ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டி...
அனல் பறக்க சுழன்று வில்லனின் அல்லக்கைகளை பெண்டு நிமிர்த்திக் கொண்டிருந்தார் விஜய். ‘ஜில்லா’வுக்கான ஆக்ஷன் அவதாரத்தில் இருந்த விஜய்யை தொந்தரவு செய்யாமல், இயக்குனர் நேசனை ஓரங்கட்டினோம்...
‘‘சின்ன பொறியா ஆரம்பிச்சது தான் ‘ஜில்லா’ கதைக் கரு. அதுக்குள்ள விஜய், மோகன்லால்னு ரெண்டு சூப்பர்ஸ்டார்கள், சூப்பர் குட் பேனர் தயாரிப்புன்னு இவ்வளவு பெரிசா வளர்ந்து நிற்குது. ‘வேலாயுதம்’ படத்தில் செகண்ட் யூனிட் டைரக்டரா வொர்க் பண்ணினப்போதான் விஜய் அண்ணனோட பழகும் வாய்ப்பு கிடைச்சது. அப்போ அவர்கிட்ட ரெண்டு கதைகள் சொன்னேன். அதில் ஒண்ணுதான் ‘ஜில்லா’. மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட கதை சொல்லிட்டாலும், ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் ‘ஜில்லா’ டைட்டிலைப் பிடிச்சேன்’’ என்ற நேசன், டைட்டில் உருவான கதையைத் தொடங்கினார்.
‘‘எல்லாரும் நினைச்சிட்டிருக்குற மாதிரி ‘ஜில்லா’ன்னா மாவட்டத்தைக் குறிக்கிற பெயர் இல்லை. லொகேஷன் பார்க்கறதுக்காக மதுரைக்கு போயிருந்தப்போ சின்னச்சின்ன பசங்க கும்பலா நின்றுகொண்டு ‘ஜில்லா’ன்னு பெயர் சொல்லி ஒரு பையனைக் கூப்பிட்டாங்க. நான் டக்குன்னு திரும்பிப் பார்த்து, ‘ஜில்லான்னு ஒரு பேரா?’ன்னு கேட்டேன். ‘அந்தப் பையன் தெனாவெட்டான ஆளு சார். அந்த டைப் பசங்கள நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்’னு சொன்னாங்க. எனக்கு அந்தப் பெயர் கேட்சிங்கா தெரிஞ்சது. விஜய் அண்ணன்கிட்ட அதைச் சொன்னப்போ, ‘எல்லாருக்கும் ஈஸியா ரீச் ஆகும்... அதையே வச்சிடுங்க’ன்னு சொன்னார். அடுத்த நிமிஷத்திலிருந்து பாசிட்டிவ் வைப்ரேஷனோட மடமடன்னு மற்ற வேலைகள் ஆரம்பமாச்சு...’’
‘‘அப்போ படத்தில விஜய் கேரக்டர் பெயர்தான் ஜில்லாவா?’’
‘‘ஆமா, பட்டப் பெயரா கூப்பிடுவாங்க. தெனாவெட்டான கேரக்டர்தான். சென்டிமென்ட், காமெடி, ஆக்ஷன்னு விஜய் படத்தில் என்ன எதிர்பார்த்து வருவாங்களோ... அந்த எல்லாம் கலந்த ஒரு நியாயமான படமா உருவாக்கிக்கிட்டு இருக்கோம். இதுக்கு முன்னாடி விஜய்யோட நாலஞ்சு படங்களில் இல்லாத மாதிரியான ஒரு கேரக்டரை விஜய் பண்ணியிருக்கார். விஜய்க்கும் லாலுக்கும் உள்ள உறவு, அதனைச் சுற்றிய விஷயங்கள்தான் கதை. இந்தக் கதை எழுதும்போது மோகன்லால் சார் மனசிலேயே இல்ல. திடீர்னு கதைக்குள்ள மோகன்லால் வந்தா எப்படி இருக்கும்னு தோன்றி, விஜய்கிட்ட ஐடியா கேட்டடேன். ‘நல்ல விஷயமா தெரியுதே... கேட்டுப் பாருங்க’ன்னு கிரீன் சிக்னல் கொடுத்தார். என்ன சொல்வாரோன்னு தயக்கத்தில் லால் சார்கிட்ட கதை சொன்னதும், ‘நான் பண்றேன்’னு அவரும் ரெடி ஆகிட்டார். ரொம்ப ரொம்ப இயல்பான கேரக்டர் அவருக்கு!’’
‘‘விஜய் - காஜல் கெமிஸ்ட்ரி..?’’
‘‘ ‘துப்பாக்கி’ல அவங்களோட காம்பினேஷன் மிகப் பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகியிருந்ததாலதான் மறுபடியும் காஜலைப் பிடிச்சோம். ஜோவியலான ஒரு மதுரைப் பொண்ணா வர்றாங்க. விஜய்க்கும் காஜலுக்குமான லவ் ஏரியாவில் ‘துப்பாக்கி’யை விட ஒரு படி கெமிஸ்ட்ரி தூக்கலாவே இருக்கும். இதோ... ஜப்பான் கிளம்பிக்கிட்டே இருக்கோம். ஒசாகாவில் விஜய் - காஜல் டூயட் பாட்டை எடுக்கப் போறோம். வைரமுத்து அந்தப் பாட்டை இழைச்சிக் கொடுத்திருக்கார். ‘தமிழன்’ படத்துக்குப் பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் இமான். ஜப்பான்ல எடுக்குற பாட்டுங்கறதுனால நம்மூர் புல்லாங்குழல் மாதிரியான ஜப்பான் இசைக்கருவி ஒண்ணைப் பயன்படுத்தி மியூசிக் போட்டிருக்கார். ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. ‘ஆதவன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செஞ்ச கணேஷ், இந்திய அளவில் பெரிய ஆளு. சச்சின் டெண்டுல்கர், அமிதாப்பச்சனோட விளம்பரப் படங்களெல்லாம் பண்ணியவர். அவரோட ஒளிப்பதிவில் ‘ஜில்லா’ புது டோன்ல இருக்கும். பெரிய வீடு செட், பாடல் காட்சிகளுக்கு பிரமாண்டமான அரங்குகள்னு டெக்னிக்கலாவும் ‘ஜில்லா’ ரசிகர்களை திருப்திப்படுத்தும்!’’
‘‘ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், மோகன்லால் எப்படி இருக்காங்க?’’
‘‘ரெண்டு பெரிய ஸ்டார்கள்... ஒரே நேரத்தில் எப்படி இவங்களைக் கையாளப் போறோமோ எனும் பயம் ஆரம்பத்தில் இருந்தது. ஷூட்டிங் கிளம்பினதும் நிஜமான அண்ணன் - தம்பி மாதிரி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து ரொம்ப யதார்த்தமா பழகினதைப் பார்த்து பிரமிச்சிட்டேன். ரெண்டு பேருக்குமான அன்யோன்யத்தை வச்சே இன்னொரு படம் பண்ணலாம் போல இருக்கு.’’
‘‘பன்ச் டயலாக்?’’
‘‘அப்படின்னா..? பன்ச் டயலாக்கெல்லாம் நிச்சயமா இல்லை சார்! கதை என்ன கேட்குதோ அதை மட்டும் செஞ்சிருக்கார் விஜய். புது ஸ்டைல், புது எனர்ஜியோடு பின்னியெடுக்கும் விஜய், யதார்த்தம் மீறாமலும் நடிச்சிருக்கார். சுருக்கமா சொன்னா, ‘ஜில்லா’ இருக்கும் நல்லா!’’ ஐ... பன்ச்சு!
- அமலன்