புத்தகம் சுமக்க வேண்டிய கரங்களில் தீக்குச்சியும் அரிவாளும் ஏன்?





சினேகாவுக்கு 11 வயது. படிப்பது 6ம் வகுப்பு. பள்ளிக்கூட கழிவறையில் தீக்குளித்திருக்கிறார். ஜீவானந்தம் 9ம் வகுப்பு மாணவர். பள்ளி வராண்டாவில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். டேனிஷ், பிச்சைக் கண்ணன், பிரபாகரன்... மூவரும் பொறியியல் மாணவர்கள். தவறான நடவடிக்கையைக் கண்டித்த கல்லூரி முதல்வரை துள்ளத் துடிக்க வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். ‘மாணவர் தேர்தல்’ என்ற பெயரில் ஆயுதம் தரித்து மோதிக் கொள்வதும், ஜென்ம விரோதிகளைப் போல வெட்டிக் கொள்வதும், பேருந்துகளின் மேலேறி ஆடுவதும், சாலையை மறித்து வாகனங்களை உடைப்பதுமாக மாணவர்களின் செயல்பாடுகள் வரம்பு மீறுகின்றன.
கல்வியோடு சேர்த்து கடமை உணர்வையும் கட்டுப்பாட்டையும் கற்பிக்க வேண்டிய கல்விக்கூடங்களில் ரத்தக்கறை படிகின்றன. புத்தகம் சுமக்க வேண்டிய கரங்களில் மண்ணெண்ணெய் கேனையும் ஆயுதங்களையும் சுமக்கத் தூண்டியது எது? விமான நிலையங்களில் பயணிகளைப் பரிசோதித்து அனுப்புவதைப் போல பள்ளிக்குள் நுழையும் முன்பாக புத்தகப் பைகளை சோதனை செய்து அனுப்ப வேண்டிய அவலம் எதனால் ஏற்பட்டது?

‘‘இதற்கு கல்விக்கூடங்களை மட்டும் குறைசொல்வது நியாயமல்ல. சமூக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இங்கும் எதிரொலிக்கின்றன. இது மிகப்பெரிய அபாயத்தின் தொடக்கம். 11 வயது பெண்ணுக்கு தீவைத்து தற்கொலை செய்யும் எண்ணம் எப்படி வந்தது? அதைக் கற்றுத் தந்தது யார்? அப்படி என்ன பிரச்னையை அந்தப் பெண் எதிர்கொண்டாள்? இதன் வேர், பள்ளியோடு நிற்காது. இன்றைக்கு குழந்தைகள் மிகவும் சிக்கலான நிலையில் வளர்கிறார்கள். பிற குழந்தைகளோடு, குடும்பத்தோடு, உறவுகளோடு கலந்து பழகும் வாய்ப்பே அவர்களுக்கு இல்லை. பலரும் குழந்தைகளை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக வளர்க்கிறார்கள்.

கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இருந்தார்கள். இன்று ஆயாக்களின் மடியில் வளர்கின்றன குழந்தைகள். வீடு, பள்ளிக்கூடம், டியூஷன், திரும்பவும் வீடு... வீட்டில் டிவி, கம்ப்யூட்டர் கேம், மொபைல். கொத்தடிமைகளைப் போல குழந்தைகளை அறைக்குள் அடைத்து வளர்க்கிறோம். குழந்தைகளின் விருப்பமறியாமல் நினைத்ததை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதையே சுகமென்று நினைக்கின்றன குழந்தைகள். வெற்றி, தோல்வி, பாராட்டு, திட்டு எல்லாம் சேர்ந்ததே வாழ்க்கை. இதை பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. ஒரு சுடுசொல்லைக் கூட ஜீரணிக்க முடியவில்லை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களின் உளவியல் புரியவில்லை. அந்தக் காலத்தில் ‘கண்ணை மட்டும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் உறிச்செடுங்க’ என்று பிள்ளைகளை ஆசிரியர் கையில் ஒப்படைப்பார்கள் பெற்றோர். இன்று ஆசிரியர்கள் தொட்டாலே போலீஸ், வழக்கு.

