ஹலோ... ரஜினி பேசறேன்!





ஒரு படம்... ஓஹோன்னு புகழ்... இது ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடையாளம். பாராட்டு மழையில் கரைந்து விடாமல் அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி 90 சதவீத ஷூட்டிங்கை முடித்து சென்னை திரும்பியிருந்தவருடன் ஒரு ‘ஜிகர்தண்டா’ உரையாடல்...
‘‘தலைப்பே ஜில்லடிக்குதே?’’

‘‘நிறைய பேர் ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ன்னு சாப்பாட்டு தலைப்பாவே வைக்கிறீங்களேன்னு கேட்குறாங்க. இதில் எந்த பிளானும் இல்ல. அதுவா அமைஞ்சதுதான். மதுரைன்னாலே மல்லிகைப் பூ, மீனாட்சி கோயில் மாதிரி ஜிகர்தண்டாவும் ஃபேமஸ். ‘ஜிகர்தண்டா’ மதுரையில் நடக்கிற கதை. கதைக்களத்தை குறிக்கிற மாதிரியும் இருக்கும்... அதே சமயம், நீங்க சொன்ன மாதிரி ஜில்லடிக்கிற மாதிரியும் இருக்க ட்டுமேன்னுதான் இந்தத் தலைப்பை வச்சேன். மத்தபடி கதைக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்காது...’’
‘‘அப்படியென்ன கதை?’’

‘‘வெளியூரிலிருந்து மதுரைக்கு வர்ற ஹீரோ சித்தார்த். மதுரையிலேயே பிறந்து வளர்ந்து காலேஜ் படிக்கிறாங்க லட்சுமி மேனன். இவங்களுக்குள்ளே வர்ற காதல்... அதனால் வர்ற பிரச்னைகள்தான் கதை. லவ் ஸ்டோரினு சாதாரணமா சொல்லிட்டுப் போற மாதிரி இல்லாம, ரொம்பப் புதுசா, இப்படி ஒரு ஆங்கிள் இருக்கான்னு சொல்ற மாதிரி மேக்கிங் இருக்கும். ‘பீட்சா’வில் ‘மூடநம்பிக்கை இருந்தால் என்ன பிரச்னையை சந்திக்க நேரிடும்’னு சின்னதா ஒரு மெசேஜ் இருக்குற மாதிரி, இந்தப் படத்திலும் ஒரு விஷயம் இருக்கு. படத்தோட ஒளிப்பதிவும் புது கலர்ல இருக்கும். கேவ்மிக் யூ ஆரி என்பவர்தான் ஒளிப்பதிவு பண்றார். பேரை கேட்டதும் ஹாலிவுட்டிலிருந்து வந்தவர்னு நினைக்காதீங்க. நம்ம ஊர்க்காரர்தான். ஏற்கனவே ஒரு இந்திப் படம் பண்ணியிருக்கார். நாங்க எதிர்பார்த்ததைவிட, படம் பிரமாதமா வந்திருக்கு. ‘பீட்சா’ சந்தோஷ் நாராயணன்தான் இதுக்கும் மியூசிக். பாடல்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படம்ங்கிறதால ஹிட்டடிக்கிற டியூன்கள் கொடுத்திருக்கார்.’’
‘‘சித்தார்த் - லட்சுமி மேனன் காம்பினேஷன் எப்படி வந்திருக்கு?’’



‘‘சூப்பர். இதே வார்த்தையை படம் பார்த்துட்டு ஆடியன்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க. ரெண்டு பேருமே அற்புதமா நடிக்கிறாங்க. ஸ்கிரீன்ல இந்த ஜோடி ரொம்ப ஃபிரஷ்ஷா தெரிவாங்க. ‘பீட்சா’வுக்கு முன்னாடி நான் ஒரு கதை ரெடி பண்ணியிருந்தேன். அந்த கேரக்டருக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் சித்தார்த் தான். ஆனா, அந்தக் கதையை பண்ண முடியாம போயிடுச்சு. இப்போ ‘ஜிகர்தண்டா’ எங்களை இணைச்சு வச்சிருக்கு. லுக், மேனரிசம்னு இதுவரை பார்த்த சித்தார்த்துக்கும் ‘ஜிகர்தண்டா’வில் பார்க்கப் போற சித்தார்த்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும். பொதுவா மதுரை பின்னணி யில் நடக்கிற கதைன்னாலே தமிழ் சினிமாவில் ஒரு ஸ்லாங் பேசுவாங்க. சினிமாவில காட்டுற மாதிரியெல்லாம் மதுரையில யாருமே பேசுறது இல்ல. நானும் மதுரைக்காரன்தான். நிஜத்தில் மதுரைக்காரங்க எப்படி பேசுவாங்களோ அந்த யதார்த்தத்தை மீறாம இந்த ‘ஜிகர்தண்டா’ இனிக்கும்!’’

