தலைவா அரசியல் கதை இல்லை!




அமைதியின் அண்ணனாக இருக்கிறார் விஜய். ‘தலைவா’ டீஸர் உலகெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரைச் சந்தித்தோம். நம் கரம் குலுக்கி வரவேற்பதில் மலர்கிறது பண்பும் பணிவும். ‘‘நிறைய பேசணும்’’ என்ற நமது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக புன்னகைக்கிறார். தூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்த அறையில் தொடர்ந்த உரையாடலில்...

‘தலைவா’வில் என்ன சொல்ல வர்றீங்க?
‘‘தலைப்பை வச்சி இது அரசியல் பேசும் படம்னு யாரும் நினைச்சா, அது எங்களோட தப்பில்லை. படத்தோட டிரெய்லர் பார்த்தீங்களா..? ‘தலைவாங்கறது நாம தேடிப்போறது கிடையாது... நம்மைத் தேடி வர்றது’ன்னு ஒரு டயலாக் வருது இல்லையா... அதுதான் மொத்தப் படம்னு வைத்துக் கொள்ளுங்கள். விஜய் எங்கிட்ட கதை சொல்ல வந்தபோதே ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’ மாதிரி ஒரு கதை சொல்வார்னு நினைச்சேன். ஆனா, ‘படத்தோட டைட்டில் ‘தலைவா’ சார்’னுதான் ஆரம்பிச்சார். ‘ஆஹா... ஆரம்பமே வேற மாதிரியா இருக்கே’ன்னு எனக்கு டவுட். ஆனா இது அரசியல் பற்றிய கதை இல்லை; அரசியல்வாதிகள் பற்றி பேசும் படமாவும் இருக்காது. ஜில்லென்ற காதலும் ஜிவ்வென்ற ஆக்ஷனும் மிக்ஸ் பண்ணிய படம்தான். டைரக்டருக்கும் இது புது ஏரியா. எனக்கும் அவரோட காம்பினேஷன் புதுசா இருந்தது. கதையை மீறி திணிக்கப்பட்ட காட்சிகள் இல்லாத, அழகான திரைக்கதை. எல்லா தரப்பு ரசிகர்களின் இதயங்களிலும் இது தூண்டில் போடும்னு நம்புறேன்.



இதுவரை வராத கதை, வித்தியாசமான கதைக்களம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனா கதை சொன்ன விதமும் அதை எடுத்த விதமும் ரொம்ப புதுசா இருக்கும். முக்கியமா நீரவ் ஷாவோட ஒளிப்பதிவை சொல்லியாகணும். கதைக்களம் மும்பைதான். ‘துப்பாக்கி’யில் மும்பையோட சந்துபொந்துகளைக்கூட விட்டு வைக்காமல் முருகதாஸ் எடுத்துட்டாரேன்னு விஜய்கிட்ட கேட்டேன். ‘இல்ல சார்... நம்ம படத்தில வேற மாதிரி இருக்கும்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே புதுப்புது ஆங்கிளில் நீரவ் ஷா மும்பையை வேற மாதிரி காட்டி இருக்கார். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் ஏரியாவும் நல்லாவே வந்திருக்கு. என்னோட ரசிகர்களுக்கு ‘தலைவா’ நல்விருந்தா இருக்கும்...’’

 ‘விஜய்யோட நடிக்கப் போறே’ன்னு அமலாபால் நடுங்கிட்டு இருந்தாங்களே?
‘‘ஹய்யோ... அவங்களுக்கா பயம்? அவங்ககிட்ட பயம் இருக்கிற மாதிரியே தெரியல. ஆரம்பத்தில சின்னதா பயம் இருந்திருக்கலாம். கேமரா முன்னாடி நின்னதும் அவங்க கேரக்டரில் மட்டும் கவனமா இருந்தாங்க. நல்லா நடிக்கக்கூடிய திறமையான பொண்ணுதான். ‘உங்களோட நடிக்கிறேன். என் கேரியரில் இது முக்கியமான படம்’னு சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிட்டாங்க!’’

