சாயி





உங்கள் மனம் என் நினைப்பில் திரியட்டும். சிந்தனை செய்யுங்கள், அது என்னைப் பற்றியதாகவே இருக்கட்டும். என்னிடம் உங்கள் ஆர்வம் எவ்வளவு இருக்குமோ, என்அனுக்கிரகமும் அவ்வளவு இருக்கும். எதற்கும் பகீரதப்பிரயத்தனம் செய்யத் தேவையில்லை.
- பாபா மொழி

நாளை தீபாவளி. பெண்கள் தேவையான திரியையும், வாமன் தாத்யா ஏராளமான அகல் விளக்குகளையும் தயாரித்து மசூதியில் நிரப்பினார்கள்.

‘‘தாத்யா, நாளை காலை சீக்கிரம் எழுந்து குளித்துப் புத்தாடை அணியுங்கள். நிறைய பூக்களைக் கொண்டுவந்து, மாலை செய்து, எல்லா இடத்திலும் அலங்கரியுங்கள். நாளை தீபோற்சவம் செய்யணும். மாலை கடைவீதி சென்று எண்ணெய் வாங்கி வருகிறேன்’’ என்றார் சாயி.

மறுநாள் காலையில் எல்லோரும் மாலை தொடுத்து, எல்லா இடங்களையும் அலங்கரித்தார்கள். பெண்கள் அழகான கோலமிட்டார்கள், ‘ஓம் சாயி’ என்கிற வார்த்தையை எழுதி! மாலையில் சாயி இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்துக்கொண்டார். ‘‘இரண்டிலும் எண்ணெய் நிரம்பினால் உங்களால் தூக்க முடியாது. ஒன்றை என்னிடம் கொடுங்கள்’’ என்று தாத்யாவும் அவருடன் சென்றான்.

ஓர் எண்ணெய் கடைக்குச் சென்ற சாயி, ‘‘கொஞ்சம் எண்ணெய் கொடப்பா!’’ என்று வழக்கம் போல சிரித்துக்கொண்டே கேட்டார். ‘‘இன்று தீபோற்சவம் செய்வதாக இருக்கிறோம். வழக்கமாகக் கொடுப்பதை விடக் கொஞ்சம் ஜாஸ்தியாகக் கொடுத்தால் உபகாரமாக இருக்கும்...’’
‘‘சாயீ, கடையில் எண்ணெய் இல்லை!’’
‘‘என்ன?’’ - சாயி ஆச்சரியத்துடன் கேட்டார்.

‘‘தீபாவளி இல்லையா, பண்டிகைக்குத் தின்பண்டம் செய்ய எல்லோரும் நிறைய வாங்கிச் சென்றதால், தீர்ந்துவிட்டது. கொஞ்சம்கூட இல்லை...’’
‘‘சரி, அல்லா உனக்கு அருள் புரிவார்’’ - வலது கையைத் தூக்கி ஆசீர்வதித்து, ‘‘தாத்யா, அடுத்த கடைக்குப் போவோம்.’’
அங்கும் அதே பதில்.
‘‘சாயீ, எண்ணெய் இல்லை.’’
‘‘இல்லையா?’’
‘‘ஆமாம்! எல்லாம் காலி. தீபாவளி இல்லையா? எல்லாவற்றையும் வாங்கிச் சென்றுவிட்டார்கள்...’’
‘‘அந்த டப்பாவில் மிச்சமிருக்கும் கொஞ்ச எண்ணெய் கொடுத்தால்கூடப் போதும்...’’ - சாயி சாந்தமாகச் சொன்னார்.
‘‘ஒரு சொட்டுக்கூட இல்லை. அடுத்த கடையில் கேளுங்கள். அவனிடம் இருக்கலாம்.’’

‘‘சரி... அல்லா உங்களுக்கு நன்மை புரிவார்’’ என்று ஆசீர்வதித்து முன்னேறினார்.
அடுத்த கடைக்குப் போய் கேட்டார். அந்தக் கடைக்காரன், ‘‘காசு இருக்கிறதா?’’ எனக் கேட்டான்.
‘‘நானே ஒரு பிச்சைக்காரன்... பக்கீர்... என்னிடம் எப்படிப்பா பணம் இருக்கும்?’’
‘‘எப்படி உங்களிடம் பணமில்லையோ, அப்படி என்னிடம் எண்ணெய் இல்லை. நேற்று வரை எண்ணெய் உங்களுக்கு ஓசியில் கொடுத்தேன். அந்த உபகாரத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மறுபடி பணம் இல்லாமல் இங்கு வராதீர்கள்...’’

‘‘இதற்கு முன் நீ உபகாரம் செய்ததை நான் எப்படி மறப்பேன்? அல்லாவிடம் பிரார்த்திக்கிறேன், உனக்கு எல்லா நன்மைகளும் உண்டாவதற்கு!’’
இருவரும் அடுத்த கடைக்கு நகர்ந்தார்கள்.

‘‘சாயீ...’’
‘‘என்ன தாத்யா?’’
‘‘இந்த வணிகர்கள் பொய் சொல்லுகிறார்கள்’’
‘‘அல்லாவிற்கு எல்லாம் தெரியும். யார் யாரை எப்படி சமாளிப்பது என்பது அவருக்குத் தெரியும். வா, தனபால் சேட்ஜி கடைக்குப் போவோம்’’
கடையின் முன் வைத்தியர் குல்கர்னி நின்றிருந்தார். ‘‘வாருங்கள் சாயி மகராஜ்! மாலை வந்துவிட்டது. இந்நேரத்தில் எண்ணெய்ப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு எங்கே திரிகிறீர்கள்? தாத்யாவின் கையிலும் பெரிய பாத்திரம் தெரிகிறது... எதற்கு இதெல்லாம்?’’

‘‘இன்று தீபாவளி. மசூதியில் அகல் விளக்கு ஏற்றணும்.’’
‘‘எதற்கு? நீயோ இளைஞன், பிற மதத்தைச் சேர்ந்தவன். உனக்கு எதற்கு எங்கள் பண்டிகை மீது அக்கறை?’’
‘‘வைத்தியராஜ், கிணற்றுத் தவளையாட்டம் பேசாதீர்கள். எந்த மதத்தில் சிறப்பு அம்சங்கள் இருக்கிறதோ, அதை மனிதர்கள் எடுத்துக்கொண்டு வழிபடுவதுதான் மனிதத் தன்மை. இன்று மசூதியில் எண்ணற்ற விளக்குகளை ஏற்றுவதால், இரண்டு மதங்களும் சங்கமித்து சந்தோஷமாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அவசியம் அதைக் காண வாருங்கள்.’’
‘‘ஓஹோ... அப்படியா? வருகிறேன்... வருகிறேன்... தீபோற்சவத்தைக் காண. நன்றாகப் பேசுகிறாயே... இப்படிப் பேசித்தானே ஜனங்களை மயக்கணும். தனபால் சேட், உங்களுடைய பங்கை அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுங்கள்...’’
‘‘என்ன சாயீ?’’
‘‘கொஞ்சம் எண்ணெய் தேவை...’’
‘‘எண்ணெய் இல்லை!’’

‘‘சந்தோஷம்... இன்று ஷீரடியில் எல்லாக் கடைகளிலும் எண்ணெய் காலியாகி விட்டது. என்ன ஆச்சரியம்? தாத்யா. மிச்சமிருக்கும் நாலைந்து கடைகளில் கேட்கலாம். எங்காவது கிடைக்கும் வா...’’

‘‘அடேய் பக்கீர்’’ - குல்கர்னி உற்சாகத்துடன் கத்தினார். ‘‘எண்ணெய் எங்கேயும் இல்லை. யாரும் கொடுக்கத் தயாராக இல்லை. எண்ணெய் இல்லையென்றால், விளக்கை எப்படி ஏற்றுவாய்? விளக்கு எரியவில்லையென்றால், தீபோற்சவம் எப்படிக் கொண்டாடுவாய்? பாவம், அந்தக் குயவனிடமிருந்து நிறைய அகல் விளக்குகள் வாங்கியிருக்கிறாய்... எல்லா சிரமும் வீண். அவ்வளவும் தண்ணீரில் கரைந்துவிடும்.’’

