கௌரவம்





‘‘ஏங்க... மளிகை சாமான் லிஸ்ட் ரெடி. அதைக் கொடுத்துட்டு... அப்படியே வரும்போது சந்தையில காய்கறி வாங்கிட்டு வந்திடுங்க..!’’ - என்ற கங்காவை கோபமாக ஏறிட்டான் சந்துரு.
‘‘இங்க பாரு கங்கா! இனிமே இந்த வேலை எல்லாம் நான் செய்ய முடியாது. இப்ப கம்பெனில எனக்குக் கொடுத்திருக்குற புரொமோஷனுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதை நான் காப்பாத்தியாகணும். வேணும்னா, வேலைக்காரிக்கு
சம்பளத்த ஏத்திக் கொடுத்து, இதையும் சேர்த்து செய்யச் சொல்லு!’’ - அலட்சியமாய் சொல்லிவிட்டுக் கிளம்பினான் சந்துரு.
‘நேரம் ஆகிவிட்டது. எனக்குப் பதவி உயர்வு கொடுத்த மேனேஜரைப் பார்க்க ஸ்வீட்டுடன் கிளம்பும்போதுதானா இப்படியெல்லாம் வேலை சொல்வாள்?’ - புலம்பியபடியே மேனேஜர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்.
‘‘ஓ சந்துருவா? வாங்க..!’’ - வரவேற்ற மேனேஜரின் கையில் மாப்பும் பக்கெட்டும்.

‘‘என்ன அப்படிப் பாக்கறீங்க... இன்னைக்கு பாத்ரூம் சுத்தம் செய்யிறவன் வரல. அதுக்காக சும்மா விட்டுட முடியுமா? நம்ம வீட்டு வேலையை நாமதான பாத்தாகணும்’’ - என்ற மேனேஜரின் வார்த்தைகள், சந்துருவின் போலி கௌரவத்திற்கு சாட்டையடி கொடுத்தது.
வீட்டுக்கு வந்ததுமே கேட்டான், ‘‘கங்கா, அந்த மளிகை லிஸ்ட் எங்கே?’’