‘‘என்ன தம்பி... அதுக்குள்ள இலைய மூடிட்டீங்க. நல்லா சாப்பிடுங்க தம்பி. கரிசலாங்கண்ணி கண்ணுக்கு நல்லது. இன்னும் கொஞ்சம் போடறேன். ரசம் விடவா? இன்னும் ஒரு பிடி சாதம் வைக்கறேன்’’ என அந்தப் பெரியவர் வாஞ்சையுடன் உபசரிக்கும்போதெல்லாம் எந்த பேச்சிலருக்கும் பெற்றவளின் முகம் மனதில் மின்னி மறையும்.
‘‘தெரியாத ஊருல, நல்ல சாப்பாடு கூடக் கிடைக்காம கஷ்டப்படுறோமே!’’ என வாடும் கிராமத்து இளைஞர்கள் சென்னை முழுக்க உண்டு. அவர்களில் பலருக்கு பசியாற்றும் கிராமத்து அன்னை மடிதான் வள்ளலார் மெஸ்!
சென்னை-மயிலாப்பூரில் காரணீஸ்வரர் கோயில் அருகே ஒரு வயசான கட்டிடம். ‘அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சைவ உணவகம்’ என ஒரு பெயர்ப் பலகை, நீலம் வெளுத்து வளைந்திருக்கிறது. ஒருவர் மட்டுமே நுழையக் கூடிய வழியின் நீட்சியாய் படிக்கட்டுகள். சமாளித்து ஏறிச் சென்றால், வாய் நிறைய சிரிப்புடன் வரவேற்கிறார் சத்தியநாதன். இரண்டே டேபிள்கள்... நாற்புறச் சுவர்களிலும் வள்ளலார் படம் மற்றும் பொன்மொழிகள். எலக்ட்ரிக் சான்ட்டரில் ‘அருட்பெருஞ்சோதி’ எப்போதும் ஒலிக்கிறது. ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய சமையலறையில் சிரமப்பட்டு அமர்ந்து கொத்துமல்லித் தழை கிள்ளிக் கொண்டிருக்கிறார் சத்தியநாதனின் மனைவி ஜெயந்தி. ஓர் ஒண்டுக்குடித்தன வீடே மெஸ்ஸாக அரிதாரம் பூசிக் கொண்டது போல் இருக்கிறது ஏரியா.
‘‘ஆச்சுங்க 64 வயசு. சொந்த ஊரு மாமல்லபுரம். சின்ன வயசுல கலைகள்ல ஆர்வம் அதிகம். பி.ஏ பொருளாதாரம் படிச்சி முடிச்சதும் அறநிலையத்துறையில உத்தியோகம். அப்பா, ஜெயந்திய கல்யாணம் செஞ்சு வச்சார். ரெண்டு பசங்க. நல்லபடியா குடும்பம் நகர்ந்துச்சு. ஏதோ, ஒரு வேகம்... வேலையை விட்டுட்டு, தஞ்சாவூர் பெயின்டிங், கிளாஸ் ஓவியம்னு தொழிலைத் திருப்பிக்கிட்டேன்.
அந்த நேரத்துல வள்ளலார் பக்தரா ஒரு நண்பர் அறிமுகமானார். வள்ளலாரின் வார்த்தைகள்ல நான் மூழ்கிப் போனது அவராலதான். அடிக்கடி அன்னதானம் செய்யும் திருப்பணிக்கும் என்னை அவர் அழைச்சிக்கிட்டுப் போவார். ஏழைக்கு சோறு போடும் அந்தத் தொண்டு எனக்குப் பிடிச்சிப் போச்சு’’ சத்தியநாதன் சொல்ல, கணவரை கவனித்துக் கொண்டிருக்கிறார் ஜெயந்தி.
‘‘அன்னதானம் செய்யற அளவுக்கெல்லாம் எனக்குத் தகுதி இல்ல... நீங்களே நல்லா செய்யிங்கனு அந்த நண்பரை ஊக்கப்படுத்தினேன். அவர் வியாபாரத்தை விரிவு பண்ண என் சக்திக்கு மீறி பணமும் கைமாத்தா கொடுத்தேன். ஆனா, நல்ல விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்துறவங்க எல்லாம் நல்லவங்களா இருப்பாங்கனு சொல்ல முடியாதே! அந்த நண்பர் அவ்வளவு பணத்தையும் ஏமாத்திட்டார். இருபது வருஷத்துக்கு முன்னால... அப்பவே 3 லட்சத்தை இழந்துட்டேன்.
நாலா பக்கமும் கடன். சாகக் கூட நினைச்சேன். ஆனா, வள்ளலார் தற்கொலையை கடுமையா எதிர்க்கிறார். என்னதான் வழின்னு மானசீகமா வள்ளலார் காலையே கெட்டியா பிடிச்சிக்கிட்டு அழுதேன். ‘சாப்பாடு போட தகுதி இல்லைனு நீ என்னடா முடிவு பண்றது? நான் சொல்றேன்... போடு! ’ன்னு அவரே சொல்ற மாதிரி தோணிச்சு. இருந்த வீட்டையே மெஸ்ஸா மாத்திட்டேன்’’ - மென்மையாகப் பேசும் சத்தியநாதன், தன் மெஸ் மெனுவிலும் காரசாரத்துக்கு இடம் கொடுப்பதில்லை. சாத்வீக உணவு முறைதான். கரிசலாங்கண்ணி, தூதுவளை, அரைக்கீரை, சிறு கீரை என ஊரில் மட்டுமே சாப்பிட முடியும் அயிட்டங்கள் பேச்சிலர்களுக்கு இங்கே கிடைக்கும்!
‘‘ஊரே 30 ரூபாய்க்கு அளவுச் சாப்பாடு போட்டப்போ, இவர் பத்து ரூபாய்க்கு அன்லிமிட்டட் மீல்ஸ் போட்டாரு. கேட்டா, ‘சாப்பாட்டுக்கு காசு வாங்கறதே பாவம். நாம தொடர்ந்து மக்களுக்கு சாப்பாடு போடணுமேன்னுதான் இந்தக் காச வாங்கறேன்’பார். பிழைக்கத் தெரியாத ஆளுன்னு சொந்தக்காரங்க திட்டும்போது என் மனசு கொதிக்கும். ஆனா வயிறு நிறைய சாப்பிட்டு, ‘ரொம்ப நல்லா இருக்கும்மா’ன்னு சாப்பிட்டவங்க மனம் குளிர்ந்து சொல்லும்போது மனசு அப்படியே பூரிச்சிப் போயிடுது. எம்புள்ளைங்களுக்கு இவரு சொத்து சேர்த்து வச்சிருக்காரோ இல்லையோ, நிறைய புண்ணியத்தைச் சேர்த்து வெச்சிருக்கார்’’ சிரிக்கிறார் ஜெயந்தி.
‘‘இப்ப ஒரு சாப்பாடுக்கு 50 ரூபாய் வாங்கறேன். அன்லிமிட்டட் மீல்ஸ்தான். வேலைக்கு ஆள் வச்சிக்கறதில்ல. அதனால அதிகம் ஆசைப்படுறதும் இல்ல. இதுலயே கடனை எல்லாம் அடைக்க முடிஞ்சுது. எம் பசங்க வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப சனிக்கிழமை தோறும் ராத்திரி 100 பேருக்கு அன்னதானம் செய்யறான் எம் பையன். வாழையடி வாழையாய் இந்த சோறு போடும் வேலை தொடர்ந்து நடந்தா அது போதும் எனக்கு’’ கைகூப்புகிறார் சத்தியநாதன்.
- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்