கன்னத்தோடு கன்னம்!
கொழுப்பைக் குறைக்கவும் கேன்சர் என்ற உயிர்க்கொல்லி நோயைத் தடுக்கவும் அமரந்த் என்ற தானியத்தை மீட்டெடுத்திருக்கும் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை எப்படிப் பாராட்டினாலும் தகும்! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
‘16 வயதினிலே’ பற்றிய பாரதிராஜாவின் நினைவலைகள் சிலிர்க்க வைத்து விட்டது. நடிப்பில் சிகரம் தொட்ட கமல், ரஜினியின் துவக்க கால எளிமை பிரமிப்பு. - மா.சந்திரசேகர், மேட்டு மகாதானபுரம்.
‘‘மற்றவர்களைப் பாராட்டப் பழகினால்தான் நாம் வளருவோம்! எனக்கு வளர்ந்துட்டே இருக்க ஆசை’’ என்று சொல்லும் இசையமைப்பாளர் இமான், தாராளமாக படங்களில் நடிக்கலாம். இப்போதே பன்ச் டயலாக் வருகிறதே! - முத்தையா தம்பி, சிதம்பரம்.
‘சேர்ந்தே இருப்பது புலமையும் புன்னகையும்’ என்று சொல்லும் விதமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பவா-ஷைலஜா தம்பதியர், எழுத்தாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு! - எஸ்.பிரசன்னகுமார், வேலூர்.
தெலுங்குப் படப் போட்டியில் டூ விட்ட நயன்தாரா - த்ரிஷா, இப்ப பழம் விட்டுக்கொண்ட சேதி படித்து மகிழ்ந்தேன். சமாதானத்தின் அடையாளமாக கன்னத்தோடு கன்னம் வைத்த போட்டோ வெளியிட்டிருக்கலாமே அப்பு! - எஸ்.பால்பாண்டி, சிவகங்கை.
‘‘ரசிகர்கள் கோயில் கட்ற அளவுக்கு இல்லைன்னாலும், அவங்க மனசில் நிலைச்சி நிற்க ஆசை’’ என்று சொல்லியிருக்கும் காஜல் அகர்வால் செம தெளிவு. இந்த தகதக நாயகிக்காக ஒரு தண்ணீர் பந்தலாச்சும் கட்ட மாட்டார்களா தமிழ் ரசிகர்கள்! - மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.
கமலின் படைப்புகள் புத்தகமாக வரப்போவது அவர் ரசிகர்களுக்கும் இலக்கிய ரசிகர்களுக்கும் குட் நியூஸ். அவரது இலக்கியப் படைப்புகளும் ‘விஸ்வரூபம்’ எடுக்க வாழ்த்துகள்! - எஸ்.புவனா, சென்னை-94.
நகரங்களைத் தேடி கிராம மக்கள் ஏன் வருகிறார்கள்? இங்கு எப்படி வாழ்கிறார்கள்? என விவரித்து, குடிசையில் அவர்களை வாழ வைப்பது தேசிய அவமானம் என்று முடித்திருப்பது அருமை! - மா.மாரிமுத்து, ஈரோடு.
‘‘உங்க ஊர்ல ரஜினி, கமல் பெரிய ஸ்டார்களாமே’’ என பிராவோ அப்பாவியாகக் கேட்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. ஆட்டத்தில் பிராவோ பிரபுதேவாவை முந்த முயற்சிக்கட்டும்! - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஷீரடி பாபாவின் புனித சரிதம் தொடர் குங்குமத்துக்கு ‘குங்குமம்’ வைத்தது போன்று இருக்கிறது! அதைத் தொடர்ந்து படிக்கும் ஒவ்வொருவரின் மனமும் தெளிந்த நீரோடையாக பக்குவப்படும் என்பது நிச்சயம்! - கன்யாரி, நாகர்கோவில்.
‘நிழல்களோடு பேசுவோம்’ - மனுஷ்ய புத்திரன் பதில்கள் பகுதி யில் நறுக்குத் தெரிக்கும் பதில்கள் அனைத்தும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. - கே.நிஷா, திருவண்ணாமலை.
|