பிரேக்கே எடுக்காமல் ‘ஜில்லா’வுக்கு போயிட்டீங்களே?
‘‘சாதாரணமா ஒரு வேலையை செய்யும்போதே ரிலாக்ஸ் தேவைப்படுது. ஆனா பல மணி நேரம் கேமரா முன்னாடி டான்ஸ் ஆடி, சண்டை போட்டு, டயலாக் பேசி தொடர்ந்து ஷூட்டிங் ஷூட்டிங்னு இருக்கும் எங்களுக்கு நிச்சயமா ரெஸ்ட் தேவை. ‘துப்பாக்கி’ முடிஞ்ச கையோட ‘தலைவா’வுக்கு தாவினேன். இப்போ கூட, ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு ‘ஜில்லா’வுக்கு போகலாம்னு ப்ளான் பண்ணியிருந்தேன். மோகன்லால் சாரோட டேட்ஸ் வாங்கிட்டு யூனிட் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. அதுதவிரவும் வேறு சில காரணங்களால் உடனே ஷூட்டிங் போக வேண்டிய சூழ்நிலை. அதனால ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துட்டு அடுத்த ஆட்டத்துக்குக் கிளம்பிட்டேன். சூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு. என்னோட ராசியான கம்பெனி என்று சொல்லலாம். புதுமுக இயக்குனர் நேசன் என்பவர்தான் இயக்குகிறார். ‘வேலாயுதம்’ படத்தின்போதுதான் எனக்கு அவர் அறிமுகமானார். அருமையான கதை. பரபரப்பா ஒரு ஷெட்யூல் முடிஞ்சு, இப்போ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.



‘மலையாள சூப்பர்ஸ்டாரா இவர்’ என்று சந்தேகிக்கும் வகையில் மோகன்லால் சாரோட எளிமை என்னை ஆச்சர்யமூட்டுகிறது. எந்த பந்தாவும் இல்லாமல் மனுஷன் படு சிம்பிளா இருக்கார். நான் ரொம்ப சைலன்ட் என்று நம்மளப் பத்திதான் தெரியுமே. ஆனா என்னோட அமைதியெல்லாம் அவர்கிட்ட கலைந்திடும். என்னை அவர் பக்கத்தில் இழுத்து வச்சு நிறைய விஷயங்கள் பேசுவார். அவரோட காமெடியில் வாய்விட்டுச் சிரிப்பேன். அதே சமயம் அவர் சொல்ற செய்திகளை வெறும் செய்தியா எடுத்துட்டுப் போயிடமுடியாது. அதில சிந்திக்கிறதுக்கு ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கும். ரொம்ப இயல்பான, ரசனையான மனிதர். சமையல்லகூட பின்னி எடுக்கிறார். ஒருநாள் அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போய் அவர் கையால சமைச்சுக் கொடுத்தார் பாருங்க. அந்த சுவை இன்னும் என் நாக்குல அப்படியே ஒட்டியிருக்கு...’’



விஜய் மக்கள் இயக்க வேலைகள் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?
‘‘வெறுமனே ரசிகர் மன்றமா இல்லாமல், நான் நடிச்ச படம் வெளியாகும்போது மட்டும் கட் அவுட் வச்சு, பட்டாசு வெடித்து கொண்டாடாமல், எல்லா நாட்களிலும் ரசிகர்கள் அவங்களால முடிஞ்ச நல்ல காரியங்களைச் செய்யணும். அதுக்காகத்தான் நான் ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றினேன். மக்கள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்கும்போதெல்லாம், ‘தொடர்ந்து நல்ல காரியங்களைச் செய்யுங்கள். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யும்போது நானும் வந்து கலந்துகொள்கிறேன்’ என்று சொல்லி வருகிறேன். அப்படி பல கூட்டங்களில் பங்கேற்றும் இருக்கிறேன். எங்கள் சந்திப்புகளில் இதுபற்றி மட்டும்தான் அக்கறையோடு பேசுவோம். அரசியல் பேச்சு எழுந்தால், அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை; அதுபற்றி திங்க் பண்ணுவதும் இல்லை. பொறுப்பாளர்களிடமிருந்து அப்படி பேச்சு எழுந்தால், சிரித்துக்கொண்டே விடை பெற்றுவிடுவேன். பத்திரிகைகளில்தான் என்னைப் பற்றி டிசைன் டிசைனாக செய்திகள் வரும். படித்துப் பார்க்கும்போது, ‘ஓ... நம்மளப் பற்றி இப்படியெல்லாம் நினைச்சிருக்காங்களோ’ என்று தோன்றும்!’’
(பாலிவுட் பிரவேசம், புதிய கெட்டப், எதிர்காலம்... எல்லாம் பற்றி விஜய் அடுத்த வாரமும் தொடர்கிறார்...)
- அமலன்