‘‘இது புதுசா இருக்கேன்னு ‘பீட்சா’வில பேச வச்சீங்க. உங்களோட ஸ்டைல் என்ன?’’
‘‘இப்பதானே ரெண்டாவது படம் பண்றேன். அதுக்குள்ள என் ஸ்டைல் இதுதான்னு எப்படி முடிவு பண்ண முடியும்? ‘பீட்சா’ ஹிட்டுக்குப் பிறகு என் மேல எதிர்பார்ப்பு அதிகமா இருக்கறதாவும் சொல்றாங்க. அதை மனசில வச்சிக்கிட்டா பயத்துலயே அடுத்த படத்தில் கவனம் சிதறும். அதனால, முதல் படத்தில் என்ன மாதிரியான அக்கறையும், கவனமும் இருந்துச்சோ அதே மனநிலையோடதான் ‘ஜிகர்தண்டா’வையும் பண்றேன். எஞ்சினியரிங் முடிச்சுட்டு பெங்களூரில் வேலை செஞ்சப்போ குறும்படம் எடுக்கும் ஆர்வம் மட்டுமே இருந்துச்சு. அப்புறம் கம்பெனி விஷயமா அமெரிக்கா போயிருந்தப்போ ‘நாளைய இயக்குனர்’ போட்டிக்கு ஒரு குறும் படத்தை அனுப்பியிருந்தேன். செலக்ட் ஆவோம்ங்கிற நம்பிக்கையெல்லாம் பெருசா இல்ல.



அமெரிக்காவிலிருந்து பிரான்ஸில் இருக்குற கிளை கம்பெனிக்கு மாற்றல் ஆகிப் போன நேரத்தில்தான், போட்டியில் தேர்வாகியிருக்கறதா தகவல் வந்திச்சு. அப்படியே வேலையை உதறிட்டு வந்தேன். அப்புறம் ‘பீட்சா’ வாய்ப்பு. ‘படம் ஹிட் ஆகாட்டியும் ஆடியன்ஸுக்கு போரடிக்காது... புரொடியூசருக்கு நஷ்டம் ஆகாது’ன்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, படம் பெரிய ஹிட்! அதனால அடுத்து என்ன நடக்கும், எந்த ரூட்ல போவேன்னு இப்போதைக்குச் சொல்ல முடியாது. எனக்கு எமோஷனல் டிராமா ரொம்ப பிடிக்கும். மகேந்திரனோட ‘உதிரிப்பூக்கள்’, ‘முள்ளும் மலரும்’ ரொம்ப பிடிச்ச படங்கள். அந்த மாதிரி படம் பண்ணணும்னு ஆசை இருக்கு. அதுக்கு நிறைய கத்துக்கணும். இன்னும் காலம் இருக்கு!’’



‘‘உங்க வாழ்க்கையில ஒரு ஜில் ‘ஜிகர்தண்டா’ அனுபவம்?’’
‘‘சின்ன வயசிலிருந்தே நான் ரஜினி ரசிகன். ‘பீட்சா’ வெளியாகி ஒரு வாரத்துல நான் மதுரைக்குப் போயிட்டேன். படத்துக்கு நல்ல வரவேற்புன்னு ரிசல்ட் வந்தப்போ எனக்கு ஒரு போன் வந்துச்சி. ‘நான் ரஜினிகாந்த் பேசுறேன்...’னு எதிர்முனையில குரல் கேட்டதும் யாரோ ரசிகர்தான் கலாய்க்கிறார்னு அசால்ட்டா நினைச்சேன். ‘படம் பார்த்தேன் ‘ரொம்ப ரொம்ப நல்லா பண்ணியிருந்தீங்க. நான் ரசிச்சு பார்த்தேன்...’ன்னு பேசின வேகத்தை வச்சே இது நிஜமாவே ரஜினி சார்தான்னு தெரிஞ்சிகிட்டேன். சின்ன வயசிலிருந்து படத்துல ரசிச்சு கேட்ட குரல் என் காதுகளில் பாராட்டாய் ஒலிக்க, ஒரே நேரத்தில் ட்ரிபிள் ஜிகர்தண்டா சாப்பிட்ட மாதிரி ஜில்லாயிட்டேன். அவரை நேர்ல சந்திக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கேன்!’’
- அமலன்