சொல்றேண்ணே... சொல்றேன்!



 


என்னையக் கேட்டா, நல்லது செய்யும்போது கெடைக்கிற அவார்டை விட, தப்பு செய்யும்போது கெடைக்கிற தண்டனை நல்லதுண்ணே. அதுதான் நமக்கு நெறைய விசயத்தைச் சொல்லித் தருது. நாம தப்பே செய்யாம தண்டனை கெடைக்குதுன்னு வச்சிக்கிடுங்க... அது சொல்லித் தர்ற பாடமே தனி!

பள்ளிக்கூடத்துல நாம என்னென்ன தண்டனையெல்லாம் அனுபவிச்சிருப்போம்? பெரம்படி, முட்டிக்காலு, தோப்புக்கரணம், பெஞ்சு மேல நிக்கிறது... இதெல்லாத்தையும் விட கொடுமையான தண்டனை ‘தப்பு செய்ய மாட்டேன்... தப்பு செய்ய மாட்டேன்’னு எழுதறதுதான்ணே. நோட்டுப் புத்தகம் வாங்கணும், பேனா காலியாகும்னு பொருளாதாரப் பிரச்னையை எல்லாம் விடுங்க... அதத் தாண்டி, படிக்கிறது, எழுதறதுன்னாலே நமக்கு ஒரு தனி செரமம் இருக்குல்ல.
ஒரு தடவை வகுப்புல நாங்க மூணு பேரு சேர்ந்து என்னவோ எடக்கு பண்ணி மாட்டிக்கிட்டோம்ணே. ‘தப்பு செய்ய மாட்டோம், தப்பு செய்ய மாட்டோம்’னு ஆளுக்கு முந்நூறு தடவை எழுதச் சொல்லிட்டாங்க. ஆளுக்கு ஒரு வார்த்தையா எழுதுனா சீக்கிரம் எழுதிரலாம்னு பிளான் பண்ணி, மூணு நோட்டு வாங்கி ஒண்ணா எழுத உக்கார்ந்தோம்ணே. ‘‘எல... நீ ஓட்ட வாயில ஔறுனதுலதாம்லே நாம எல்லாரும் சிக்குனோம். அதனால நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, ‘மாட்டோம்’னு ஒரே வார்த்தையத்தான் மூணு நோட்டுலயும் எழுதுவோம். நீதான் மத்த ரெண்டு வார்த்தையையும் எழுதி நாளைக்கு கொண்டாரணும்’’னு சொல்லிட்டானுவ. ‘‘வேலைன்னு வந்துட்டா நாங்க வெள்ளக்காரன் மாதிரிலே... ராத்திரியெல்லாம் முழிச்சிருந்து முடிச்சிரமாட்டேன்’’னு வீரம் பேசிக்கிட்டே, அவனுவ எழுத எழுத நான் புளியங்கா அடிச்சிட்டிருந்தேன்ணே. ராத்திரி மூணு நோட்டையும் கொண்டுக்கிட்டு வீட்டுக்குப் போனேனா, புளியங்கா அடிச்ச அசதி... ‘பே’னு கையக் கால வீசி மலந்துட்டேன்.

அடுத்த நாளு வாத்தியாரு நோட்டை வாங்கிப் பாக்காரு... ‘மாட்டோம் மாட்டோம்’னு மட்டும் எழுதியிருக்கு! ‘‘ஏண்டா... ‘எழுத மாட்டோம்’னு சொல்ல வாரீயளா? ஒவ்வொரு வார்த்தையா எழுதுறது என்னடே பழக்கம்..?’’னு அவரு கேட்டுக் கேட்டு அடிச்சது இப்ப வரைக்கும் வலிக்குதுண்ணே.
ஆனா, இதுல இருந்து எனக்கு ஒரு பன்ச் டயலாக் கெடைச்சுதுண்ணே... ‘தப்பு செய்ய மாட்டேன்’னு சொல்ற நல்லவனுக உலகத்துல இருக்கலாம். ஆனா இந்த அண்ணாச்சி... ‘தப்பு செய்ய’ன்னு எழுதக் கூட மாட்டான்... எப்பிடி?
வளர்ந்த பிறகு வாத்தியாருக்கு பதில், வாழ்க்கை நம்மளை தண்டிக்கும்ணே... கடைகள்ல வேலை பாக்கும்போது எனக்கு ஓனர் தண்டனை எதுவும் கொடுத்ததில்ல. கொடுக்குற மாதிரி தப்பு எதுவும் நான் செஞ்சதில்ல. ஆனா, பாருங்கண்ணே... சின்ன வயசுல கூறுகெட்டதனமா உண்மை, நேர்மை, நாணயம்னு நம்ம மனசுல வெசத்தை வெதைச்சிருப்பாங்க. வேலைன்னு வெளி ஒலகம் வந்தப்புறம், அந்தக் கண்றாவிகளை மறக்கத்தான் நாம படாத பாடு படுவோம். உலகத்தைப் பொறுத்தவரைக்கும் நீங்க ரொம்ப உண்மையா இருந்தீகன்னா, ஒண்ணு உங்க மேல கடுப்பாகி குத்தம் கண்டுபிடிக்கும்; இல்ல, கோமாளியாக்கி சிரிக்கும். நம்மளை இந்த ரெண்டு விதமாவும் வச்சி உருட்டி வெளையாடியிருக்கு உலகம்.

