என்திறமைக்கு இங்கேகளமில்லை! : சந்திப்பு





‘நல்லா நடிக்கக்கூடிய பொண்ணு’ எனப் பெயர் வாங்கியிருந்தாலும் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் இனியா. ஒரு போட்டோ ஷூட்டில் கண்ணில் சிக்கியவரின் நிமிடங்களை லபக்கினோம்.

‘‘என்னாச்சு இனியா... ஆளையே காணோம்?’’

‘‘நான் எங்கேயும் போகல. இப்போ, தமிழில் ‘நுகம்’, ‘ஈர்ப்பு’னு ரெண்டு படம் முடிச்சிருக்கேன். ‘ஈர்ப்பு’ படம் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இன்னும் சில கதைகள் கேட்டிருக்கேன். எதுவும் முடிவாகலை. நல்ல கேரக்டர்களா பண்ணணும்ங்கறதுக்காகத்தான் வெயிட் பண்றேன். நினைக்கிறது ஒண்ணா இருந்தா, நடக்குறது வேறயா இருக்கு... நான் என்ன செய்றது?’’

‘‘போன் செய்தா எடுக்க மாட்டார்னு உங்க மேல புகார் வருதே? மணிரத்னம், பாரதிராஜா படங்கள் அதனால்தான் மிஸ் ஆயிடுச்சா?’’

‘‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க. ஏதாவது முக்கியமான வேலை இருந்தா போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடுவேன். மணிரத்னம் ‘கடல்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டப்போ, வேறொரு படத்தோட கால்ஷீட் கிராஸ் ஆனதால் நடிக்க முடியல. ‘அன்னக்கொடி’யை நான் மிஸ் பண்ணல. ஷூட்டிங் போற கடைசி நேரத்தில் என்னோட கேரக்டரை பாரதிராஜா சார் எடுத்திட்டார். நடந்தது இதுதான்!’’

‘‘தொட்டதுக்கெல்லாம் காசு கேக்குறீங்களாமே?’’

‘‘நடிக்கிறதுக்கு சம்பளம் கேட்டா தப்பா. பத்திரிகை பேட்டிக்கு காசு கேட்கிறதாகூட எழுதினாங்க. அதுவும் உண்மையில்ல. சின்ன வயசிலிருந்து நடிச்சிட்டு வர்றேன். ‘வாகைசூட வா’ மாதிரி பல மடங்கு நடிப்புத் திறனை தர முடியிற எனக்கு, அதை வெளிப்படுத்தற கதை அமையல. என்னோட ராசி அப்படின்னு நினைக்கிறேன். ‘கண் பேசும் வார்த்தைகள்’ படத்தில் கிளாமராவும் பண்ண முடியும்னு நிரூபிச்சிருக்கேன். இதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும்?’’

‘‘சினிமாவைத் தவிர வேறென்ன தெரியும்?’’

‘‘ஸ்கூல் படிக்கும்போதிருந்தே நான் பேட்மின்டன் பிளேயர். நிறைய கப்பெல்லாம் வாங்கியிருக்கேன். இப்போதான் டச் விட்டுப் போச்சு!’’

நடிப்பிலும் டச் விட்டுடாம பார்த்துக்குங்க!

- அமலன்
அட்டை மற்றும் ஸ்பெஷல் படங்கள்: முத்துக்குமார்
நன்றி: ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ்