தகுதி






‘டை’யை சரி செய்து கொண்டு இன்டர்வியூ அறைக்குள் நுழைந்தான் கமலேஷ்.
‘‘இன்டர்வியூவுக்கு வரும்போது டீசன்ட்டா வர மாட்டீங்களா? சட்டையில என்ன கறை?’’
- இந்தக் கேள்வியை எதிர்பார்த்த கமலேஷ், பொறுமையாக பதில் சொன்னான்.

‘‘வரும்போது ஒரு ஹோட்டல்ல டிபன் சாப்பிட்டேன். டிபனை பரிமாறிய சர்வர், கை தவறி டிபனை சட்டை மேல கொட்டிட்டான். வீட்டுக்குப் போய் டிரஸ் மாற்ற நேரமில்லை. பத்து மணிக்கு இன்டர்வியூன்னு சொன்னீங்க. நேரம் தவறாமையை நான் ஒரு கொள்கையா வச்சிருக்கேன்.’’
‘‘சரி, அந்த சர்வரை நீங்க என்ன பண்ணீங்க?’’
‘‘உண்மையைச் சொல்லிடறேன். கோபம் வந்து அந்த சர்வரை அடிச்சிட்டேன். பொய் பேசறது எனக்குப் பிடிக்காத விஷயம்!’’
‘‘உங்களுடைய நேரம் தவறாமை, பொய் பேசாத குணத்தையெல்லாம் நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால்
உங்களுக்கு இங்கே வேலையில்லை. நீங்க போகலாம்!’’
‘‘என்ன காரணம்னு நான் தெரிஞ்சிக்கலாமா சார்?’’
‘‘நீங்க இன்டர்வியூவுக்கு வந்திருக்கிறது மனிதவளத்துறை, அதாவது எச்.ஆர். தலைவர் பதவிக்கு. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அரவணைச்சுப் போகணும். உங்களை மாதிரி முன்கோபிகளால் இந்த வேலையை சிறப்பா செய்ய முடியாது!’’