
.பி.எல் டி20ன் வெற்றி ஜுரம் எல்லா விளையாட்டுக்கும் பரவத் தொடங்கியிருக்கிறது. மகேஷ் பூபதி அண்ட் கோ மெகா பட்ஜெட்டில் டென்னிஸ் லீக் தொடருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்க, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆகஸ்டில் ஆரம்பமாகிறது இந்தியன் பேட்மிண்டன் லீக்.
ஏற்கனவே ஐ.பி.எல் இருப்பதால் இதை ‘இபேலீ’ என்று வைத்துக் கொள்வோம். இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் கனவுத் திட்டம். ஐதராபாத் ஹாட்ஷாட்ஸ், பெங்கா பீட்ஸ் (பெங்களூரு), லக்னோ வாரியர்ஸ், மும்பை மாஸ்டர்ஸ், புனே பிஸ்டன்ஸ், டெல்லி ஸ்மேஷர்ஸ் என்று 6 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள்.
லக்னோ வாரியர்ஸை சகாரா குழுமம் வாங்கியுள்ளது. புனே அணியின் உரிமத்தை டாபர் இந்தியா கைப்பற்ற, கிரிக்கெட் நட்சத்திரம் சுனில் கவாஸ்கரும் நடிகர் நாகார்ஜுனாவும் மும்பை மாஸ்டர்ஸ் ஆகியிருக்கிறார்கள். எல்லாமே ஐ.பி.எல் பார்முலாதான். வீரர், வீராங்கனை ஏலம் டெல்லியில் அமர்க்களப்பட்டது.
ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். ஒரு ஜூனியர் வீரர் இருப்பது கட்டாயம். மொத்தம் 11 பேர். இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் சாய்னா நெஹ்வால், பாருபள்ளி காஷ்யப், பி.வி.சிந்து, ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஆகியோருக்கு ஐகான் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது. இவர்களின் அடிப்படை ஏலத் தொகை ரூ.31 லட்சம்.
நம்பர் 1 வீரர் லீ சோங் வெய் (மலேசியா) அதிகபட்சமாக ரூ.81 லட்சத்துக்கு மும்பை மாஸ்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். சாய்னா நெஹ்வாலை ரூ.72 லட்சத்துக்கு அள்ளியது ஹாட்ஷாட்ஸ். ஏலம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் அடிப்படை ஏலத் தொகையும் ரூ.31 லட்சத்தில் இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டிருந்தது. என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் ஜுவாலா கட்டாவை ரூ.19 லட்சத்துக்கு டெல்லி ஸ்மேஷர்ஸும், அஷ்வினியை ரூ.15 லட்சத்துக்கு புனே பிஸ்டன்சும் வாங்கின. ஐகான் அந்தஸ்தும் அடிப்படை ஏலத் தொகையும் பறிபோனதில் ஜுவாலா, அஷ்வினி அப்செட். ஊர் பேர் தெரியாத வீரர்களுக்குக்கூட இவர்களை விட அதிக தொகை கிடைத்திருக்கிறது!

மகளிர் இரட்டையர் பிரிவை போட்டியில் இருந்து நீக்கியதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்கிறது பேட்மிண்டன் சங்கம். ‘‘காசு, பணம் மட்டுமே முக்கியமில்லை. எங்களுக்கும் கௌரவம் இருக்கு. எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செஞ்சிருக்கலாம். கடைசி நிமிஷம் வரை எங்களுக்கு இதுபத்தி சொல்லவே இல்லை. ஐகான் அந்தஸ்தை காசு கொடுத்தா வாங்கினோம். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து விளையாடி பதக்கம் வென்றதால் கிடைத்த கௌரவம் அது. கொஞ்சம், கூட போட்டுக் கொடுக்கிறோம் என்கிறார்கள். இதை விட பெரிய அவமானம் இருக்க முடியாது. போட்டியில் இருந்து விலகிக் கொள்வது பெரிய விஷயமே இல்லை. இபேலீயை விளம்பரம் செய்வதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தோம் தெரியுமா? பேட்மிண்டன் விளையாட்டை நேசிக்கிற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து விளையாட முடிவு செய்தோம்’’ என்று படபடக்கிறார்கள் ஜுவாலாவும் அஷ்வினியும்.
ஐ.பி.எல் பாணி தொடர் என்பதால், ‘ஏதாவது ஒரு சர்ச்சையும் கட்டாயம்!’ என்று பிளான் போட்டிருப்பார்கள் போல. விளம்பரத் தூதர்களாக ஆமிர் கான், தீபிகா படுகோன், சானியா மிர்சா என்று நட்சத்திரங்கள் அணிவகுப்பதால் பளபளப்புக்குப் பஞ்சமில்லை. டெல்லி ஸ்மேஷர்ஸுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் தனது இதயம் ஐதராபாத் ஹாட்ஷாட்டுக்காகவே துடிக்கிறது என்கிறார் சானியா.
ஆகஸ்ட் 14ம் தேதி டெல்லியில் அமர்க்களமாக ஆரம்பமாகும் இபேலீ 31ம் தேதி மும்பையில் முடிகிறது. ஐ.பி.எல் அளவுக்கு வெற்றிகரமாக அமையுமா? பணம், ரசிகர்களின் ஆர்வம் என்ற அடிப்படையில் பார்த்தால் ஒற்றை இலக்க சதவீதம்தான் கிடைக்கும். சர்வதேச நட்சத்திரங்களுடன் விளையாடும் அனுபவம், திறமையான ஜூனியர் வீரர்களுக்கு விலை மதிப்பில்லாததாக இருக்கும். நேரடி ஒளிபரப்பு, விளம்பரம், ஸ்பான்சர் என்று வர்த்தக ரீதியிலான அம்சங்களும் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளன. இளைஞர்களிடையே பேட்மிண்டன் விளையாட்டை பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் இது உதவும் என்பது போனஸ்.
‘‘துப்பாக்கி சுடுதலுக்குக் கூட இது போல அணிகளை உருவாக்கி லீக் போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும்’’ என்கிறார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங். கபடி, கூடைப்பந்து, தடகளம் என்று பாரபட்சமே இல்லாமல் எல்லா விளையாட்டுக்கும் இதுபோல அணிகளை உருவாக்கி லீக் போட்டிகளை நடத்த முன்னணி நிறுவனங்கள் முன்வந்தால் முன்னேற்றம் உறுதி.
- பா.சங்கர்