நிழல்களோடு பேசுவோம்




கருணையைப் பற்றி சில சிந்தனைகள்
‘கருணை என்பது காணக் கிடைக்காத பொருளாகி விட்டது’ என்று சொன்னால் அவ்வளவாக யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினக்கிறேன். இந்த உலகத்தில் மனித குலம் எதற்காகவாவது அதிகமாகப் போராடி

யிருக்கக் கூடும் என்றால், அது கருணைக்காக மட்டும்தான். இந்த உலகில் எந்த ஜீவராசியாவது இன்னொரு ஜீவராசியிடம் கருணை வேண்டி போராடுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையிலோ, திரைப்படத்திலோ, யாராவது ஒருவர் இன்னொருவரிடம் கருணை காட்டும்படி கெஞ்சும் காட்சியைக் கண்டால் கண்களை இறுக மூடிக் கொள்வேன். அது மிகப்பெரிய ஒரு மானுட அவலம். யாரிடம் மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறதோ, அவர்கள்தான் இந்த உலகின் எல்லையற்ற அதிகாரம் படைத்தவர்கள். யார் கருணை வேண்டி வணங்குகிறார்களோ, அவர்களைவிட நிராதரவானவர்கள் யாருமில்லை!

கடவுளின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; அரசர்களின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; நீதியின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; மேலதிகாரியின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; மருத்துவரின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; கொடுக்கும் சக்தியுள்ளவர்களின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்; ஒரு முத்தத்தின் கருணைக்காகக் காத்திருப்பவர்கள் இருக்கிறார்கள். தள்ளாத வயதில் ஒரு மூதாட்டி இயற்கையின் கருணைக்காகக் காத்திருக்கிறாள். ‘கருணை’ என்பது ‘கொலை’ என்ற பதத்தோடு சேர்க்கப்பட்டுவிட்ட ஒரு யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அன்பு என்ற ஒன்றே இல்லாத உலகில்தான் கருணையின் முக்கியத்துவம் மேலும் மேலும் அதிகமாகிறது. அன்பிற்கு பதில் ஒருவரிடம் கருணை காட்டுவது அவரை மனமுடையச் செய்துவிடலாம். ஆனால் இந்த உலகில் நிறைய அந்தரங்கமான உறவுகள்கூட அன்பினால் அல்ல, கருணையினால்தான் நீடித்திருக்கின்றன. அந்தக் கருணையையும் அழிக்கும் ஒரு கணம் வரும்போது, அந்த உறவுகள் நிரந்தரமாக முறிந்துவிடுகின்றன. அன்பும் கருணையும் ஒன்றோடொன்று இடம் மாறும் தருணங்கள் இருக்கின்றன. ஒரு தெருநாய்க்கு உணவளிக்கும் முதல் நாள் உங்கள் மனதில் கருணையைத் தவிர ஒன்றுமே இல்லை. பிறிதொரு நாள் அந்த நாயின் இறப்புக்காக நீங்கள் மனமுடைந்து அழும்போது உங்களிடம் இருப்பது கருணையல்ல; எல்லையற்ற அன்பின் வெளிச்சம்.


‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் சொன்னது அன்பினாலேயே தவிர, கருணையினால் அல்ல. சில சமயம் ஒரு அன்போ, காதலோ, கருணையாக மாறிவிடுவதுண்டு. வாழ்க்கையில் அதுதான் ஒருவனுக்குக் கிடைக்கும் சாபம், தண்டனை. கருணையாக மாறிய ஒரு அன்பின் நிழலில் வாழ்வதைவிட, அன்பற்ற, கருணையற்ற உலகின் சுடுமணலில் வீழ்ந்து கிடக்கலாம்.
அன்பு, ஒரு பிணைப்பு; கருணை, மேலிருந்து கீழே வழங்கப்படும் ஒரு அதிகாரம். சாதாரண மனிதர்கள்தான் எப்போதும் அன்பு செலுத்துகிறார்கள். அதிகாரம் மிக்கவர்களுக்கு அன்பு சாத்தியமல்ல. அவர்களுக்காகத்தான் கருணை என்ற ஒன்று இந்த உலகில் உண்டாக்கப்பட்டது. கடவுள்கள், அரசர்கள், அதிகாரிகள், நீதிமான்கள், மதகுருக்களின் கருணைக்காக மக்கள் காலம்காலமாக கூட்டம்கூட்டமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். கருணை என்பது அதிகாரத்தின் நிழல்; தண்டனையின் நிழல்; அகம்பாவத்தின் நிழல். இந்த உலகில் அதிகாரம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவுக்கு கருணையும் முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் இரண்டையும் ஒருபோதும் பிரிக்க இயலாது. ஆயினும் இந்த உலகில் நாம் பூமிக்கடியிலிருந்து தண்ணீரை உண்டாக்குவது போல, கருணையின் ஊற்றை கொஞ்சம் உண்டாக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இந்த உலகம் கருணையின்மையின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறது. கருணை ஒருவர் வாழ்வில் முன்னேறிச் செல்வதற்கான தடையாகக் கருதப்படுகிறது. பல சமயங்களில் ஒரு தேசம் முன்னேறுவதற்குக்கூட கருணை ஒரு தடையாகக் கருதப்படுகிறது. மக்கள் சமூகத்தின் ஒரு பகுதி, இன்னொரு பகுதியினரின் வாழ்வாதாரங்களை அழித்தால்தான் முன்னேறிச் செல்ல முடியும் என்ற அளவுக்கு மிகப்பெரிய கருணையின்மையின்மேல் நமது சமூக, பொருளாதார லட்சியங்கள் அமர்ந்து விட்டன.

