எப்பவும் நல்லவனையே சினிமா காட்டணுமா? : சந்திப்பு





'ஆஹா... அடுத்த செட் வந்துட்டாங்களே’ என அத்தனை பேரையும் விய(ர்)க்க வைத்தவர்களில் அதிக கவனம் பெறுகிறார் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட பெரிய நடிகர்களின் பட்டியலில் இவர் சைலன்ட் என்ட்ரி. அவரின் நடிப்பு, எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் எகிற, முரட்டு மீசையோடு ‘சங்குதேவனா’கிறார் சேதுபதி. எந்த பிகுவும் இல்லாமல் பேட்டி என்றாலே சேதுபதி ‘ஸ்டார்ட் மியூசிக்’தான்!

‘‘ ‘இ.ஆ.பாலகுமாரா’வில் எப்போதும் சரக்கில் இருக்கிற மாதிரி... கொஞ்சம் அதிகம்தானே!’’

‘‘சுமார் மூஞ்சி குமாருக்கு அந்த குமுதாவை லவ் பண்றது தவிர, வேற வேலையே கிடையாது. அவ அழகா கோலம் போடுறதைப் பார்த்து ரசிக்கிறது, காக்கா வந்து சாப்பிடுற வரைக்கும் குமுதாவுக்கு பசிக்குமேன்னு தானே காக்கா மாதிரி சத்தம் போட்டுட்டு சாப்பிடறது இப்படித்தான் பண்றான். குடிக்கிற சீன்கூட இல்லை. தொட்டுப் பேச மாட்டேன். கேவலமா பேசுகிறது கிடையாது. அதுல எதையும் நான் தப்பா செய்யலை. அவ ‘ஐ லவ் யூ’ சொல்லணும்னு ஆசைப்படுறான். அதுமட்டும் தான் அவனுக்கு லட்சியம். நம்ம சினிமாவால் தப்பு நடக்கக்கூடாதுன்னு எனக்கும் எச்சரிக்கை உணர்வு உண்டு.



எப்பவும் நல்லவனையே சினிமா காட்டிக்கிட்டு இருந்தா, நல்லா இருக்காது சார். கொஞ்சம் கெட்டவங்களையும் காட்டணும். இப்படியும் இருக்காங்கன்னு உஷாரா இருக்க ஜனங்களுக்கு தெரியும். சுமார் மூஞ்சி குமார் சும்மா சிரிப்புக்காக வந்தவன். ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு விதத்தில் ஸ்பெஷல். கோகுல் இந்தக் கதையைச் சொன்னதும் புதுசா இருந்த மாதிரி இருந்தது. அதுதான் செய்தேன். ‘பாலகுமாரா’ காமெடி. அதை சீரியஸா எடுத்துக்காதீங்க.’’

‘‘நல்ல நடிகர்ங்கிற தகுதியை ஒவ்வொரு படத்திலும் காட்டிக்கிட்டே இருங்கீங்களே... எப்படி?’’

‘‘அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. இருந்தால்தானே சொல்றதுக்கு. என்கிட்டே திட்டமிடுவதே கிடையாதுங்க. கதைக்காக ஹோம் ஒர்க், ஹார்டு ஒர்க், எஃபர்ட்னு எதையும் போடுறது கிடையாது. டைரக்டர் கதை சொல்லும்போது கவனமா கேட்பேன். நம்மால செய்ய முடியுமா, கொஞ்சம் புதுசா இருக்கான்னு பார்ப்பேன். அவ்வளவுதான். மத்தபடி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து டைரக்டர் சொல்றதைக் கேட்டு நடிக்கிறது மட்டும்தான். ஏதோ நான் ரொம்ப ஹோம் ஒர்க் பண்ணி நடிக்கிற மாதிரி பட்டால், அதற்கு டைரக்டர்கள்தான் காரணம். ஆனால், நான் அவங்களை ரொம்பவும் நம்புவேன். நான், சுமார் மூஞ்சி குமாராக எடுபட்டதுக்கு காரணம் கோகுல்தான். இத்தனைக்கும் மெட்ராஸ் பாஷைகூட எனக்குத் தெரியாது. ‘அதெல்லாம் முடியும் சார்’னு அவர்தான் சொன்னார். அந்தப் பேச்சு, பார்வை, சிரிப்பு, நடை எல்லாமே எனக்குப் புதுசு. மெட்ராஸ் பாஷை, மைனர்தனம் எல்லாம் அவர் சொல்லிக் கொடுத்தது. நானே இதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நடிச்சிருந்தா பெரிய ஆளுதான். ஆனால் நிஜம் அப்படியில்லையே!’’



