ஊர் முழுக்க கூட்டுக்குடும்பம்தான்! : அபூர்வம்



 


இன்னக்கி புள்ளைங்ககிட்ட உங்க குடும்பத்தில இருக்கிறவங்க யார் யாருன்னு கேட்டா அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி... இவ்வளவுதான் சொல்லுறாங்க.
இதுமட்டும்தானா குடும்பம்..?

பெரியப்பா, சித்தப்பா, மாமா, அத்தை, அம்மாவ பெத்த அம்மா அப்பா, அப்பாவ பெத்த அம்மா அப்பா, மச்சான், மாமா பசங்க, அத்தை பசங்க... இப்பிடியெல்லாம் கூட உறவுகள் இருப்பது, ஒரு நல்லது கெட்டது நடக்கும்போதுதான், நமக்கே தெரியுது. இந்த உறவுகள் எல்லாம் இந்தக் காலத்திலும் ஒரே வீட்டுக்குள்ள கூட்டுக் குடும்பமா இருந்தா எப்படி இருக்கும்? அட, ஒரு ஊரு முழுக்க இப்படிப்பட்ட கூட்டுக்குடும்பமா இருந்தா எப்படி இருக்கும்..?
வாங்க போகலாம், சிவகாசி பக்கம் இருக்கிற பூசாரிநாயக்கன்பட்டிக்கு...
சிவகாசியில இருந்து 18 கி.மீ துரத்துல... சாத்தூர் போற வழியில, தாயில் பட்டிக்கு அடுத்ததா இருக்கு பூசாரி நாயக்கன்பட்டி. இந்த ஊருல உள்ளவங்களுக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை ‘தனிக்குடித்தனம்’. இங்க எல்லா வீட்டிலும் கூட்டுக்குடும்பம்தான். ஒவ்வொரு வீட்டுலயும் குறைஞ்சது 30, 40 பேர் சேர்ந்து வாழுறது சுத்துப்பட்டு கிராமங்களுக்கே பெரிய அதிசயம்!
‘‘பூசாரிநாயக்கன்பட்டில 45 குடும்பங்கள் இருக்கு. எல்லாரும் விவசாயிகள்தான். பட்டணத்தோட காத்து படாததால இன்னும் எங்க வழக்கம் அப்படியே இருக்கு!’’னு ஆரம்பிச்சார் ஊர்த்தலைக்கட்டு பெரியவர் ஜக்கய்யா.



‘‘கம்பளத்து நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த எங்களை, கல்கோட்டு மகரிஷி வாக்குப் பெற்று காட்டில் வசிச்ச வம்சம்னு சொல்லுவாங்க. வனத்தில் இருந்த சப்தகன்னிகள் 7 பேர்ல மூத்த கன்னியை மகரிஷி கல்யாணம் பண்ணிக்கிட்டதாவும், மத்த 6 கன்னிகளும் அந்தத் தம்பதியை வாழ்த்தி மங்களம் பாடினாங்கன்னும் ரிஷி வம்சத்தைச் சேர்ந்த எங்க முன்னோர்கள் சொல்லி
யிருக்காங்க. அவங்க சொன்னபடிதான் இன்னிக்கும் இங்க கல்யாணங்கள் நடக்குது. எவ்வளவுதான் வசதியானவங் கன்னாலும், ஊருக்கு வெளிய காட்டுப் பகுதியில குடிசை போட்டுத்தான் கல்யாணம் பண்ணுவாங்க.