‘‘பரவாயில்லப்பா... பையன் நல்லா சுறுசுறுப்பா வேலை பாக்கான்’’னு ஓனர் சொன்னாருன்னு வச்சிக்கிடுங்க. கெக்கே பிக்கேன்னு உள்மனசுல உருண்டு பெறண்டு சிரிச்சிறக் கூடாது. உங்க பக்கத்துல நிக்கான் பாருங்க சக தொழிலாளி, அவனைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்க... அவன் தலையில கொம்பு வளந்து, வாயில கோரைப் பல்லு மொளைச்சி, உங்க கொரவளைய எப்படா கடிக்கலாம்னு காத்துக்கிட்டிருப்பான். நான் வேலை பார்த்த எடத்துல எல்லாம் என்னையச் சுத்தி அப்படித்தான்ணே ஒரு கூட்டம் இருந்துச்சு.
ஓனரு இல்லாத நேரம் அடிமையப் போல நம்மளை நடத்துவானுவ. திரும்பி உக்கார்ந்து ஊறுகா பாக்கெட்டை எண்ணிக்கிட்டிருக்கும்போதே, 100 கிலோ புண்ணாக்கு மூட்டைய மேல சாச்சி விட்டுருவானுக. ரெண்டு மணி நேரமெல்லாம் அதுல இருந்து வெளிய வர முடியாம கெடந்திருக்கேன். பாத்திரக் கடையில வேல பாக்கையில எந்த ஜாமான் கீழ விழுந்து சொட்டையானாலும் நம்ம கணக்குலதான் எழுதுவானுவ. வெயிட்டத் தூக்கிட்டு படியில நடக்கும்போது காலை விட்டு தடுக்குவானுவ. சாயந்திரத்துல ஓனரே வாங்கித் தார மிச்சரு பாக்கெட்ல எச்சித் துப்பி கொடுப்பானுவ. அட, இதையெல்லாம் விடுங்கண்ணே... வேலை பார்க்குற இடத்துல நம்மாளுன்னு சொல்லிக்க ஒரு சேத்திக்காரன் கூட இல்லாம காலந்தள்ளுறது எந்தா பெரிய தண்டனை தெரியுமா?
முதலாளிகிட்ட நல்ல பேர் வாங்கிட்டதுனால நீங்க முதலாளி ஆயிர மாட்டீங்க; தொழிலாளிகளும் உங்களைச் சேர்த்துக்க மாட்டாங்க. தனியா நின்னாகணும். அந்த தண்டனைக்கு பயந்தாச்சும் கொஞ்சம் சுமாராத்தான் வேலை பாக்கணும். முதலாளிகிட்ட அப்பப்ப கொஞ்சம் வசவு வாங்கிக்கணும். புஸ்தகத்துலயோ பள்ளிக்கூடத்துலயோ சொல்லித் தராத இந்த ஒழுக்கங்களை அந்த தண்டனைகதான்ணே நமக்கு காதைத் திருகி சொல்லிக் கொடுத்தது!

சென்னைக்கு வந்த புதுசுல, இருக்க எடமில்லாம ஒரு பெரிய பில்டிங் முன்னால போய் நின்னேன். அங்க வாட்ச்மேன் அண்ணன் நம்மூருகாரரு மாதிரி தெரிஞ்சாரு... ‘‘மழைக்கு மறைவா படுத்துக்கிட மட்டும் ஒரு எடம் வேணும்னே... காலையில எம்போக்குல நான் போயிக்கிடுவேன்’’னு கேட்டேன். ‘‘அதுக்கென்னப்பா... பில்டிங்குல எல்லாரும் வீட்டுக்குப் போனப்புறம், 11 மணிக்கு மேல வந்து படுத்துக்க... ஆறு மணிக்கு முன்னால கௌம்பி ஓடிரு’’ன்னாரு. தெய்வமேனு அவர் கூட ஒரு மாசம் தங்கியிருந்தேன்ணே.
இந்த மனசு இருக்கு பாருங்க... ஓடிட்டே இருந்தா ஓடற தெம்பைத் தரும். ஆனா, நின்னோம்னு வைங்க... உக்காரச் சொல்லும்; உக்கார்ந்தா படுக்கச் சொல்லும்; அப்புறம் வசதியா படுக்கை கேக்கும். அப்புறம் அதில லேசா பூவத் தூவி வச்சாதான் தூக்கம் வரும்னு மொரண்டு புடிக்கும். எனக்கும் அப்படித்தான்ணே ஆச்சு. இருக்க எடம் கெடச்சாச்சு. அடுத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடா சாப்பிடலாமேன்னு ஆசை வந்துச்சு. எங்க அண்ணனுக்கு லெட்டர் எழுதிக் கேட்டேன். உடனே அண்ணன் ஆயிரம் ரூவா அனுப்பி வச்சுது.
அது மூணு மாசம் காணும்ணே நமக்கு. ஆனாலும் இத்தனை நாளு பட்டினி கெடந்தோம்ல... மொத நாளு கொண்டாடுவோம்னு அன்னிக்கு மட்டும் 90 ரூவாவுக்கு சாப்பிட்டேன்ணே. மிச்சம் 910 ரூவா என் பையிலதான் வச்சிருந்தேன். பைய தலைக்கு வச்சித்தான் படுத்திருந்தேன். காலையில எழுந்து பாக்கேன்... பத்து இருக்கு, தொள்ளாயிரத்தக் காணோம். ‘எல, சினிமா ஆசையில வந்துட்டீன்னா பட்டினிய சகிச்சுத்தாம்ல ஆவணும். அத விட்டுட்டு நல்ல சோத்துக்கு ஆசப்பட்டா இதுதான் தண்டனை’ன்னு மனசுல மாதா கோயில் மணியடிச்சுதுண்ணே. அன்னிக்கு முடிவு பண்ணினேன்... சொகுசான வாழ்க்கைக்கும் நமக்கும் சொத்துத் தகராறு... அது தோள்ல கை போடக் கூடாதுன்னு!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச
நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்