‘‘வைத்தியரே, அல்லாவிற்கு எல்லாம் தெரியும், எந்த சிரமும் வீண் போகாது! எண்ணெய் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தீப உற்சவம் நடக்கும். நீங்கள் மறக்காமல் அதைப் பார்க்க வாருங்கள். தனபால் சேட், நீங்களும் மற்ற வணிகர்களும் அவசியம் வாருங்கள்.’’
மற்ற கடைகளிலும்கூட அதே அனுபவம்தான். சாயியும் தாத்யாவும் வெறுங்கையுடன் மசூதிக்குத் திரும்பினார்கள்.
‘‘சாயீ, என்னுடைய உற்சாகமெல்லாம் பறந்துவிட்டது. என்ன தீபாவளி, என்ன விளக்கு வேண்டிக் கிடக்கு?’’ - வெறுப்புடன் பேசினார் தாத்யா.

‘‘அல்லாவிடம் நம்பிக்கை வை தாத்யா. சங்கட சமயத்தில் கடவுளை ஒரு போதும் தூஷிக்கக் கூடாது. எந்த நிலையிலும் மன அமைதியை இழக்கக்கூடாது. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.’’

அங்கே குல்கர்னியும் தனபாலும் கை தட்டிப் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘தனபால், இன்று உங்களுடைய சமூகம் நல்ல வேலை செய்தீர்கள். இப்பொழுது அந்தப் பைத்தியக்கார பக்கீரின் மோசடி தெரிந்துவிடும். சரி, நடங்கள் மசூதியை நோக்கி! எண்ணெய் இல்லாத தீபாவளியைப் பார்க்க. அந்தக் கூத்தைக் கண்டு களிப்போம்.’’
‘‘ஆமாம்.’’
‘‘உங்களுடன் எல்லா வணிகர்களையும் கடைகளை மூடி மசூதிக்கு வரச் சொல்லுங்கள்...’’
எல்லோரும் கூட்டமாகச் சென்றார்கள்.

யாரும் சாயிக்கு ஒரு சொட்டு எண்ணெய்கூட கொடுக்கவில்லை என்பதை அறிந்து ஜனங்கள் கண்டபடி வணிகர்களைத் திட்டினார்கள். சாயி அவர்களை அடக்கினார். ‘‘எல்லோரும் நல்லவர்கள். அவர்களைத் திட்டாதீர்கள். நேற்றுவரை எனக்கு இலவசமாக எண்ணெய் கொடுத்தார்கள். இன்று இல்லை என்று சொன்னதால் திட்டுவது நல்லதல்ல.’’
மாலை முடிந்து இருள் மெல்லக் கவ்வியது.
‘‘தாத்யா, மகல்சாபதி... எல்லோரும் வாருங்கள். இந்த டிரம்மில் தண்ணீர் ஊற்றுங்கள்.’’

தாத்யா அப்படியே செய்தார்.
‘‘சகோதரிகளே, முன்னே வாருங்கள். ஒவ்வொரு அகலிலும் திரி இருக்கிறது. விளக்கில் தண்ணீர் விட்டு, திரியையும் நனையுங்கள்.’’
‘‘தண்ணீரிலா?’’
‘‘ஆமாம். அதில் சந்தேகமே வேண்டாம்.’’
‘‘சரி... அப்படியே செய்கிறோம்.’’
‘‘சரியான முட்டாள்! யாராவது தண்ணீரால் விளக்கை எரிக்க முடியுமா?’’
‘‘இந்த பக்கீர் ஒரு பைத்தியம்...’’
ஊர் மக்கள் இஷ்டப்படி பேசலானார்கள்.

சாயி தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சி எடுத்துப் பற்ற வைத்து, திரியின் அருகில் சென்று கொளுத்தினார். என்ன ஆச்சரியம்! கற்பூரம் பற்றிக் கொள்வது போல திரி பிரகாசமாக எரிந்தது. இப்படியே எல்லா விளக்குகளையும் ஏற்றினார், எண்ணிலடங்கா ஜோதி அங்கு பரவியது.
மக்கள் இதைக் கண்டு வாயடைத்து நின்றார்கள். பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தார்கள்.