பழங்கால வழக்கப்படி எங்க வீட்டுப் பொண்ணுக மேல்சட்டை இல்லாம நூல் சேலைதான் கட்டணும். ஆம்பிளைகளுக்கு வேட்டி மட்டும்தான். காலத்திற்கு ஏத்த மாதிரி இப்ப ஜாக்கெட் போடவும், ஆம்பளைங்க சட்டை போட்டுக்கவும் பழகிட்டாங்க. இருந்தாலும், கல்யாணம், கோயில் திருவிழான்னு விசேஷம் வந்தா பழைய உடுப்புதான்’’ன்னு சொல்லச் சொல்ல அய்யா ஜக்கய்யா முகத்துல ஏக பெருமை!
‘‘உறவுகளுக்குள்ளேயேதான் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறோம். வரதட்சிணை இல்ல. விருப்பப்படி நகை, நட்டு போட்டுக்கலாம். எந்தக் கல்யாணத்தையும் தனியா நடத்த மாட்டோம். ஒவ்வொரு குடும்பத்திலயும் கல்யாணம் பேசி முடிவாச்சின்னா, ஊர்ல எல்லாரும் ஒண்ணு கூடி ஒரே இடத்தில அஞ்சாறு கல்யாணம்னு சேர்த்து நடத்துவோம். கல்யாண விருந்து எல்லாருக்கும் பொதுவா நடக்கும். இதனால செலவு சுருக்கமாகுறதோட, ஊருக்காரங்க அத்தன பேரும் ஒண்ணா சந்திக்கிற சந்தோசம் கிடைக்கும்’’னு சொல்லி கொஞ்சமா பிரேக் விட்டார் ஜக்கய்யா.
இந்த ஊர் கல்யாணங்கள் கிட்டத்தட்ட திருவிழாதான். அன்னிக்கு உறுமி மேளம், தேவராட்டம் நிகழ்ச்சியோட, ‘கல்கோட்டு மகிரிஷி மங்களப்பாட்டு படித்தல்’ ரொம்ப விசேஷமா இருக்கும். ஊருக்குள்ள இருக்குற ஜக்கம்மா கோயில்தான் இவங்க எல்லாருக்கும் குலசாமியாம். ஆனா, தினம் தினம் போற வழக்கம் இல்ல. கார்த்திகை தீபம், மாசி மாச மகாசிவராத்திரினு வருஷத்துல 2 நாள் மட்டும்தான் முள்வேலிய வெட்டி உள்ளே போவாங்களாம். ஜக்கம்மாளுக்கு பொங்கல் படையலிட்டு விடியவிடிய விசேஷம் நடக்குமாம்.



‘‘இங்க தினமுமே திருவிழாதான் தம்பி... பின்னே... அம்மா, அப்பா, அவங்க கூடப்பிறந்தவங்க, அவங்க கூட சம்பந்தம் பண்ணவங்க, பிள்ளைங்க, பேரப்பிள்ளைங்கன்னு ஒவ்வொரு வீட்டுலயும் குறைஞ்சது 40 பேருக்கு தினமும் சமைக்கணுமே! விடியக் காலையில இருந்து இதுக்கு வேலை தொடங்கிரும். ஊர்ல எல்லாருக்கும் ஓரளவு சொந்த நிலம் இருக்கு. அந்த நிலத்தில விளையறதே அந்தந்த குடும்பத்துக்கு போதும். குடும்பமே அதுல இறங்கி வேலை பார்க்கும். அதனால, கூலி ஆள் தேவையில்ல. யார்கிட்டயும் கைகட்டி வேலை செய்யிற அவசியமும் இல்ல. பக்கத்து ஊருகள்ல எல்லாம் பட்டாசு ஆலை, பேப்பர் மில்லுனு ஏதேதோ வந்துருச்சு. ஆனாலும், எங்க ஊருல சுமார் 200 ஏக்கர் நிலத்த இன்னும் விவசாய பூமியாவே வச்சிருக்கோம்!’’ - ஜக்கய்யா தொடர்ந்து பேசப் பேச, நமக்கு ஆச்சரியம் எகிறுது.

‘‘எங்க குடும்பத்துப் பொம்பளைப் பிள்ளைங்க, இப்ப பத்தாவது வரைக்கும் படிக்கிறாங்க. பசங்க 12வது வரைக்கும் படிக்கிறாங்க. ஆனாலும், விவசாயத்துக்கு வந்துடுறாங்க. அஞ்சாறு குடும்பங்கள்ல மட்டும் பெரியவங்க ‘ஜக்கம்மா வாக்கு’னு குறி சொல்லுற வேலை பாக்குறாங்க. நிலம், வீட்டைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே எங்களுக்குக் கிடையாது. அப்படியே போனாலும் கடைகள்ல சாப்பிட மாட்டோம். குடி, சிகரெட்டுன்னு போதை பக்கம் யாருமே போக மாட்டாங்க. நாங்க உண்டு எங்க வாழ்க்கை உண்டு!’’னு கைகூப்பி சந்தோஷமா நம்மை அனுப்பி வச்சார் ஜக்கய்யா.

நாமும் ஒரு காலத்துல இப்படித்தான் கூட்டுக் குடும்பமா இருந்தோம். காசு, பணம், மேல்நாட்டு மோகம், கவர்ச்சியான உடை, நாகரீகம்னு இதையெல்லாம் விட்டு நகரத்துக்கு வந்து கண்டது என்ன? இன்னும் அப்படியே இருக்குற இவங்களைப் பார்த்து ஏக்கப்படுறது தான் மிச்சம்!
- பா.கார்த்திகேயன்

‘‘ஒரே இடத்தில அஞ்சாறு கல்யாணம் சேர்த்து நடத்துவோம். இதனால செலவு சுருக்கமாகுறதோட, ஊரு ஒண்ணு கூடுற சந்தோசம் கிடைக்கும்!’’