கோடம்பாக்கமாகும் கும்பகோணம்!





ஒரு காலத்தில் அவுட்டோர் என்றால் பொள்ளாச்சிக்கும் கோபிசெட்டிபாளையத்திற்கும் கிளம்பி விடுவார்கள் இயக்குனர்கள். அந்த மண்ணில் கால் வைத்துவிட்டு வந்தால் படம் நன்றாக ஓடும் என்பது நம்பிக்கை. இன்று அந்த நம்பிக்கை திசை மாறிவிட்டது. ‘‘ஒரு காட்சியையாவது கும்பகோணத்தில் எடுத்தால் வெற்றி நிச்சயம்’’ என்று நம்புகிறார்கள். இயக்குனர் ராஜேஷில் தொடங்கி சுந்தர்.சி வரை பலருக்கு இந்த சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகிறது. புதிதாக வரும் இயக்குனர்கள் கூட அவுட்டோருக்கு கும்பகோணத்தைத்தான் டிக் அடிக்கிறார்கள். தினமும் எங்கேனும் ஒரு தெருவில் ‘‘ரெடி... ஸ்டார்ட் கேமரா... ஆக்ஷன்...’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ உள்பட பல திரைப்படங்கள் முழுமையாக கும்பகோணம் வட்டாரத்தில் படமாகியுள்ளன.

 ‘‘1980கள்ல ராபர்ட் - ராஜசேகர் உள்பட பல இயக்குனர்கள் இங்கே வந்து படம் எடுத்திருக்காங்க. ஆனா எதுவும் சரியா போகல. அதனால கும்பகோணத்துல படம் எடுத்தாலே தேறாதுன்னு கிளப்பி விட்டுட்டாங்க. அந்த நம்பிக்கையை ‘சேது’ மூலமா பாலா உடைச்சார். விஷ்ணுபுரம், கோனேரிராஜபுரம், உடையாளூர், தியாகராஜபுரம் அக்ரஹாரங்கள்லதான் முழுப்படமும் எடுத்தார். திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர், திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயில்களையே பாண்டி மடமா காட்டினார். ‘சேது’வோட வெற்றிக்குப் பிறகுதான் கும்பகோணம் பத்தின நம்பிக்கை மாறுச்சு...’’ என்கிறார் ‘ஸ்வீட்’ ரவி. கும்பகோணத்தில் படம் எடுக்க விரும்பும் இயக்குனர்கள் முதலில் இவரைத்தான் தொடர்பு கொள்கிறார்கள். லொகேஷன் மேனேஜர், பி.ஆர்.ஓ என பல அரிதாரங்களை சுமந்து திரிகிறார். நடிக்கவும் செய்கிறார்.
 
‘‘இயக்குனர் லிங்குசாமி என்னோட நண்பர். தன் முதல் படத்தை கும்பகோணத்துலயே எடுக்க விரும்புனார். அதுக்காக ஒரு முற்றம் வச்ச வீட்டைத் தேடி அழைஞ்சோம். சுவாமிமலையில உள்ள ஸ்டெர்லிங் காட்டேஜ்ல ஒரு வீடு கிடைச்சுச்சு. அந்த வீட்டிலதான் ‘ஆனந்தம்Õ படமாச்சு. மம்முட்டிக்கும் முரளிக்கும் திருபுவனம் கோயில்லதான் கல்யாணம் நடந்துச்சு. ‘ஆனந்தம்’ முடிஞ்சபிறகு ‘தவசி’ படத்தோட தயாரிப்பாளர் வந்தார். திருபுவனம் கோயில்ல அந்தப் படத்தோட ‘ஓபனிங் சாங்’ எடுத்தோம். ‘நந்தா’வுக்காக பாலா திரும்பவும் வந்தார். தொடர்ச்சியா நாலைஞ்சு படங்கள் நல்லா ஓடினபிறகு நிறைய பேர் வரத் தொடங்கிட்டாங்க’’ என்கிறார் ரவி.



