வேலைக்குப் போகாதீர்கள்! : சுய முன்னேற்றம்




நல்ல வேலைக்கு கடவுள் கொடுக்கும் பரிசு, அதைவிட சிறப்பாக இன்னொரு வேலையைச் செய்யும் திறமையே!
- எல்பர்ட் ஹப்பார்ட்

அரசுத்துறைகளில் மட்டும்தான் லஞ்சமும், ஊழலும் நிறைந்திருக்கிறதா என்ன? பெரிய - சிறிய தனியார் நிறுவனங்கள், வியாபாரப் பகுதிகள்... அவ்வளவு ஏன், சேவை நிறுவனங்கள் கூட ‘சலுகைகள்’, ‘கவனிப்புகள்’, ‘அன்பளிப்புகளுக்கு’ விதிவிலக்குகள் அல்ல...

ஒரு டாக்ஸி ஓட்டுநர் சுற்றுலாப் பயணியை லாட்ஜில் விடுகிறார். பின்பு லாட்ஜுக்கு வந்து அதற்கான கமிஷனைப் பெற்றுக்கொள்கிறார். ஒரு டாக்டர், தங்கள் மருந்துகளைப் பரிந்துரைப்பதற்காக மருந்து கம்பெனிகள் என்னென்னவோ செய்கின்றன! டெஸ்ட் லேப்களுக்கும், டாக்டர்களுக்கும் ஒப்பந்தம் இருக்கிற காட்சிகளைப் பார்க்கிறோம். ஒரு தச்சர் தனது கடையில் மரம் எடுப்பதற்காக மரவாடிகள் அவருக்குக் கொடுப்பதற்கு பெயர் என்ன? சாதாரண சாலையோர கட்டணக் கழிப்பறையில் கூட, அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு ரூபாயை விட அதிகம் வசூல் நடப்பதைப் பார்க்கிறோம். சரி, விடுங்கள்... கிரிக்கெட்டில் ஒரு பவுலர் வியர்வையைத் துடைத்தால் கூட, ‘இது ஒரு சிக்னலோ’ என்று சந்தேகப்பட வைக்கிற காலம் இது. எந்தத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல!
காரணம், லஞ்சமும் ஊழலும் பணி இடங்களைப் பொறுத்ததல்ல. அங்கே வேலை பார்க்கும் மனிதர்களைப் பொறுத்தது. லஞ்சம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் இடத்திலும் திட புத்தியும், சலனமற்ற மனதும் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். வாய்ப்பே இல்லாத இடத்திலும் ‘ஏதாவது கிடைத்து விடாதா’ என்று ஏங்குகிற சபலப் பேர்வழிகள் இருப்பார்கள்.



மனிதனின் பேராசைக்கு வானம் தாண்டியும் எல்லை விரிகிறது. பணம் என்றால் ஆண், பெண், படித்தவர், பாமரர் என அத்தனை பிணங்களும் வாயைத் திறந்தே தீரும். இயல்பாகவே மனிதனால் எதையும் நியாயப்படுத்த முடியும் என்கிறபோது, இன்றைய தேவைகள் இன்னும் நிறைய காரணங்களைத் தருகின்றன. சுயநலங்கள் அந்த வேலையை இன்னும் எளிதாக்கி விடுகின்றன. 

‘‘இவனுக்கு இதனால் இவ்வளவு லாபம் கிடைக்கிறபோது, இதற்குக் காரணமான எனக்கு இவ்வளவு தரட்டுமே! நான் வாங்காவிட்டால் என் பெயரைச் சொல்லி வேறு யாராவது வாங்கத்தான் போகிறான். நான் வாங்காவிட்டால் மட்டும் இந்த உலகில் வேறு என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? எனக்குத் தெரிந்து யாரும் யோக்கியமில்லை யாராவது ஒரு ஆளைக் காட்டுங்கள்!’’ - இப்படி வாதங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். எப்போது உங்கள் செயலை பகிரங்கமாக வெளியில் ஒப்புக்கொள்ள முடியவில்லையோ, சந்தேகமே வேண்டாம்... நீங்கள் செய்வது தவறான செயலே!

இவ்வாதங்களினால் சட்டபூர்வமற்ற பணத்தையோ, பொருளையோ ஒருவர் வாங்குவதிலிருந்து அவரைத் தடுத்து நிறுத்திவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. காரணம், இது தப்பு என்று தெரியாதவரைத்தான் திருத்த முடியும். அறிந்தே செய்கிறவர்களை என்ன செய்ய முடியும்? பின் எதற்காக இதை எழுத வேண்டும்? அனுமதிக்கப்படாத பணத்தையோ, அன்பளிப்பையோ வாங்குகிற ஒருவர் கையும் களவுமாய் பிடிபட்டால் வேலையை இழக்க நேரிடலாம்... சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற நேரிடலாம் என்பதை விடுங்கள். இப்படியெல்லாம் வாங்குகிற ஒருவர் எப்படியெல்லாம் வீழ்ச்சியடைய முடியும் என்பதை சிறிது ஆராய வேண்டாமா?  

அதர்ம வழியில் வந்த பணத்தைக் கொண்டு அனாதைகளை வளர்ப்பது, ஏழைகளுக்கு உதவுவது, நோயாளிகளுக்கு உதவுவது... இதெல்லாம் சினிமாக்களில்தான் சாத்தியமே தவிர, யதார்த்தத்தில் தவறான பணம் உங்களைத் தவறான வழிக்கே கூட்டிச் செல்லும். இது மாதிரி பணம் உங்களை பெரும்பாலும் மது பாட்டில்களுக்கு அறிமுகம் செய்யும். வேண்டாத பழக்கங்களைக் கற்றுத் தரும். ஒருவேளை இது போன்ற கேளிக்கைகளுக்கு நீங்கள் பலியாகவில்லை என்றால், இந்தப் பணத்தை கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்குகள் என்று பயன்படுத்துவீர்கள். கண்டதையும் வாங்கிச் சாப்பிடுவீர்கள். இது எப்படிப் பார்த்தாலும் உங்கள் மனதையும், உடலையும் பாதிக்காமல் விடாது. காரணம், நீங்கள் இதைச் சம்பாதிக்கவில்லை... அதனால், செலவு செய்வதில் வருத்தம் வராது.

