குட்டிச்சுவர் சிந்தனைகள்
இந்த வாரம் தீபாவளி ஸ்பெஷல்... அடுத்த வாரம், தீபாவளியே ஸ்பெஷல். ஆனா, என்னிக்குமே காதல்தான் சார் ஸ்பெஷல். அப்பேர்ப்பட்ட காதலைப் பத்தி பொதுமக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு நடுத்தெருவுல நின்னு கேட்டோம்...
மாநகராட்சி ஊழியர் மாதேஷ்: சார், காதலுங்கிறது பாதாள சாக்கடை மாதிரி! கவனமா இறங்கினா திரும்பி வரலாம்; கனவு கண்டுக்கிட்டே இறங்கினா காவுதான். ஒரே வித்தியாசம், பாதாள சாக்கடைல இறங்குறதுக்கு முன்னால சரக்கடிக்கணும்; காதல்ல இறங்கி ஏறுனதுக்கு அப்புறம் சரக்கடிக்கணும்.
பூ விற்கும் பத்மா: சாமி, காதலிங்கிறவ பூ மாதிரி. அது, கனகாம்பரம் மாதிரி கும்பலா இருக்கக் கூடாது, ரோஜா போல ஒத்தையா வரணும். சாமி, அந்த காதலிங்கிற பூவ கைல சுத்திக்கிறவன் கேடி... கழுத்துல போட்டுக்கிறவன் டெட் பாடி சாமி, டெட் பாடி!
மல்லிகா டீச்சர்: காதல் என்பது கணக்குப் பாடம் மாதிரி! இங்க புரிதல்தான் முக்கியம். மத்ததைப் போல மனப்பாடம் பண்ண முடியாது. காதல், கணக்கு - ரெண்டிலும் பிராப்ளம் உண்டு. ஒரு ஸ்டெப் தப்பானாலும், ரெண்டுலயுமே ஆன்சர் கிடைக்காது.
லேடீஸ் டெய்லர் ராஜேந்திரன்: காதல் என்பது ஜாக்கெட் மாதிரி சார். அது பெண்களுக்கான பிரத்யேக மேட்டர். பல ஆண்களுக்கு அதன் மகத்துவமே தெரியாது. ஜாக்கெட்டோட ஜன்னல் உணர்த்துவதுதான் காதலோட சுதந்திரம். ஜாக்கெட் எப்படி மூணு பீஸ் துணியால ஆயிருக்கோ, அது போல மோதல், ஊடல், சாடல்னு காதலும் மூணு பீஸ். காதலோ, ஜாக்கெட்டோ... ஒரு பொண்ண திருப்திப்படுத்தவே முடியாது சார். அவங்களுக்கு ஆல்டரேஷன் இருந்துக்கிட்டேதான் இருக்கும்.
கந்துவட்டி கணேசன்: இங்க பாருங்க, காதல் என்பது கடன் மாதிரி. ‘எப்படா கணக்கு முடியும்’னு நம்மள பாடாய்ப்படுத்தும். வாங்க வேணாம்னும் தோணும், ஆனா வாங்காம வாழ்க்கை நடத்தவும் முடியாது. உலகத்துல கடனும் காதலும் இல்லாதவன் எங்க இருக்கான்? ஆனா ஒண்ணு பாஸ், கடன்ல வட்டி வளரலாம். ஆனா காதலி வயித்துல குழந்தை குட்டி மட்டும் வளர்ந்திடக் கூடாது. அப்புறம் என்கிட்டே கடன் வாங்கித்தான் குடும்பம் நடத்தணும்.
டீக்கடை திவ்யேஷ்: காதலுங்கிறது நம்ம கடை டீ மாதிரிண்ணே. மொத டிகாஷன் போடுறப்ப நல்லாத்தான் இருக்கும், ஆனா போகப் போக நிறம், சுவை, திடம் குறைஞ்ச மாதிரி ஆயிடும். அதுக்கு அன்புங்கிற டீத்தூள சேர்க்கலாமே தவிர, டீ சரியில்லன்னு கம்பெனிய மாத்திடக் கூடாது. அண்ணே, நல்ல காதலுங்கிறது கழுவுன டம்ளர்ல போட்ட டீ மாதிரி, கள்ளக்காதல் என்பது கழுவாத டம்ளர்ல போட்ட டீ மாதிரி!
கான்ஸ்டபிள் கந்தசாமி: காதலுங்கிறது கஞ்சி போட்ட காக்கிச்சட்டை மாதிரி சும்மா கம்பீரமா இருக்கணும். காஞ்சு போன கதர் சட்டை மாதிரி குழைஞ்சு இருக்கக்கூடாது. பார்க்கிறவங்களுக்கு மரியாதை வரணும்.
எஞ்சினியர் இளங்கோ: சார், காதல் ஒரு மேம்பாலம். கல்யாணம் என்கிற ஊருக்குப் போக பாலத்த குறுக்கு வழியா பயன்படுத்தலாமே தவிர, அதுக்கு அடியிலயே பட்டறைய போட்டுடக் கூடாது. என்னிக்கும் பாலத்து மேல நாம ஏறலாம், ஆனா பாலம் நம்ம மேல விழுந்துடக்கூடாது.
சைக்கிள் கடை செல்லபாண்டி: சார், காதல் ஒரு சைக்கிள். பேலன்ஸ் பண்ணி ஓட்டத் தெரிஞ்சவன் ஓட்டிட்டு போவான். பேலன்ஸ் பண்ணத் தெரியாதவன் உருட்டிக்கிட்டு போவான். கார் மாதிரி ஆள் போட்டு ஓட்ட முடியாது. நாமளேதான் ஓட்டணும். சார், காதல் சைக்கிள்ள டபுள்ஸ் போறது தப்பில்ல சார், ஆனா இடமிருக்கேன்னு ட்ரிபிள்ஸ் போறது ரொம்ப தப்பு.
