கவிதைக்காரர்கள் வீதி
மாற்றங்களின் மடியிலிருந்து
* எல்லா தகவல்களையும் அழித்த பின்னரும் முன்திரையில் கொள்ளையழகு காட்டிச் சிரிக்கிற குழந்தையின் புகைப்படத்தை என்ன செய்வதென விழிக்கிறான் செல்பேசியைக் களவாடியவன்.
* வரிசையாய்க் கட்டப்பட்டிருக்கும் வீடுகளைக் காண்பித்து ‘என்ன’வென்று கேட்கிற குஞ்சுப் பறவைக்கு வயல்வெளிகளைக் கொன்று புதைத்துக் கட்டிய கல்லறைகள் என்று கண்ணீர் உகுக்கிறது தாய்ப்பறவை. ஆறுவழிச் சாலைகளைத் தாண்டுகையில் * ஓய்வு வேண்டுகிற இணைப் பறவையிடம் ‘‘இன்னும் 5 கிலோமீட்டரில் டோல்கேட் வந்துவிடும் அங்கே நிழலிருக்கும்’’ எனச் சொல்லிப் பறக்கிறது ஆண் பறவை.
* சொந்த ஊரின் பரம்பரை வீடுகளின் கழுத்தறுத்து ரத்தம் குடித்து புஷ்டியாய் வளர்கின்றன நகர அடுக்ககப் புது வீடுகள்.
* எச்சிலிலைகளை விழுங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருந்த வீதி மாடுகள் பிளாஸ்டிக் பேப்பர்களை விழுங்கி அற்பாயுளில் உதிர்கின்றன.
|