இது வலிகளை மறக்கும் வழி! : சந்திப்பு





 ‘‘நிறைய அவகாசம் எடுத்துக்கிட்டு, என்னை இன்றைய சூழலுக்கு புதுப்பிச்சுக்கிட்டு செய்கிற படம் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’. வாழ்க்கையை அர்த்தப்படுத்துவதற்கு இன்னும் எனக்கு சினிமாதான் ஆதாரம். தீபாவளிக்குப் பிறகுதான் வர்றேன். பெரிய போட்டிகளுடன் வர வேண்டிய படமில்லை இது. எல்லா ரசிகனுக்கும் போய்ச் சேர வேண்டிய படம். ரொம்ப நாள் கழிச்சு இயக்குநரா உயிரையும் உணர்வையும் எரிபொருளா எரிச்சுத் தேடுற, ‘ஜே.கே’யின் வாழ்க்கை இது.’’ ஆழ்ந்து பேசுகிறார் சேரன். தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாதவர்.

‘‘தலைப்பும் வேற விதமா இருக்கே?’’

‘‘நாம் கடந்து வர வேண்டிய தூரமும், பயணங்களும் இன்னும் இருக்கு. நமது நிறைய கேள்விகளுக்கு அடங்க மறுக்குது வாழ்க்கை. நாம் ஒரு திட்டம் போட்டு பட்டியல் போட்டு வச்சா, திருப்பங்களில் வாழ்க்கை ஒடிந்து என்னவோ போலாகிவிடுது. என்னோட நண்பன் பாரதிபாபுன்னு ஒருத்தன். உதவி இயக்குநர். மனைவி, குழந்தைகளோட சினிமாவிற்கான அழகான கற்பனைகளோடு இருந்தான். ஒரு சின்ன அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டு பிணவறையில் படுத்திருந்த அவனைப் பார்த்து அழுதேன். அவன் குடும்பத்திற்கு துணை யாருன்னு யோசிச்சா பயமே மிஞ்சுது. உயிர் எவ்வளவு முக்கியமானது... வாழும் வாழ்க்கையின் பொறுப்புகள் என்ன? வாழ்தல் எப்படிப்பட்டதுன்னு எல்லாத்தையும் ஞாபகப்படுத்தியிருக்கேன். நம்மோட லைஃப்தான். ஒரு தடவை ரீவைண்ட் பண்ணிப் பார்க்கிற முயற்சி!’’

‘‘உங்க படங்கள் ஆழமா, கண்ணீர் வரவழைக்குமே..?’’

‘‘இதில் நிறைய எளிமைப்பட்டிருக்கிறேன். கேமரா, இசை என எல்லாத்திலும் புது ரத்தம் பாய்ச்சியிருக்கேன். சந்தானத்தை ரொம்ப டீசன்ட் காமெடியில் பார்க்கலாம். சினிமா வேற மாதிரி மாறிவிட்டது. முன்னாடி, சென்டிமென்டில் பின்னி எடுக்கணும். இன்னிக்கு, சும்மா கோடிட்டுக் காட்டினால் போதும். ரசிகனுக்கு எல்லாமே புரியுது. எப்பவும் நம்மளைப் புதுப்பிச்சுக்கிட்டு இருந்தால்தான் ஜெயிக்க முடியும்ங்கிற காலம் வந்தாச்சு. அந்த இடத்திற்கு விரும்பியே நானும் வந்திட்டேன். இந்த சேரன், கொஞ்சம் கண்ணீரை குறைச்சு, உணர்வுபூர்வமான எளிமைக்கு வந்துட்டான்.’’



‘‘உங்க வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கூட மாறியிருக்காங்களே..?’’

‘‘கனிவான, களையான முகம் தேவைப்பட்டது. ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த் ஞாபகத்திற்கு வந்தார். அருமையான இளைஞன். சினிமாவின் மீது காதல் இருக்கு. பார்த்துப் பார்த்து படம் செய்கிறார். ‘எப்ப பார்த்தாலும் உங்க ஹீரோக்களோட முறைப்பீங்க... இப்ப, கொஞ்சுறீங்க’ன்னு என் மனைவியே சொன்னார். நானே நிறைய மாறியிருக்கிறேன். சில பிடிவாதங்களைக் கைவிட்டிருக்கிறேன். நித்யா மேனன் மாதிரி ஒரு நடிகையை கொஞ்சம் அரிதாகத்தான் பார்க்க முடியும். பெரிய டைரக்டர்கள் நடிக்க கூப்பிட்டாலும் கேரக்டர் பிடிச்சால்தான் ஓகே சொல்வாங்க. ஆனா, நடிக்கிறதில் ராட்சசி!’’