நீரும் நெருப்பும் ஜென்ம விரோதிகள். நெருப்பை அணைக்க நீர். ஆனால், இங்கு இரண்டும் ஒன்றாகக் கலந்தன. இருவரும் நண்பர்கள் ஆனார்கள். அவர்களின் சிநேகிதத்தை சாயி நிர்மாணம் செய்தார்.

தண்ணீரில் திரிகள் நிதானமாக எரிந்தன. மசூதியும் சுற்றியுள்ள இடங்களும் விளக்குகளினால் பிரகாசமடைந்தன. வானிலிருந்து நட்சத்திர மண்டலமே கீழே இறங்கி வந்து, சாயியை வாழ்த்தி நடனம் செய்வது போல இருந்தது. மக்களுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. எல்லோரும் உற்சாகம் கொண்டு. ‘‘சாய்பாபா கீ ஜெய்!’’ என்று கத்தினார்கள். அதுவரை வெறுமனே சாயியாக இருந்தவர், ‘சாய்பாபா’ ஆனார். இந்த அற்புதச் செயலைக் கண்டு வணிகர்கள் வைத்தியரைத் திட்ட ஆரம்பித்தனர்.

‘‘வைத்தியரே...’’
‘‘என்ன தனபால்?’’ - ஒளிவிடும் விளக்கின் பிரகாசத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டான் வைத்தியன்.

‘‘இந்த அற்புதம் எப்படி..?’’
‘‘அதைத்தான் நானும் பார்க்கிறேன்...’’
‘‘சாயி ஒரு மகான். கபட வேஷதாரி அல்ல. தண்ணீரால் விளக்கை எரிய வைக்கிறார். நாங்கள் பெரிய பாவம் செய்துவிட்டோம், இந்த சாதுவிற்கு!’’
‘‘நம் மூளை மழுங்கிவிட்டது. இந்த சாதுவின் மகத்துவத்தை நாம் அறியவில்லை...’’
‘‘சரி கிளம்புங்கள், அவரிடம் மன்னிப்புக் கேட்போம்’’ - எல்லா வணிகர்களும் ஒன்றாக வந்து, ‘‘சாயீ, நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னியுங்கள்’’ என்று அவர் காலில் விழுந்தார்கள்.
அவர்களை எழுப்பி சாயிபாபா சொன்னார், ‘‘இன்று தீபாவளி. உங்களுடைய மனதில் சத்தியம் என்கிற வெளிச்சம் படட்டும். பாவம் அகன்றது. சந்தோஷமாக இருங்கள்...’’
விளக்குகள் இரவு முழுவதும் எரிந்தன. ஜனங்களும் பாடியும் பஜன் செய்தும், ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

ஜவ்ஹார் அலி ஒரு முஸ்லிம் பக்கீர். நல்ல உயரம், கட்டுமஸ்தான உடம்பு. இரண்டு மடங்கு பெருத்த உடல். எப்படி உருவமோ அப்படி நாக்கும்! அவருடைய நாக்கில் வார்த்தைகள் விளையாடும். நிறைய படித்தவர். பேசிக்கொண்டே இருக்கும்போது சர்வசாதாரணமாக குரானிலிருந்து வார்த்தைகளைச் சொல்லி ஆளை வீழ்த்திவிடும் சாமர்த்தியக்காரர். சிறந்த புத்திமான், புதுமை விரும்பி. ஆனால், அவருக்கு பேசிப் பேசியே எதிராளியை வீழ்த்துவதில் ஓர் ஈர்ப்பு.

பச்சை நிற நீண்ட அங்கியும் கமீஸும், தலையில் நமாஸ் செய்வதற்காக அணியும் வெள்ளைத் தொப்பியும் அணிந்திருப்பது அவருடைய போஷாக்கான உடலுக்குக் கவர்ச்சி கொடுக்கும். தாடி வளர்த்திருந்தார். வெள்ளை நிறத்தை மறைக்க, தாடியில் மெஹந்தி தடவியிருந்தார். அது அவருடைய வெள்ளைநிற முகத்திற்கு மேலும் சோபையைக் கூட்டியது.

