கர்ணனின் கவசம்





தஞ்சாவூரில் இருந்த ருத்ரனின் வீடு அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. கார்த்திகை தீபத்துக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. என்றாலும் வீட்டைச் சுற்றிலும் விஜயலட்சுமி அகல் விளக்கை ஏற்றினாள். அவள் முகம் சுடர்விட்டுப் பிரகாசித்தது. அடுத்த பூலோக ஆயியாக பொறுப்பேற்கப் போவது தான்தான் என்று எப்போது அறிந்தாளோ அப்போது முதலே அவளது உடலும், மனமும் வேறு மாதிரியாக மாறிவிட்டது. ஜொலித்தது.

சீரான நடையுடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள். பூஜையறையை நோக்கிச் சென்றாள். ரோஜாவும், மல்லியும் கலந்த மணம் அவளை வரவேற்றது. சாம்பிராணியும், ஊதுவத்தியும் நாசியைக் கடந்து இதயத்தை நிரப்பியது. நடுநாயகமாக வீற்றிருந்த மூன்றடி உயர வெள்ளித் தேரையும், அதனுள் சின்னதாக இருந்த மகாமேருவையும் பார்க்கப் பார்க்க அவள் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்கள் பனித்தன.

பத்மாசனத்தில் அமர்ந்தபடி விஜயலட்சுமியை ஏறிட்ட ஆயியின் உதடுகளில் புன்னகை பூத்தது. தன்னருகில் இருந்த சாமந்திப் பூக்கூடையை அவளிடம் கொடுத்தாள் ஆயி. அதை வாங்கியவள் நேராக வெள்ளித் தேருக்கு அருகிலிருந்த, வயலின் வைக்கும் பெட்டி போல் காட்சி தந்த மரப்பெட்டியின் அருகில் வந்தாள். திறந்தாள்.

காலியாக இருந்தது. பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த விஜயாலய சோழன் பயன்படுத்திய வாள் அங்கில்லை. ரவிதாசனின் மனைவி அதை முன்பே ‘எடுத்துச்’ சென்றுவிட்டாள். ஆம், ‘திருடிக் கொண்டு சென்றாள்’ என்று சொல்லக் கூடாது. அப்படித்தான் ஆயி கட்டளையிட்டிருக்கிறாள்.



இனம்புரியாத ரேகைகள் விஜயலட்சுமியின் முகத்தில் பிறக்க ஆரம்பித்தது. இதை கவனித்த ஆயி, எழுந்து அவள் அருகில் சென்றாள்.

‘‘நம்மைப் பொறுத்தவரை இது காலிப் பெட்டி இல்ல. எப்பவும் இதுக்குள்ள வாள் இருக்கு. அப்படி நினைச்சுக்கிட்டு பூஜை பண்ணு...’’ என்றபடி அவள் தோளை ஆதரவாக அணைத்தாள்.

ஜனித்த வேகத்திலேயே ரேகைகள் சாம்பலாகின. தூண்டிவிட்ட திரியைப் போல் விஜயலட்சுமி யின் முகம் மீண்டும் ஒளிர்ந்தது. வாளின் பிடி இருப்பதான பாவனையில் பூக்களைக் கொட்டினாள். தாராதேவியின் காயத்ரியை நூற்றியெட்டு முறை உச்சரித்தாள். கற்பூரத்தைக் காண்பித்தாள். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தாள். கையோடு ஆயியின் கால்களைத் தொட்டு வணங்கினாள்.

அவளது தோள்களைத் தொட்டுத் தூக்கி நிறுத்திய ஆயி, அவள் கண்களை உற்றுப் பார்த்தாள்.

‘‘பொறுப்பை ஒப்படைச்சுட்டேன்... கிளம்பறேன்...’’
மவுனமாக தலையசைத்த விஜயலட்சுமி, ‘‘சரி ஆயி...’’ என்றாள்.

‘‘ம்ஹும்... இனிமே நீதான் ஆயி...’’ என்றபடி அவளது உச்சந்தலையில் முத்தமிட்டாள். ‘‘சொன்னதெல்லாம் நினைவுல இருக்குல?’’

‘‘ம்...’’

‘‘இனி ருத்ரனுக்காக நீ காத்திருக்க வேண்டாம்...’’

‘‘ம்...’’

‘‘அவன் வராமயும் போகலாம்...’’

‘‘ம்...’’

‘‘பூலோகத்தை கவனிச்சுக்க...’’

‘‘நீங்க..?’’

‘‘எங்க போறேன்னு நேரடியாவே கேட்கலாம்...’’ என்று சிரித்த ஆயி, ‘‘தவம் பண்ணப் போறேன்...’’ என்றாள்.

‘‘பொக்கிஷத்தை பாதுகாக்கவா?’’