‘‘உங்க படத்தில் கூட சந்தானம் முக்கியமா போயிட்டாரே..?’’

‘‘அட, என்னங்க... ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக்கொடி கட்டு’ காலத்திலிருந்து எனக்கு காமெடி ரொம்ப இஷ்டம்ங்க. வடிவேலு - பார்த்திபன்னு ஒரு டிரெண்டே ‘துபாய் காமெடி’யால உருவாச்சே! இப்போ எங்கே வெளியே போனாலும் ‘காமெடியை மறந்திட்டீங்களே...’ன்னு எல்லாரும் கேக்குறாங்க. இதில், சந்தானத்திற்கு ரொம்பவும் பொருத்தமா ஒரு கேரக்டர் மனசில் வந்தது. தன்மையான மனுஷனா அதை ஏற்று நடிச்சு சந்தோஷம் தந்தார்!’’

‘‘மகள் பிரச்னையில் காயம் ஆறியாச்சா?’’

‘‘ஒரு பேச்சுக்குச் சொல்றேன்... ஒரு மனுஷன் செத்த பிறகு எவ்வளவு கூட்டம் வரும்னு தெரியாது. வாழ்ந்துட்டுப் போனதற்கான அடையாளத்தை நாம் இருந்து பார்க்க முடியாது. எத்தனை தாய்மார்கள்... என்னை மகன் மாதிரி நினைச்சு ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கப் போறாங்கன்னு பார்க்க முடியாது. ஆனால், எல்லாத்தையும் வேற வடிவத்தில் நான் பார்த்தேன். எவ்வளவு அலைபேசி அழைப்புகள்... வெளிநாடுகளிலிருந்து உருகிக் கசிந்த மனசுகள் எத்தனை! இதற்கெல்லாம் எனக்கு என்ன தகுதி? எல்லாமே என் படங்கள் எனக்குக் கொடுத்த வெகுமதி, மரியாதை. ஹைகோர்ட் வாசலில் விழுந்து வணங்கினேன்னா, அது மானசீகமா என் மக்களுக்கு அளித்த அன்பு. இந்த மக்களுக்கு நான் என்ன செய்யலாம்? அவங்க மனசுக்கு ஆறுதல் தரும்படி நல்ல படங்களை எடுக்கலாம்.


‘ஜே.கே’யில் அதைச் செய்திருக்கேன்!’’

‘‘இந்த அனுபவத்தில் கற்றது..?’’

‘‘எனக்கென்னவோ வாழ்க்கையின் கடைசி நாளில்தான், கத்துக்கிட்டதை சொல்ல முடியும்னு தோணுது. இந்த வாழ்க்கையை புறந்தள்ளவும் முடியலை; வாழ்ந்து பார்க்கவும் கஷ்டமா இருக்கு. யாரை பகைவனா நினைக்கிறோமோ... அவங்க கால்களிலேயே காலம் மண்டியிடச் சொல்லுது. யாரை பக்கத்தில் உட்கார வச்சு அழகு பார்க்கிறோமோ... அவங்களே நெஞ்சில் மிதிக்கிறாங்க. சினிமாவிலும் எனக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடம் கிடைக்கலை. டைரக்டர்களிலும், நடிகர்களிலும் ரெண்டு ரெண்டு ஆட்களா பட்டியல் போட்டதால், அதிலும் நான் இடத்தைத் தவறவிட்டேன். எம்.ஜி.ஆர் - சிவாஜில ஆரம்பிச்சு, சிம்பு - தனுஷ் வரைக்கும் போட்ட பட்டியலில் தொலைந்தவர்களே அதிகம். பீம்சிங் - பந்துலு, பாலசந்தர் - பாரதிராஜா, பாலுமகேந்திரா - மகேந்திரன், பாலா - அமீர்... இதில் தொலைந்து போன இயக்குநர்களில் ஸ்ரீதர் கூட இருக்கிறார். நான் விழாவிற்கு வெளியே நின்னிருக்கேன்; மேடை நடுவில் சீட் போட்டும் உட்கார வச்சிருக்காங்க; அதே மேடையில கடைக்கோடியிலும் இருக்கச் சொல்லியிருக்காங்க. ஆனால், ஒரு நாற்காலியில் மட்டும் தொடர்ந்து உட்காந்திருக்கணும்னு ஆசைப்படுறேன். அது மக்களோட மனசு!’’

- நா.கதிர்வேலன்