சமீபகாலங்களில் கருணைக்கு எதிரான இன்னொரு குரல் உக்கிரமாக ஒலித்து வருகிறது. அது குற்றமும் தண்டனையும் பற்றியது. பயங்கரவாதம், பாலியல் குற்றங்கள் தொடர்பாக ஒட்டுமொத்த சமூகமும் அதிர்ச்சியும் பயமும் அடைந்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கருணையற்ற வகையில் கொடூரமான தண்டனைகளை வழங்குவதே தங்களுக்கு பாதுகாப்பை உருவாக்கும் என்று பெரும்பாலானோர் கருதுகிறார்கள். இது நீதி அமைப்பின் மீதும், தண்டனை வழங்கும் நீதிபதிகளின் மனநிலையின் மீதும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. நீதி அமைப்பிலிருந்து கருணையைத் துண்டிக்க வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்கின்றன. கருணை என்பது குற்றத்திற்கான சலுகை என்ற பார்வை சமூகத்தில் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஒரு சிறிய வழக்கில் தீர்ப்புரைத்த நீதியரசர்கள், ‘குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பரிசீலனை செய்யும்போது, கருணை என்ற பெயரில், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது’ என்று கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மேகாலயா மாநிலத்தின் துரா என்ற இடத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணியாற்றிய கிளார்க் ஒருவர், மது குடித்துவிட்டு பணிக்கு வந்தார். அதோடு பள்ளி முதல்வர் அறைக்குச் சென்று தகராறு செய்ததாகக் கூறி பணிநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், ‘இந்த உத்தரவு சரியானது’ எனத் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, அவர் மேகாலயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தான் மது அருந்தும் பழக்கம் உள்ளவன் அல்ல என்றும், நண்பர்கள் தவறாக போதை பானத்தைக் கொடுத்துவிட்டனர் என்றும் முறையிட்டார். இதை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் அல்ல. அடிக்கடி குடித்துவிட்டு வருபவரும் அல்ல. அன்று ஒரு நாள் தவறாக அவரையும் அறியாமல் நடந்துள்ளது. இதற்காக, பணியில் இருந்து நீக்குவது பொருத்தமற்றது. அவர் தவறாக நடந்து கொண்டதற்கான சூழ்நிலையை அறிந்து கருணை காட்டலாம். எனவே அவரைப் பணியில் சேர்க்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டு இருந்தது.

இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இம் மனு, நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாயா மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. ‘குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைப் பரிசீலனை செய்யும்போது, கருணை காட்டுவதாகக் கூறி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடாது. பள்ளிக்கூடம் என்பது கோயில் போன்று புனிதமானது. அங்கு பணியாற்றும் நபர் குடித்துவிட்டு பணிக்கு வருவதை ஏற்க முடியாது. இதில் பள்ளி நிர்வாகம், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் எடுத்த முடிவு சரிதான். இந்த உத்தரவை ரத்து செய்துள்ள மேகாலயா ஐகோர்ட் முடிவை ஏற்க முடியாது’ என அவர்கள் தீர்ப்பளித்தனர்.

இந்திய நீதியமைப்பு, குற்றத்தின் சூழல், குற்றமிழைத்தவரின் இயல்பு அடிப்படையில் தண்டனைகளை கருணை சார்ந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இந்தக் கருணை பெரும்பாலும் யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்குக் கிடைப்பதே இல்லை. கருணை என்பது ஒரு குற்றத்தின் தன்மை சார்ந்து வழங்கப்படுவதில்லை; ஒருசிலருக்கு கருணை தேவைப்படுகிறது என்ற பொது அறத்தின் அடிப்படையிலேயே அது வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் நமது அரசியல் சட்டம் அந்த அடிப்படையிலேயே மன்னிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இன்ன குற்றம் செய்தவரைத்தான் மன்னிக்க வேண்டும் என்ற வரையறைகள் எதுவும் இல்லை.

ஆனால் தூக்கு தண்டனைகளுக்காகக் காத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண குற்றவாளிகளுக்கும்கூட கருணை தேவையில்லை என நமது நீதிமன்றங்கள் சிந்திக்கத் துவங்கியிருப்பது, நாம் பண்டைய கால நீதி முறைமைகளுக்குள் திரும்பிச் செல்கிறோம் என்பதையே காட்டுகிறது. இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட பதினான்கு மரண தண்டனைகள் தவறானவை என்று நீதிபதிகள் பலரே ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்வளவு சந்தேகத்திற்கிடமான நீதி அமைப்பில் கருணைக்கு இடமில்லை என்று ஒருவர் சொல்வதுதான் வேடிக்கை.
கருணையற்ற நீதி சாத்தியமென்பவர்கள், நீதியற்ற ஒரு சமூகத்தையே உருவாக்க விரும்புகிறார்கள்.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்


அதென்ன காந்தி பிறந்த தினத்தன்று மட்டும் டாஸ்மாக்கிற்கு விடுமுறை?
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.
காந்தி மீது கோபத்துடனாவது அன்று முழுக்க அவரை நினைத்துக்கொண்டிருப்பீர்களே... அதற்குத்தான்!