‘‘அதுக்குத்தான் இங்க நீயும், திரிசங்கு சொர்க்கத்துல குந்தியும், கபாடபுரத்துல இன்னொருத்தியும் இருக்கீங்களே..?’’

‘‘அப்ப தவம் பண்ணப் போறது?’’

‘‘ஆற்றலைப் பெருக்க...’’

‘‘உங்ககிட்ட இல்லாத சக்தியா?’’

‘‘இருந்தது விஜி... வரம் பெற்று வாங்கின எல்லா ஆற்றலோட காலக்கெடுவும் இன்னும் சில வருஷங்கள்ல முடியப் போகுது. அதை நீட்டிக்க வேண்டாமா? அதுக்குத்தான் சிவனை நோக்கித் தவம்...’’
‘‘அதனாலதான் ‘பூலோக ஆயி’ பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சீங்களா?’’

‘‘ஆமா...’’

‘‘அப்ப திரும்பவும் சக்தி கிடைச்சதும் வருவீங்க இல்லையா?’’

‘‘நிச்சயமா... என் சபதம் இன்னும் நிறைவேறலையே..? அதனால இப்படித்தான் சுத்திக்கிட்டு இருப்பேன்...’’

‘‘அந்த சபதம் என்ன ஆயி..?’’

‘‘ஒருத்தரை அழிக்கறது...’’

‘‘யாரை..?’’

‘‘வைகுண்டத்துல இன்னமும் சாகாம இருக்காரே... அவர்தான். பீஷ்மர்!’’


‘‘என்ன தீவிர சிந்தனைல இருக்க?’’ குள்ள மனிதனைப் பார்த்து மத்திம மனிதன் கேட்டான்.

ஜன்னல் வழியே வெறித்தபடி நின்றிருந்த குள்ள மனிதன் திரும்பினான். ‘‘என்ன கேட்ட?’’

‘‘எந்தக் கோட்டையைப் பிடிக்க இப்படி யோசிச்சுட்டு இருக்கனு கேட்டேன்...’’

‘‘இந்தக் கோட்டையைத்தான்...’’ என்று பதிலளித்த குள்ள மனிதன் அந்த அறையில் இருந்த தன் சகாக்களைப் பார்த்தான். பதினாறு ஜோடி கண்களும் அவன் மீதே நிலைத்திருந்தன.

‘‘நீ சொல்றது புரியல... இது ஏற்கனவே நம்ம கோட்டைதானே?’’

‘‘கற்சுவர் மட்டும்தான் கோட்டைக்கான அடையாளம்னா நீ சொல்றதை ஏத்துக்கறேன்...’’

‘‘சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கு வா...’’ மத்திம மனிதன் சலித்துக் கொண்டான்.

‘‘கபாடபுரத்துக்கு வந்ததும் உங்க எச்சரிக்கை உணர்வை எல்லாம் கைவிட்டுட்டீங்க... காரியம் முடிஞ்சுடுச்சுனு நிம்மதியா இருக்கீங்க... அதனாலதான் உங்களுக்கு எந்த விபரீதமும் புரியல...’’

‘‘உனக்கு புரிஞ்சுடுச்சா?’’

‘‘ம்...’’

‘‘அப்ப கொஞ்சம் விளக்கிச் சொல்லு...’’ என்று நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தான் உயரமான மனிதன்.

‘‘நம்ம கூட கோட்டைக்குள்ள வந்தவங்க யாரு?’’

‘‘நம்ம நண்பர்கள்...’’

‘‘எதை வச்சு அப்படி சொல்ற?’’

‘‘ஆயி சொன்னா மாதிரி அடையாளத்துக்கு காமதேனுவோட பாலைக் காட்டினாங்களே...’’

‘‘ஒருவேளை நிஜமான நம்ம நண்பர்கள்கிட்டேந்து இவங்க பாலைத் திருடினவங்களா இருந்தா?’’ குள்ள மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்டதும் மற்ற எட்டுப் பேரும் துள்ளி எழுந்தார்கள். பழைய துறுதுறுப்பு அவர்களது உடலில் குடியேறியது.

‘‘இந்த சந்தேகம் உனக்கு எப்படி வந்தது?’’ மத்திம மனிதன் கேட்டான்.

‘‘வந்த ஆறு பேர்ல இரண்டு பேர் சின்னவங்க...’’

‘‘ம்...’’

‘‘அவங்க யாருமே நம்ம கண்களைப் பார்த்துப் பேசலை...’’

‘‘ம்...’’

‘‘இதையெல்லாம் கூட பொருட்படுத்தாம விட்டுடலாம். ஆனா...’’ என்று இழுத்த குள்ள மனிதன் அவர்கள் அனைவரையும் குனியச் சொன்னான். அனைவரும் அவனைச் சுற்றிலும் குனிந்தார்கள். அவர்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் குள்ள மனிதன் ஏதோ சொன்னான்.