துணிக்கடை திவாகர்: சார், காதல் என்பது ஜீன்ஸ் பேன்ட் போல சார். சில பேரு இடுப்பு சைஸு பத்தலைன்னு, புடிச்சிருந்தாகூட வாங்காம போயிடுறாங்க. பல பேரு சைஸு கரெக்டா இருக்கோ, இல்லையோ... போட்டுக்கிட்டு திரியறாங்க. ஆனா ஒண்ணு சார், இந்த உலகத்துல எல்லார் கிட்டயும் கண்டிப்பா ஒரு ஜீன்ஸாவது இருக்கும் சார்... இருக்கணும் சார்.
மிலிட்டரி ஹோட்டல் முனியப்பன்: அய்யா, காதல் என்பது புரோட்டா மாதிரி. நாட்டுல ஒரு நாளைக்கு லட்சக்கணக்குல புரோட்டா தயாராவுது. எல்லா புரோட்டாவும் ஒரே மாதிரி இருக்கு. புரோட்டா விக்கிற நானே இது உடம்புக்கு கெடுதல்னு சொல்றேன். ஆனா, எவன் கேக்கறான்?
மளிகைக்கடை அண்ணாச்சி: ஏ... காதலுன்றது துணி துவைக்கிற சோப்புலே. ஏ... அது ஆரம்பத்துல வாசமா இருக்கும்லே. ஆனா, நாளாக நாளாக தேய்ஞ்சு மோசமா போயிடும்லே. சோப்பு கூட துணிய கிழிக்காதுலே, ஆனா இவீங்க எல்லாத்தையும் கிழிச்சுடுறாங்கலே. யாரும் அழுக்கு சோப்ப போட்டு குளிக்க மாட்டாங்கலே, கல்யாணங்கிறதுதான் குளிக்கிற சோப்புலே.
விவசாயி வேலுசாமி: அய்யா, கல்யாணம் மட்டுமில்லங்க, காதல் கூட ஆயிரம் காலத்து பயிருங்க. சரியா வளர்க்காட்டி காய்ஞ்சு போயிடுங்க; வேலி போடாட்டி மாடு மேய்ஞ்சுட்டு போயிடுங்க.
டூவீலர் மெக்கானிக் சுரேஷ்: காதலுங்கிறது ஒரு டூவீலர் பிரதர். புதுசா இருக்கிறப்போ தர்ற மைலேஜ் போகப் போக லேசா குறையும். ஆனா, டைமுக்கு சர்வீஸ் பண்ணிட்டா எல்லாம் கூல் பிரதர். ஆனா இந்தக் காலத்துல ரொம்ப சொகுசான வண்டிய சூஸ் பண்ணுனீங்கன்னா, பெட்ரோல் செலவு பர்ஸ பதம் பார்த்திடும், ஜாக்கிரதை!
மொபைல் கடை முருகன்: காதல் என்பது செல்போன் போல ப்ரோ. மார்க்கெட்ல புதுசு புதுசா மாடல்ஸ் வந்துக்கிட்டுத்தான் இருக்கும். அதுக்காக நாம வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கக்கூடாது. புடிச்சிருக்கா, வாங்கிடணும். தேவையான வரை யூஸ் பண்ணிட்டு, அதை விட புது மாடல் வரும்போது மாத்திக்கலாம். ஆனா டபுள் சிம்கார்ட் மொபைல்ல மட்டும் கவனம் வேணும் ப்ரோ. மெயின்டெயின் பண்றது கஷ்டம்!
ஜவுளிக்கடை சேல்ஸ் கேர்ள் ஜமுனா: காதல்ங்கறது எங்க கடை புடவை மாதிரி சார். எடுக்கிறவங்களுக்கு புடிக்கணும், மேட்சிங்காவும் இருக்கணும். தேடி எடுக்க எவ்வளவு நேரம் வேணா ஆகலாம்... ஆனா, எடுத்துட்டு மறுநாள் திருப்பிக் கொடுக்கிற மாதிரி ஆயிடக் கூடாது. இன்னொரு ரகசியம் சொல்லட்டா சார்... புடவைய எவ்வளவு அடிச்சாலும் துவைச்சாலும் சாயம் போகக்கூடாது, கிழியக் கூடாது.
ஆம்புலன்ஸ் டிரைவர் ஆரோக்கியசாமி: என்னைப் பொறுத்தவரை காதல் என்பது உயிர் போற மேட்டர் சார். நமக்குப் புடிச்ச பொண்ணப் பார்த்தாலே, மனசுக்குள்ள ஒரு சைரன் அடிக்கும். எப்படி ‘ஆம்புலன்ஸ்’ என்பதை கண்ணாடியில பாக்குற மாதிரி தலைகீழா எழுதி இருப்போமோ, அது போல காதலும் நம்மள தலைகீழா மாத்திடும் சார்.
டாக்டர் தனபால்: எந்த தடுப்பு ஊசி போட்டாலும் தாக்குற காய்ச்சல்தான் சார், இந்தக் காதல். எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாது. ஆனா, கண்டிப்பா எல்லோருக்குமே வரும். மலேரியா மாதிரி எப்பவாவது வந்தா ஓகே... சளி, காய்ச்சல் மாதிரி மாசம் ஒன் டைம் வரக்கூடாது. எங்க ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுறவங்க ரெண்டு வகை - சுகர் பேஷன்ட், ஃபிகர் பேஷன்ட்.
|