பொம்மை : கே.ஆனந்தன்
‘‘ச்சே... அனிதா! பூனை வளர்க்கறதெல்லாம் வேணாம், விட்டுடுன்னு சொன்னா கேக்கறியா..? பார்... மேல மேல வந்து விழுது... சனியன்!’’ - அனிதா ஆசையாய் வளர்க்கும் பூனையைத் தூர எறிந்தபடி எரிச்சலாகச் சொன்னான் பிரேம்குமார்.
‘‘என்னங்க நீங்க... எவ்வளவு பாசமா பழகுது! கொஞ்சம் பால் வச்சா போதும்... வீட்டையே சுத்தி சுத்தி வருது...’’ ‘‘இங்க பாரு... எனக்கு பெட் அனிமல்ஸ்னாலே ஆகாது. சாயங்காலம் நான் ஆபீஸ் விட்டு வர்றப்போ இந்தப் பூனை இங்க இருக்கக் கூடாது. இருந்தா பொல்லாதவனாயிடுவேன்!’’ - எச்சரித்தபடி ஆபீஸ் கிளம்பினான் பிரேம்குமார். அனிதா ஆசை ஆசையாய் வளர்ப்பதற்காக தோழியிடம் வாங்கிய பூனைக் குட்டி அது. வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தாள். மாலை... ‘‘அனிதா...’’ - கூப்பிட்டபடியே வந்தான் பிரேம்குமார். கையில் பார்சல். பார்சலைப் பிரித்தவன், ‘‘பார்த்தியா... நாய்க்குட்டி பொம்மை... பார்க்க அழகா இருந்துச்சு. அதான் விலை ரெண்டாயிரம் ரூபாயா இருந்தாலும், பார்க்காம வாங்கி வந்துட்டேன்! ஹால்ல வச்சா அழகா இக்கும். உனக்கு பிடிச்சிருக்கில்லே?’’ என்றவன், ‘‘பூனையை கொண்டு போய் விட்டுட்டே இல்லே..?’’ என்றான் மறக்காமல். அனிதா இரண்டுக்கும் சேர்த்து தலையாட்டினாள்... பொம்மையாக!
|