புகின்றன.

முன்பு சாக்பீஸ் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் அரசு மண்ணெண்ணெய் வழங்கியது. இப்போது அதையும் நிறுத்தி விட்டார்கள். உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உதவிகள் செய்து உற்சாகப்படுத்தி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டிய அரசு, செய்த உதவிகளையும் நிறுத்திவிட்டு வழக்கம் போலவே இறக்குமதிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. ரூபாயின் மதிப்பைப் போலவே சாக்பீஸ் தொழிலும் தேய்ந்து வருகிறது.

- வெ.நீலகண்டன்
படங்கள்:
சி.எஸ்.ஆறுமுகம்