மகாமகக் குளம்தான் கும்பகோணத்தின் ‘ஏவிஎம் ஸ்டூடியோ’. லவ்வா, சேசிங்கா, சண்டையா, குத்துப்பாட்டா... எல்லாவற்றுக்கும் பொருந்துகிற லொகேஷன். ‘அரசு’, ‘சண்டை’, ‘மாப்பிள்ளை’, ‘ஜி’, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’, ‘கலகலப்பு’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்று பல படங்கள் இந்தக் குளக்கரையில் எடுக்கப்பட்டுள்ளன. ‘ஆனந்தம்’ படத்தில் சினேகா அறிமுகக் காட்சி எடுத்தது இந்தக் குளக்கரையில்தான். இன்று ‘நான்தான் சிவா’ படத்தில் தனது அண்ணன் மகன் வினோத்தையும் சென்டிமென்டாக இந்தக் குளக்கரையில் வைத்தே அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் பல குத்துப்பாடல்கள் கும்பகோணம் மார்க்கெட்டில் எடுக்கப்பட்டவை. ‘குத்துப்பாட்டு மார்க்கெட்’ என்றே அதற்கு பெயர் வைத்து விட்டார்கள்.

‘‘அரசு ஆடவர் கல்லூரி முக்கியமான ஷூட்டிங் ஸ்பாட். இந்தோ-சார்செனிக் கட்டிடக் கலையில் எண்கோண வடிவத்தில உருவாக்கப்பட்டது. இதை ‘இந்தியாவின் கேம்பிரிட்ஜ்’னு சொல்வாங்க. பெரும்பாலும் இங்கே எடுக்கப்படுற எல்லாப் படங்கள்லயுமே இந்தக் கல்லூரி தலை காட்டும். திரும்பின பக்கமெல்லாம் கோயில்கள், மண்டங்கள், குளங்கள் இருக்கறதால சினிமாக்காரர்களோட விருப்பத்துக்குரிய லொகேஷனா கும்பகோணம் மாறிடுச்சு’’ என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் தேனுகா.

‘‘திருவிடைமருதூர், திருபுவனம், திருவையாறு, திருவீழிமிழலை, திருவாவடுதுறை, மாயவரநாதர் கோயில்கள்ல நிறைய படங்கள் எடுத்திருக்காங்க. தாராசுரம் பஸ் ஸ்டாண்ட்லதான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தோட பல காட்சிகள் எடுத்தாங்க. உடையாளூர், கோனேரிராஜபுரம், விஷ்ணுபுரம் அக்ரஹாரங்கள்ல தினமும் ஏதாவது ஒரு படத்தோட ஷூட்டிங் நடக்குது. காவிரி படித்துறைகளும் ரொம்ப ஃபேமஸ். ராயர் படித்துறை, சோலையப்பன் தெரு படித்துறைகள்ல பல படங்கள் எடுத்திருக்காங்க. திருவையாறு படித்துறையை ‘அந்நியன் படித்துறை’ன்னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. உடையார்பாளையம் ஜமீன் கோட்டையில பல படங்கள் எடுத்திருக்காங்க. பிரமாண்டமான அரண்மனை, கோயில், குளம்னு பிரமிப்பூட்டற இடம்’’ என்கிறார் ஸ்வீட் ரவி.

ஷூட்டிங் நடந்த வீடுகள் நடிகர், நடிகைகளின் பெயரிலேயே பிரபலமாகி விடுகின்றன. மகாமகக் குளக்கரையில் இருக்கிறது நயன்தாரா வீடு (‘பாஸ் என்கிற பாஸ்கரன்’). ஆர்யா வீடு அதற்கு சற்று தள்ளியிருக்கிறது. ‘மகாநதி வீடு’, ‘கலகலப்பு வீடு’, ‘அழகுராஜா ஆபீஸ்’ என்று பல தலங்கள் ஃபேமஸாகி விட்டன.



சினிமாக்காரர்கள் கும்பகோணத்தை நாடி வர லொகேஷன்கள் மட்டும் காரணமல்ல. பட்ஜெட்டும்தான். சாப்பாட்டில் இருந்து தங்குமிடம் வரைக்கும் எல்லாமே மினிமம் பட்ஜெட்டில் சாத்தியம். அதுதவிர மக்களால் எந்த தொந்தரவும் இருக்காது. உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, கோயில் நிர்வாகங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. மிகக்குறைந்த செலவில் துணை நடிகர்கள் கிடைத்து விடுகிறார்கள். கும்பகோணத்தில் நான்கு துணை நடிகர்கள் சங்கம் செயல்படுகிறது. குழந்தை நட்சத்திரங்கள் தொடங்கி மூதாட்டி கேரக்டர் வரைக்கும் 400க்கும் மேற்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். மேரி, கோபு, கோமதி சங்கரன், இளங்கோவன் ஆகியோர் துணை நடிகர்கள் ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள்.  