இந்த சுக வாழ்வில் திளைத்திருக்கவும், நீடித்திருக்கவும் தொடர்ந்து இதுபோன்ற பணத்தை சம்பாதிக்க நாட்டம் வரும். ஒரு ஆடம்பரச் செலவு இன்னொரு ஆடம்பரச் செலவிற்கு அழைத்துச் செல்வதால் முறையற்ற பணம் உங்களுக்கு நிறையத் தேவைப்படும். நீங்கள் மாசடைந்து (ஜீஷீறீறீutமீ) கொண்டே இருப்பீர்கள்.
 
சரி, இந்த செலவுகள் எல்லாம் செய்யவே போவதில்லை, சும்மா சேர்த்து வைக்கப்போகிறேன் என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி. எவ்வளவு சேர்ந்தால், நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்? பத்தாயிரம்? லட்சம்? பத்து லட்சம்? அடுத்து, அதை பத்து லட்சத்து ஒரு ரூபாயாக மாற்ற நீங்கள் முனைவீர்கள். நீங்கள் திருப்தியே அடையப் போவதில்லை. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை நீங்கள் உணரும்போது வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்திருப்பீர்கள். இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!
எல்லாவற்றையும் விட, நீங்கள் உங்கள் நல்லியல்புகளை இழப்பீர்கள். மற்றவர்கள் செய்யும் செயல்களில் கூட, ‘இதில் இவருக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்’ என்றெல்லாம் யோசிப்பீர்கள். சர்வம் பணமயமாகி, உங்கள் கேரக்டரே சிதைந்து விடும்.
 
ஒரு பணியிடத்தில் முறைகேடாக பணம் சம்பாதிக்க நீங்கள் விரும்பினீர்கள் என்றால், நீங்கள் மட்டுமே அதைச் செய்து விட முடியாது. அல்லது அது உங்களுக்கு மட்டும் தெரிந்த விஷயமாக அது இருக்காது. உதாரணமாக, 5000 ரூபாய்க்கு ஒரு போலி பில்லை நீங்கள் தயார் செய்தீர்கள் என்றால், அதைத் தயாரிப்பவர், அந்தப் பிரிவைச் சேர்ந்தவர், அதை செக் செய்யும் அலுவலர், அனுமதிக்கும் அலுவலர், அதை வழங்கும் கேஷியர் என பலருக்கும் தெரியாமல் முடியாது. அவர்கள் தங்கள் பங்குக்கு அதில் ஒரு கமிஷன் சேர்த்துக் கொள்வார்கள். உங்களால் இதைத் தடுக்க முடியாது. அனுமதிக்கப்படாத பணத்தை உங்களுக்கு அவர் சம்பாதித்துத் தர வேண்டும்... ஆனால், அதிலிருந்து அவர் ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நீங்கள் எதிர்பார்த்தால் உங்களைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது. இதில் ஏதாவது பிரச்னை வந்தால், ‘‘இல்லீங்க, நான் 5000 ரூபாயத்தான் சேர்த்துப் போடச்சொன்னேன்’’ என்று நீங்கள் வாதிட முடியாது. ஆக, நீங்கள் உபயோகிக்காத அந்த கூடுதல் பணத்திற்கும் நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். 

இப்படி இந்த சங்கிலித் தொடர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு ஒழுங்கீனம், பல ஒழுங்கீனர்களை உருவாக்குகிறது. உங்களுடைய ரகசியத்தை ஒருவர் அறிந்திருப்பது உங்கள் பாதையில் நீங்களே கண்ணிவெடி புதைப்பது மாதிரி. இதில் தர்மசங்கடமான விஷயம்... உங்கள் சங்கதிகள் தெரிந்த ஒருவர் உங்களுக்குக் கீழே பணியாற்றினாலும் அவர் செய்யும் தவறுகளுக்கு, உங்களால் அவரைத் திட்டக்கூட முடியாது. தவறு செய்பவன், அங்குள்ள நண்டு, புழு, பூச்சிகளுக்குக் கூட பயப்பட வேண்டியிருக்கும்.

ஒருவேளை, நீங்கள் பிடிபட்டு வேலை போனால் இந்தக் கரும்புள்ளியுடன் அடுத்த வேலையைத் தேடுவது அவ்வளவு சுலபம் என்றா நினைக்கிறீர்கள்? ‘கை சுத்தம் இல்லாத’ ஆளை யாராவது பக்கத்தில் வைத்துக்கொள்வார்களா என்ன? அந்தப் பொழுதுகளில் உங்களால் கமிஷன் பெற்றவர்கள் யாரும் உங்களைக் காப்பாற்ற முன் வர மாட்டார்கள் என்பதே யதார்த்தம். 
முறைகேடான பணம் மூலம் பணி இடத்தில் உங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்வது, ஒரு வழிப்பாதைப் பயணம் போன்றது. திரும்பி வரவே முடியாது. பணம் நம்மை ஆள அனுமதித்துவிட்டால், ஒரு மோசமான எஜமானனுக்கு நாம் அடிமைகளாகி விடுவோம். நாம் பணத்துக்கு எஜமானராகி விட்டால், மிகச் சிறந்த அடிமை நம் வசம்!

(வேலை வரும்...)