ஆனால் இன்றுள்ள ஆசிரியர்கள் கையில் கம்பைத் தருவதும் அபாயமாக இருக்கிறது. கம்பை ஆயுதமாகக் கருதுகிறார்கள். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. நாம் உடனடியாக வகுப்பறையையும், வாழ்க்கையையும் மீள்பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுடைய மனதைப் புரிந்து கொள்ள வேண்டும். கல்வி அவர்களின் இயல்பைச் சிதைக்கக் கூடாது’’ என்கிறார் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்.
திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளைஞர் நலத்துறை இயக்குனராக பணியாற்றியவரும், எழுத்தாளருமான ச.மாடசாமி கல்லூரி மாணவர்களின் போக்கு குறித்து கவலையோடு பேசுகிறார்.
‘‘கல்லூரிகள் இன்று அந்நியோன்யம் இல்லாத இடங்களாகி விட்டன. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மாணவர்களைப் புரிந்து கொள்கிற பக்குவமில்லை. மாணவனின் உளவியல், வருத்தம், கோபம், எதிர்ப்புணர்வு அறிந்து அவனை வசப்படுத்தத் தெரியவில்லை. இதமாகவும், அக்கறையாகவும் நடந்து கொண்டால் மாணவர்கள் உயிரையே கொடுப்பார்கள். தங்களை நேசிக்கும் மனிதர்களை அவர்கள் தேடுகிறார்கள். தோளில் கைபோட்டு, ‘இப்படிச் செய்வது தவறு’ என்றால், வாழ்க்கை முழுவதும் அந்தத் தவறைச் செய்யமாட்டார்கள். ஆசிரியர்களுக்கு மாணவர்களைப் புரிந்து கொள்ளும் வகையில் உளவியல் பயிற்சி வழங்க தனியாக ஒரு அகாடமி தொடங்க வேண்டும். குறைந்தது 3 மாதங்களாவது பயிற்சி அளிக்க வேண்டும். காலத்துக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கல்லூரிப் பருவம் மிகவும் உந்துதலானது. லட்சியங்கள் மீது பிடிப்பு உண்டாக்கக்கூடிய பருவம். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும், ஈழப் போராட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய எழுச்சி அழியாத சரித்திரம். ஆனால் அண்மைக்காலமாக மாணவர்கள் அரசியலற்ற தன்மையோடு வளர்கிறார்கள். அதனால் தவறான திசை நோக்கி மாணவர்கள் செலுத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்ளப்படாதவர்களாக, கவனிக்கப்படாதவர்களாக, கைவிடப்பட்டவர்களாக கல்லூரி மாணவர்கள் உணர்கிறார்கள். இதை ‘மனிதவள விரயம்’ என்று சொல்லலாம். நாட்டின் சக்தி திசைமாறுகிறது.



அந்தக் காலத்தில் கல்லூரி முடிந்ததும் வேலை கிடைக்கும் என்பது உறுதியாக இருந்தது. அதனால் பொறுப்புணர்வோடு படித்தார்கள். இன்று வேலைக்கான உறுதி இல்லை. அதனால் கோபம், விரக்தி அதிகரிக்கிறது. அந்தக் கோபம் ஆசிரியர்கள் மீது திரும்புகிறது. எந்த முன்மாதிரியும் இல்லாததால் தன்னையே முன்மாதிரியாக மாணவன் கருதிக் கொள்கிறான். என்னைப் பொறுத்தவரை, மாணவர்கள் மீதான நிராகரிப்பின் அளவோடு ஒப்பிடுகையில் வன்முறையின் அளவு குறைவு. இதே நிலை நீடித்தால் இன்னும் அதிகரிக்கும். அரசு, ஆசிரியர்கள், பெற்றோர், சமூக அமைப்புகள், முற்போக்கு இயக்கங்கள் அனைவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது’’ என்கிறார் ச.மாடசாமி.

இதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.
‘‘நகரம் இன்று தீவைப் போல செயல்படுகிறது. கிராமங்களில் வீடுகள் தள்ளித் தள்ளி இருக்கும். ஆனால் மனிதர்கள் இணைந்திருப்பார்கள். நகரத்து அபார்ட்மென்ட் கலாசாரத்தில் எதிரெதிரே வீடுகள் இருந்தாலும் ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரியவில்லை. அதனால் குழந்தைகள் தொடர்பற்று வளர்கிறார்கள். பல குடும்பங்களில் அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் சென்று விடுகிறார்கள். அதுபோன்ற நிலையில் குழந்தைகள் அரவணைப்புக்காக ஏங்குகின்றன. பணம்தான் சந்தோஷம் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. குழந்தையின் உண்மையான மகிழ்ச்சி எது என்று பெற்றோருக்குத் தெரியவில்லை. குழந்தையின் உலகம் சுருங்கிவிட்டது. நிறைய தவறான விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிகளிலும் குழந்தைகளைக் கையாளும் திறன்பெற்றவர்கள் இல்லை.
நம் முன்னோர்கள் கட்டிக் காத்து வந்த நெறிமுறைகளை இழந்து விட்டோம். உறவுகள் குலைந்து விட்டன. குழந்தைகளால் மனம்விட்டுப் பேச முடியவில்லை. தோல்வியைத் தாங்க முடியவில்லை. நம் மனதில் அறிவுத்தளம், உணர்வுத்தளம் என்று 2 தளங்கள் உண்டு. டெக்னாலஜி வளர்ச்சி யால் அறிவு நிறைந்திருக்கிறது. ஆனால் உணர்வைக் கையாளத் தெரியவில்லை. கோபத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. இதை ‘எக்ஸ்ட்ரீம் பிஹேவியர்’ என்பார்கள்.



இந்தச் சூழலை மாற்ற முடியும். மாற்றம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். பிள்ளைகளை கரிசனத்தோடு அணுகி, நிறைகுறைகளைப் பேசி, அரவணைத்து, தோள் தட்டிப் பாராட்டி, அன்பு காட்ட வேண்டும். கல்விக்கூடங்கள் வதைக்கூடங்களாக இல்லாமல் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். அவர்களின் உளவியல் புரிந்து வழிகாட்ட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் குற்றங்களுக்கு மாணவர்களைப் பொறுப்பாக்கக் கூடாது. அவர்கள் செய்யும் குற்றங்களுக்கான தண்டனையை நாம் எல்லோரும்தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்கிறார் அசோகன்.
- வெ.நீலகண்டன்