‘‘இங்கே நிறைய பாரம்பரிய உணவகங்கள் இருக்கு. ஷங்கர் சார், சந்தானம் இரண்டு பேரும் மங்களாம்பிகை ஹோட்டல் சாப்பாட்டை விரும்புவாங்க. சந்தானம் கும்பகோணத்தோட ரொம்பவே ஐக்கியமாகிட்டார். இயக்குனர் ராஜேஷும், ஆர்யாவும் வேதகிரி டிபன் சென்டரோட ரசிகர்கள். நயன்தாரா கும்பகோணம் வந்தா எல்லா கோயிலுக்கும் ஒரு ரவுண்ட் அடிச்சிடுவாங்க.

அப்பப்போ சுவாரஸ்யமான பிரச்னைகளும் வரும். ‘சிங்கக்குட்டி’ன்னு ஒரு படத்துக்கு திருவிடைமருதூர் கோயில்ல ஷூட்டிங் நடந்துச்சு. கோயில்ல குண்டு வைக்கிற மாதிரி ஒரு காட்சி. ஷூட்டிங் முடிஞ்சதும் அந்த குண்டை எடுக்காம அப்படியே விட்டுட்டுப் போயிட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு பராமரிப்பு வேலைக்காக கோயில் மேல ஏறின ஒருத்தர் பார்த்து பதறிப் போய் போலீஸுக்கு சொல்லிட்டார். பாம் ஸ்குவாடெல்லாம் வந்து பெரிய பிரச்னை ஆயிடுச்சு...’’ என்று  சிரிக்கிறார் ‘ஸ்வீட்’ ரவி.



சினிமாக்காரர்களின் பார்வை பட்டதால் கும்பகோணம் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஹோட்டல்கள், லாட்ஜ்கள் நிரம்பி வழிகின்றன. புதிது புதிதாக ஹோட்டல்கள் உருவாகின்றன. வாகனங்கள் பிஸி. கேட்டரிங் நடத்துபவர்கள் செழிக்கிறார்கள். கிராமியக் கலைகள் நலிந்து வேலையற்று இருந்த கலைஞர்களுக்கு சினிமா தேடி வந்து வாழ்க்கை அளித்திருக்கிறது. கும்பகோணம் மெல்ல மெல்ல குட்டி கோடம்பாக்கமாகி வருகிறது.  
- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்


சுந்தர்.சி: ‘கிரி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கும்பகோணத்தில்தான் நடத்தினேன். அதில் இருந்து கும்பகோணத்தோடு எனக்கு சென்டிமென்ட் பிணைப்பு உண்டு. நான் நடித்த ‘சண்டை’, இயக்கிய ‘கலகலப்பு’ உள்பட பல படங்களிலுமே கும்பகோணம் இருக்கும். சென்னையில் இருந்து 6 மணி நேரப் பயணத்தில் சென்றுவிடமுடியும்.
லிங்குசாமி: முதல் படத்தை கும்பகோணத்துல எடுக்கப்போறேன்னு சொன்ன உடனே, ‘ராசியில்லாத இடம்பா... பாத்துக்கோ’ன்னு பயமுறுத்தினாங்க. ‘எனக்கு சென்டிமென்ட்ல நம்பிக்கை இல்லே’ன்னு சொன்னேன். எனக்கும் கும்பகோணத்துக்கும் 35 வருட பந்தம். சில ஊர்கள்ல ‘இடைஞ்சல் பண்ணாம கொஞ்சம் தள்ளி நில்லுங்க’ன்னு சொன்னா, ‘எங்க ஊருக்கே வந்து எங்களையே விரட்டுறியா’ன்னு சண்டைக்கு வருவாங்க. கும்பகோணத்துல அதுமாதிரி பிரச்னை இல்லை. சிரமம் புரிஞ்சவங்க.     

ராஜேஷ்.எம்: ஒரு பக்கம் பழமையான வீடுகள், பழக்கவழக்கங்கள்... இன்னொரு பக்கம் மாடர்ன் கட்டிடங்கள், வாழ்க்கை முறை. கும்பகோணத்தில் தினமும் ஷூட்டிங் நடப்பதால் மக்கள் நட்புணர்வோடு கடந்து சென்று விடுவார்கள். வேலை என்று இல்லாமல் தனிப்பட்ட முறையிலும் கும்பகோணம் என் மனசுக்கு நெருக்கமான ஊர்.