எதையாவது எதிர்பார்த்தே பழகுபவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
- அ.ஜாகீர் உசேன், உலகாபுரம்.
நம்மால் முடிந்தவரை எதையாவது ஒன்றை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்!

‘எல்லோரும் கட்டாயம் ஓட்டுப் போட வேண்டும்’ என்று சட்டம் கொண்டு வந்தால்?
- அ.குணசேகரன், புவனகிரி.
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சிகளின் பட்ஜெட் எகிறிவிடும்.

‘காலம்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்கிறார்களே... அதற்கு அர்த்தம் என்ன?
- வண்ணை கணேசன், சென்னை.
காலம் எப்போதும் கேள்விதான் கேட்கும். நாம்தான் பதில் சொல்ல வேண்டும்!

உங்களைப் பாதித்த கவிதை வரிகள்...
- ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல் போகிறோம்
- நகுலன்

 (சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
email: editor kungumam.co.in)

நெஞ்சில் நின்ற வரிகள்

பிரார்த்தனையின் உச்சத்தில் நின்று, உருக்கத்தின் விளிம்பில் நின்று ததும்பும் பாடலுக்கு ஒரு சிறந்த உதாரணம் இது. ‘தெய்வ மகன்’ படத்தில் நிராகரிக்கப்பட்ட மகனின் வன்மத்தையும் துயரத்தையும் சிவாஜி கணேசன் அதன் எல்லைக்கே எடுத்துச் சென்றிருப்பார். இந்தப் பாடல் அந்த துயரத்திலிருந்து நிகழும் மிகப்பெரிய சரணடைதல்...
கேட்டதும் கொடுப்பவனே
கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
என்று தொடங்கும் பாடல் சட்டென பெரும் துயரமாக மாறி,
தாயிடம் வாழ்ந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை
கிருஷ்ணா கிருஷ்ணா
என்று தொடர்ந்து
கோயிலில் குடிபுகுந்தோம்
கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா
என்று டி.எம்.எஸ்ஸின் குரலில் நிராதரவாய் கை கூப்பித் தொழும்போது மனம் கரைந்து விடுகிறது.

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

பொ.கருணாகரமூர்த்தி புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் மிக முக்கியமாவர். அவரது கதைகளில் வாழ்வின் அபூர்வமான தருணங்களும் ஆழமான நகைச்சுவையின் மின்னல்களும் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும். அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து...

சொல்லாமலிருக்க முடியவில்லை. இதுவும் என் ஆருத்ரா தரிசனத்தை ஒத்த அனுபவந்தான். வேலைக் களைப்புடன் வந்த ஒருநாள் ரிகிமிஷிணிஸி என்னும் அங்காடியின் கவுன்ட்டரில் பல நிமிஷங்கள் காத்திருந்து 3 பியர்களை வாங்கி வந்தேன். வழக்கம்போல் வாசலில் நிற்கும் தடியான இளைஞன் என்னிடம் யாசித்தான். இரண்டு கைகளிலும் சாமான்கள். இப்போ பொக்கட்டினுள் கைவிட முடியாதென்றேன். ‘அப்போ பியர் போத்தலில் ஒன்றைத் தாறது’ என்றான் சாதாரணமாக.

எனக்கு உடனே திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயிலின் தாடி வைத்திருந்த ஐயர்தான் ஞாபகத்துக்கு வந்தார். அது 1990. ‘‘உங்களுக்கான குறைகள் அத்தனையும் இக்கணமே தவிடுபொடியாக்கிடும் சர்வ வல்லமை படைத்த சக்திங்க இது, அவருக்கொரு ஸ்பெஷல் அபிஷேகம், ஜஸ்ட் த்றீ தௌசண்ட் றுப்பீஸ்தான் ஆகும், செஞ்சிடுங்க.’’ என்னைத் துரத்தித் துரத்தி நச்சரித்தார். அவரைக் காய்வெட்ட முடியாமல் தவித்து, ‘‘என்னிடம் அத்தனை ரூபாய்கள் இப்போது இல்லையே சுவாமி’’ என்றேன்.

என் மோதிரத்தைப் பார்த்தபடியே, ‘‘பரவாயில்லீங்க... வருத்தப்படாதீங்க... நீங்கள் தங்கம், டாலர், கமெரா, பான்ட் லெங்க்த், டிஷேர்ட்டு, பேனா இப்படிப் பொருளாக் கொடுத்தாக்கூட ஸ்வாமி ஏத்துக்கும்’’ என்றது சின்னச்சுவாமி.
https://www.facebook.com/karunaharamoorthy?frefts