‘‘என்ன சொல்றான்னு தெரியலையே...’’ ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த சூ யென், ரவிதாசனின் காதைக் கடித்தான்.

‘‘அது நமக்கு முக்கியமில்ல... நம்மளை இவங்க சந்தேகப்பட ஆரம்பிச்சுட்டாங்க... அதனால...’’

‘‘அதனால?’’

‘‘வந்த வேலையை முடிச்சுடலாம்...’’ என்றபடி அந்த மாளிகையை மீண்டும் தன் நகத்தால் சுரண்டி நகக் கண்ணை திருப்தியுடன் பார்த்தான். அதன் பிறகு இமைப்பொழுதும் ரவிதாசன் தாமதிக்கவில்லை.

அந்த ஒன்பது பேரும் இருந்த மாளிகைக்குத் தீ வைத்தான்.

கபாடபுரத்தில் இருந்த அந்த அரக்கு மாளிகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

கடலைக் கிழித்துக் கொண்டு ஆதித்யாவும், தாராவும் இந்துமாப் பெருங்கடலில் இறங்கினார்கள். ஆதித்யாவின் வலது கை தாராவின் இடுப்பை அணைத்திருந்தது.

‘‘ஆக்சிஜன் இல்லாம இப்படி கடலுக்குள்ள போக முடியும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை...’’ பரவசத்துடன் சொன்ன தாரா, சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டாள்.

‘‘எல்லாம் காமதேனு பாலோட மகிமை...’’ என்ற ஆதித்யா தன் இடுப்பை தடவிப் பார்த்தான். குடுவைக்குள் பால் பத்திரமாக இருந்தது.

‘‘அடேயப்பா...’’

‘‘என்ன?’’

‘‘மேல பாறேன்... நமக்கு வானமா இருக்கறது மேகம் இல்ல... தண்ணீர்...’’

‘‘மேகம் கூட தண்ணீர்தான் தாரா... சயின்ஸ் படிச்சதில்லையா?’’

‘‘வழியுது துடைச்சுக்க...’’ என்று அவனுக்கு அழகு காட்டியவள் கண் இமைக்காமல் அண்ணாந்து பார்த்தாள். ‘‘நாற்பதாயிரம் அடி உயரத்துல பறந்தப்ப மேகங்கள் தரையா தெரிஞ்சுது. இங்க என்னடான்னா தரையும், வானமும் தண்ணீரா இருக்கு. மொத்தத்துல இடத்துக்குத் தகுந்தபடிதான் முடிவும், ஆரம்பமும் இல்லையா...’’ ஆதித்யாவுடன் ஒன்றியபடி பேசினாள்.

‘‘என்ன ஒரே தத்துவ மழையா பொழியற?’’

‘‘தோணிச்சு. பகிர்ந்துகிட்டேன். தட்ஸ் ஆல்...’’ என்று தாரா சொல்லி முடிக்கவும் அடி ஆழம் தட்டுப்படவும் சரியாக இருந்தது. ‘‘ஏய்... தரை தெரியுது...’’

அவனும் குனிந்து பார்த்தான். ‘‘சமுத்திரத்தோட மேல்தளத்துல தான் கொந்தளிப்பும், சீற்றமும். ஆழத்துல வெறும் அமைதி தான்...’’

‘‘என்ன மேன்... இப்ப நீ பிலாசஃபரா மாறிட்டியா?’’

‘‘உன்கிட்டேந்து ஒட்டிக்கிச்சு...’’

சிரித்தான். சிரித்தாள். சிரித்தார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்ற மகிழ்ச்சி அவர்களது ஒவ்வொரு சொற்களிலும் வெளிப்பட்டது.

தரை இறங்கிய பிறகும் தன் கைகளை அவள் இடுப்பிலிருந்து அவன் எடுக்கவில்லை. அவளும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

‘‘இதோ இந்தப் பக்கம்...’’ தாரா சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தான். பாசிபடர்ந்த புதர்களுக்கு நடுவில் ஒற்றையடிப்பாதை அவர்கள் இருந்த இடத்திலிருந்து ஆரம்பித்து வலது
பக்கமாகச் சென்றது.

‘‘வா போகலாம்...’’

‘‘கொஞ்சம் இரு...’’ என்று அவளைத் தடுத்த ஆதித்யாவின் கண்கள் சுருங்கின.

‘‘என்ன விஷயம்?’’

‘‘சில காலடித் தடங்கள் தெரியுது பார்...’’

‘‘ஏய் லூசு... நமக்கு முன்னாடி வந்த நண்பர்களோட பாதச்சுவடு அது...’’

‘‘எனக்கென்னவோ அப்படித் தெரியல...’’

‘‘உன் சந்தேகத்தைத் தூக்கி அடுப்புல போடு...’’ என்றபடி அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள். சில நிமிட நடைக்குப் பிறகு அகன்று விரிந்த மைதானத்தை அடைந்தார்கள்.