‘‘நிறைய படங்கள் செய்றீங்க போலிருக்கே... அது பாதிக்காதா?’’

‘‘அதெல்லாம் கதை கேட்டது. ஒவ்வொண்ணாதான் பண்றேன். இதோ, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினி’யும் முடிச்சிட்டு, ‘சங்குதேவன்’ போறேன். அடுத்து, சீனு ராமசாமி படம் பண்றேன். என்னடா இப்படி பேச்சு கிளம்புதுன்னு கேட்டவரைக்கும் கதைகளை செலக்ட் பண்ணிக்கிட்டு, இப்ப கதையே கேட்கிறதில்லையே. ஒரு சமயம் ஒரு படம்தான். அதுதான் நல்லது எனக்கு.’’
‘‘அடுத்தடுத்த படங்கள் எப்படியிருக்கும்?’’

‘‘ ‘ரம்மி’, எனக்கு ரொம்பப் பிடிச்சுத்தான் பண்ணியிருக்கேன். ரசிகனுக்கும் பிடிக்கும்னு நம்புறேன். டைரக்டர் பாலகிருஷ்ணனோட முதல் படம். ஃபுல் உழைப்பும் இறங்கியிருக்கு. பார்க்கலாம். அப்புறம், ‘பண்ணையாரும் பத்மினியும்’... எங்களோட ஒரு காரும் கேரக்டர் பண்ற படம். இப்ப நடிச்சுக்கிட்டு இருக்கிற ‘சங்குதேவன்’ இருபது வருஷத்திற்கு முன்னாடி நடக்கிற மாதிரி வரும். அதுக்குத்தான் இந்த கடா மீசை!’’



‘‘உங்களை எப்படி அடையாளப்படுத்திக்க நினைக்கறீங்க?’’

‘‘நல்ல நடிகன்னு பெயர் வாங்கினா போதும் சார். இந்த கொஞ்ச தூரம் வர்றதுக்கு பட்ட பாடே ரொம்ப... அதுல அவமானங்கள், எதிர்ப்புகள், அவநம்பிக்கை, நம்பிக்கை, வெளிச்சம் எல்லாமே இருக்கு. நல்ல சினிமா, வித்தியாசமா எல்லாருக்கும் இடம் கொடுத்துத்தான் பண்ண நினைக்கிறேன். எல்லோரும் உழைப்பைக் கொட்டினால்தான் நல்லதா வரும். வெற்றி கிடைச்சா ‘விஜய்சேதுபதி நடிச்சது’ன்னு சொல்றாங்கன்னு, படத்தில் இருக்கிறவங்க வேலை செய்யலைன்னா என்ன ஆவது? ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை கேமராமேன் பிரேம்குமார் தோளிலேயே கேமராவை வச்சு படம் எடுத்தார். அவர் வலி எனக்குத் தெரியும். அதனால், நிதானமா இருந்து மேலே வரலாம்.’’



‘‘அஜித் -விஜய், விக்ரம்-சூர்யா, சிம்பு-தனுஷ் மாதிரி விஜய்சேதுபதி-சிவகார்த்திகேயன்னு ஒரு செட் வந்துவிட்டதாகசொல்லலாமா?’’

‘‘இப்ப இந்த செட் சேர்க்கிறது எல்லாம் சரியா வராது. அதர்வாவை கொண்டு போய் எதுல சேர்ப்பீங்க? இரண்டு, மூணு படங்களில் பின்னி எடுத்தார். ‘பரதேசி’யில் என்னவொரு நடிப்பு. அபாரம் இல்லையா அது! ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தில் சிவகார்த்திகேயன் நல்லா நடிச்சிருந்தாரே! நெஞ்சில் கை வச்சி சொல்லுங்க... ‘அட்டக்கத்தி’யில் தினேஷ் நடிச்சது முதல் படம் மாதிரியா இருந்தது..? விக்ரம்பிரபு ‘கும்கி’யில் அசத்தலா வந்ததைப் பார்த்தீங்களே! கௌதம், ‘கடலி’ல் என்ன அழகா இருந்தார். இவர்களோடு சேர்த்து விஜய் சேதுபதின்னு சொல்லுங்க!’’

- நா.கதிர்வேலன்
படங்கள்: விநாயகம்