அவருடைய கையில் மணி கோர்த்த மாலை இருக்கும். ஏதாவது மந்திரம் சொல்லிக்கொண்டே மணியை உருட்டுவார். ஜவ்ஹார் அலிக்கு சொந்த ஊர் அகமத் நகர். ஷீரடியிலிருந்து சிறிது தூரத்திலேயே அந்த ஊர் இருந்தது. ஆனால், அவர் ஓர் இடத்தில்கூட நிரந்தரமாகத் தங்காமல் சுற்றிக்கொண்டிருப்பார். ‘தான் ஒரு பெரிய குரு ஆக வேண்டும்; தனக்கு சிஷ்யர்கள் நிறைய இருக்க வேண்டும்’ என்கிற ஆசை அவருக்கு.

ஆனால் அகமத் நகர்வாசிகள் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. வேறொரு கிராமத்திற்குச் சென்றால் தன்னை மதிப்பார்கள், மரியாதை செய்வார்கள் என்று எண்ணி, ஷீரடி அருகிலுள்ள ராஹாந்த் என்னும் கிராமத்திற்குக் குடி பெயர்ந்தார். அது சின்ன ஊர். வெகுளியான மக்கள். கடவுளைத் தொழும் பக்தர்கள். ஜவ்ஹார் அலி தன் பேச்சு சாதுர்யத்தினால் இவர்களைக் கவர எண்ணம் கொண்டார். ஊரின் எல்லையிலுள்ள வீரபத்திர கோயிலின் அருகில் காலியாக இருந்த இடத்தில் ஒரு ஜமுக்காளம் விரித்து, அதில் அமர்ந்து தன் எதிரே குரான் புத்தகத்தைப் பிரித்து வைத்தார். தன்னிடமிருந்த சிறிய, பெரிய புத்தகங்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தார். மண்டியிட்டு நமாஸ் செய்தார்.

சிறிது நேரத்தில் மக்கள் கூடினார்கள். அவரைப் பற்றி அறிய ஆவல் கொண்டார்கள். யார் இவர்? எங்கிருந்து வந்தார்? நம்ம ஊருக்கு வந்ததன் நோக்கம் என்ன? பார்ப்பதற்கு மிகுந்த பலசாலியாகத் தெரிகிறாரே? முகத்தில் தேஜஸ் தெரிகிறதே... ஞானியாக இருப்பாரோ? ‘நமாஸ் முடிந்ததும் எல்லாவற்றையும் கேட்கலாம்’ என்று காத்திருந்தார்கள்.
(தொடரும்...)
படங்கள்: செல்வன்


தமிழகத்தில் சாயி குழந்தை வரம் தரும் கொல்லப்பட்டி சாயி!



சேலம் சட்டக் கல்லூரி அருகே, கொல்லப்பட்டியில் உள்ள சாயி கோயில், ஒரு சர்வமதக் கோயிலாக சகலரிடமும் சாயியைக் கொண்டு சேர்க்கிறது. இக்கோயிலின் தற்போதைய நிர்வாகியான ஷமா பார்த்தசாரதியிடம் பேசினோம்.

‘‘சேலத்தின் பிரபல வக்கீலாக இருந்தவர், எங்கள் அப்பா எஸ்.என்.சீனிவாசன். ஷீரடி கோயில் பிரபலமாவதற்கு முன்பே அப்பாவும் அம்மாவும் பல முறை அங்கு போய் வந்திருக்கிறார்கள். ஒருநாள் தமிழகத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், சாயி படம் ஒன்றை எங்களுக்குப் பரிசாகக் கொடுக்க, அதை வீட்டில் வைத்து வணங்கி வந்தோம். பல அற்புதப் பலன்களை சாயி எங்களுக்குத் தந்தார். எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அப்பாவும் அம்மாவும் இந்தக் கோயிலைக் கட்டினார்கள்.

1999ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், இன்று எல்லா மதத்தினரையும் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிறுதோறும் சேலத்திலுள்ள பல ஆதரவற்றோர் இல்லங்களுக்கு இந்தக் கோயில் சார்பாக மதிய உணவு வழங்கப்படுகிறது. குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு இங்குள்ள சாயி எப்போதும் கை விரித்ததில்லை’’ என்கிறார் ஷமா. காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 5 முதல் 9 மணி வரையிலும் இந்தக் கோயில் திறந்திருக்கிறது.
ஆலயத் தொடர்புக்கு: 9042665069, 9443344566