எல்லா சாலைகளும் வாங்கடே மைதானம் நோக்கி எனும் அளவுக்கு குலுங்கப் போகிறது மும்பை. சாதனை நாயகன் சச்சினின் கடைசி டெஸ்ட் என்றால் சும்மாவா? ஆம்... கால் நூற்றாண்டு காலமாக உழைத்துக் களைத்த ரன் மெஷின் 200வது சோதனையுடன் ஓயப் போகிறது.
இந்த ஓய்வு அறிவிப்புக்காக ஒரு கூட்டம் ஆவலோடு காத்திருந்தாலும், தென் ஆப்ரிக்கா சென்று ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் இருந்திருக்கிறார் சச்சின். சாம்பியன்ஸ் லீக் டி20 பைனலில், வாட்சனின் துல்லியமான யார்க்கர் பிரம்மாஸ்திரத்தை சமாளிக்க முடியாமல் கிளீன் போல்டான அந்த நொடியில், ‘போதும்’ என்று இதயம் சொல்ல, கஷ்டப்பட்டு மனதை தயார்படுத்தி இருக்கிறார்.
‘சொந்த மண்ணில் 200வது டெஸ்ட்டுடன் விடைபெறுகிறேன்’ என்று கனத்த மனதோடு வாரியத்துக்கு அவர் கடிதம் அனுப்பிய செய்தி வெளியானபோது, ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றாலும், அமிதாப் கூறியபடி ‘ரசிகர்களின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றுதான் போனது’.
டெஸ்ட், ஒரு நாள் போட்டி ரன் குவிப்பில் முதலிடம், சர்வதேசப் போட்டிகளில் 100 சதம், அங்கீகரிக்கப்பட்ட ஆட்டங்களில் 50 ஆயிரம் ரன், அதிகபட்ச ஆட்டநாயகன் விருதுகள்... இப்படி சச்சினின் சாதனை சரித்திரத்துக்காக தனி புத்தகமே போட வேண்டியிருக்கும். உலக அளவில் இந்திய அணி மீது தனி மரியாதையை ஏற்படுத்திய மாவீரன். அவரது மட்டை பிரயோகத்தை நினைக்கும்போதே மட்டையாகிப் போன பவுலர்கள் ஏராளம்.
உலகக் கோப்பை, நம்பர் 1 டெஸ்ட் அணியில் அங்கம் வகித்த பெருமை, ஒரே ஆண்டில் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பை என்று எல்லா பெருமையும் கை கூடியது அந்த மகத்தான வீரனுக்குக் கிடைத்த பொருத்தமான கௌரவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தாய்நாட்டுக்காக ஒரே ஒரு டி20ல் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பதிலேயே, இளைஞர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தார் என்ற குற்றச்சாட்டு தவிடுபொடியாகிப் போகிறது. 2011 உலகக் கோப்பை போட்டியிலும் ரன் குவிப்பில் 2வது இடம் பிடித்திருக்கிறார். கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரது தரத்துக்கான ஆட்டம் நிச்சயம் மிஸ்ஸிங். 16 வயது சிறுவனாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. ‘‘எனக்கு 40 வயது ஆகும்போது சச்சினைப் போல முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும்’’ என்ற விராத் கோஹ்லியின் விருப்பமே, சச்சினின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான அத்தாட்சி.
இங்கிலாந்து, ஆஸி. மீடியா கூட வரிந்துகட்டி புகழாரம் சூட்டி வருகின்றன. பிரபலங்கள் எல்லாம் கனத்த இதயங்களோடு ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
கிரிக்கெட் வாரியம் செய்த ஒரே நல்ல காரியம், சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் பிரியாவிடை பெற ஏற்பாடு செய்ததுதான். வெரி வெரி ஸ்பெஷல் லட்சுமணனையும் பெருஞ்சுவர் டிராவிட்டையும் விரக்தியோடு விடைபெற வைத்தது போல கிரிக்கெட் கடவுளையும் கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சத்துக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள்.
நவம்பர் மாதம் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீபாவளித் திருவிழாதான். ‘பிராட்மேன் போல கடைசி இன்னிங்சில் முட்டை போடுவாரா... இல்லை சதமடித்து அசத்துவாரா’ என்று இப்போதே பெட்டிங் ஆரம்பித்துவிட்டதாம்!
இந்த நிலையிலும் அவரது பிராண்ட் வேல்யூ கொஞ்சம்கூட குறையவில்லை. ஓய்வுக்குப் பிறகு விளம்பர வருமானம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். லண்டன் மிகப் பிடித்தமான ஊர் என்பதால், இங்கிலாந்து சென்று கவுன்ட்டி கிளப் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடலாமா? என்றும் யோசித்து வருகிறாராம். அங்கே எந்தவித நெருக்கடியும் இல்லாமல் விளையாடலாம். விம்பிள்டன் போட்டியைப் பார்த்து ரசிக்கலாம். குடும்பத்தோடு டூர் போன மாதிரியும் இருக்கும் என்று நெருங்கிய வட்டாரத்திடம் ஆலோசித்திருக்கிறார்.
மும்பை இந்தியன்சில் நிர்வாகப் பொறுப்பு, மைக் பிடித்து கருத்து கந்தசாமி ஆவது, பயிற்சியாளர், ஆலோசகர், தேர்வுக் குழு தலைவர்... இப்படி ரிட்டயர்டு வீரர்களுக்கான அத்தனை வேலைவாய்ப்புகளும் அவருக்காகக் கைகட்டி காத்திருக்கின்றன. நமக்கு அவரது ஆட்டங்களின் ஹைலைட்ஸ் தொகுப்பு போதும். இதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்!
ஈடன் கார்டனும் வாங்கடே மைதானமும் இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன. மும்பை திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. லாரா, ரிச்சர்ட்ஸ், பான்டிங், வார்ன், பாய்காட், அக்ரம் என்று அத்தனை முன்னாள் நட்சத்திரங்களுக்கும் சிறப்பு அழைப்பு. ஒட்டுமொத்த பாலிவுட் பட்டாளமும் பல்க் புக்கிங்கில் இறங்கியிருக்கிறதாம். கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி ஒரு டெஸ்ட் போட்டி இதுவரை நடந்ததில்லை... இனி நடக்கப்போவதும் இல்லை எனும் அளவுக்கு இருக்கும் என்கிறார்கள். எல்லாம் முடியும்போது கண்களில் கண்ணீர் மட்டம் அபாய அளவைத் தாண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.
- பா.சங்கர்