‘‘கோட்டை இருக்கும்னு குந்திதேவி சொன்னாங்களே... இங்க பார்த்தா அப்படி எந்த அடையாளமும் தெரியலையே...’’

அவளுக்கு பதில் சொல்லும் மனநிலையில் அவன் இல்லை. விடை தெரியாத பல கேள்விகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. ‘நண்பர்கள் உங்களுக்காக காத்திருப்பார்கள். காமதேனுவின் பாலை அடையாளமாகக் காட்டுங்கள். உங்களை கோட்டைக்குள் அழைத்துச் செல்வார்கள். கோட்டையின் வாயில் பூதம் ஒன்றின் வாயாக இருக்கும்...’ என்றெல்லாம் திரிசங்கு சொர்க்கத்தில் குந்தி தேவி சொல்லியிருந்தாள்.

ஆனால் -
அந்த மைதானத்தில் அப்படி எதுவும் தென்படவில்லை. கடலுக்குள் அவர்கள் இறங்கிய திசையும், தரையைத் தொட்ட இடமும் சரிதான். அப்படியிருந்தும்...
‘‘ஆதி... ஆதி...’’ அவனை உலுக்கினாள்.

‘‘என்ன..?’’

உதட்டின் மீது தன் ஆள்
காட்டிவிரலை வைத்து அவனை அமைதியாக இருக்கச் சொன்னாள். ‘ஷ்... ஷ்...’ என்ற சத்தம் எங்கோ தொலைவில் மெல்லி
தாகக் கேட்டது. ஆனால், நொடிக்கு சமமாக அந்த ஒலியின் வேகமும் அதிகரித்தது.
சட்டென்று ஆதித்யாவின் காது மடல்கள் ஏறி இறங்கின. காதைப் பிளக்கும் ஓசையுடன் அந்த மைதானத்தில் இறங்கிய வாகனத்தைப் பார்த்ததும் இருவருமே அதிர்ந்தார்கள். காரணம், வந்தது விமானம். அதுவும் போர் விமானம்.

‘‘ஆதி... இது... இது... பரத்வாஜ மகரிஷி வடிவமைச்ச விமானம்தானே?’’

‘‘ம்...’’

‘‘மும்பை ஆபீஸ்ல கிடைச்ச விமானிகா சாஸ்த்ரா நூல்ல இதைப் பார்த்திருக்கேன்...’’ முணுமுணுத்த தாராவின் உதடுகள் அப்படியே உறைந்தன. காரணம், அந்தப் போர் விமானத்தின் கதவைத் திறந்துகொண்டு ஒரு பெண்மணி இறங்கினாள். அவர்களை நோக்கி வந்தாள்.
‘‘அடையாளம்?’’

வந்தவளை ஆராய்ந்தபடியே தன் மடியில் இருந்த குடுவையை எடுத்துக் காட்டினான். அதை திறந்து முகர்ந்து பார்த்தவளின் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது.

‘‘வாங்க...’’ என்றபடி விமானத்தை நோக்கி நகர்ந்தவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள். மூவரும் ஏறி அமர்ந்ததும் ‘‘சீட் பெல்ட் போட வேண்டாம்...’’ என்றாள் அந்தப் பெண்மணி.

‘‘வாவ்... வாள் நல்லா இருக்கே..?’’ என்றபடி தன்னருகில் இருந்த வாளை எடுத்த தாரா அதைச் சுழற்றினாள். ‘‘நைஸ்... உங்களோடதா?’’

‘‘இல்ல... விஜயாலய சோழனோடது...’’ என்று பதிலளித்த பெண்மணி விமானத்தைக் கிளப்பினாள்.

‘‘உங்க பேரு?’’ தாராவின் கைகளில் இருந்த வாளை உற்றுப் பார்த்தபடியே ஆதித்யா கேட்டான்.

‘‘மிஸஸ் ராஜி ரவிதாசன்...’’ என்றபடி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

‘‘பாதுகாப்பா தீபாவளியைக் கொண்டாடுங்கன்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘பூனைப்படை பாதுகாப்பு கேக்கறார்..!’’

‘‘விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றனன்னு வீட்டு வாசல்ல எதுக்கு கமலா போர்டு வச்சிருக்கே?’’
‘‘என்னோட தீபாவளி புது சேலைக்குங்க!’’

‘‘டி.வி கேம் ஷோ பார்த்து என் மனைவி அடியோட மாறிட்டா...’’
‘‘எப்படி..?’’
‘‘தீபாவளிக்கு புது சேலை செலக்ட் பண்ணக்கூட
ஜட்ஜஸ் கேக்குறா..!’’
 -பெ.பாண்டியன், காரைக்குடி.


(தொடரும்)