வளைகுடா வைரஸ்!




இந்தியாவை அச்சுறுத்தும் புதிய எமன்

இம்முறை ஹஜ் புனித யாத்திரைக்கு முன்பாக சவூதி அரேபிய அரசு உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறது. ‘‘கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் எல்லோரும் தங்கள் புனித யாத்திரையை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போடுங்கள்’’ என்கிறது அந்த வேண்டுகோள். காரணம், ‘மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கரோனாவைரஸ்’ எனப்படும் வளைகுடா வைரஸ் பீதி. சார்ஸ், பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சலைவிட உலகை அதிகம் அச்சுறுத்துகிறது இந்த வைரஸ் பீதி. மற்ற தொற்றுநோய்களைவிட இதில் உயிரிழக்கும் அபாயம் அதிகம்!

இயற்கைச் சூழலில் இந்த வைரஸ் எங்கே வசிக்கிறது? தெரியவில்லை. எப்படி மனிதர்களைத் தொற்றுகிறது? தெரியவில்லை. இது தொற்றாமல் இருக்க என்ன தற்காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்? தெரியவில்லை. தொற்றினால் சிகிச்சைக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும்? தெரியவில்லை. கடந்த 10 மாதங்களாக உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தொடர்பான தேடல்களில் எல்லா நிலைகளிலும் தோல்வியையே சந்தித்து வருகிறது. அதனால்தான், ‘‘ஒட்டுமொத்த உலகத்துக்கே இந்த வைரஸ் மோசமான அச்சுறுத்தல்’’ என சொல்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் மார்கரெட் சான்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி... சவூதி அரேபியா வின் ஜெட்டா நகரில் 60 வயது முதியவர் ஒருவர் மருத்துவ மனையில் அட்மிட் ஆனார். ‘‘ஏழு நாட்களாக ஜுரம், இருமல், சளித்தொல்லை அதிகமாக இருக்கிறது, லேசாக வயிற்றையும் வலிக்கிறது, மூச்சுவிட சிரமமாக இருக்கிறது’’ என்றவர், அடுத்த நான்கு நாட்களுக்குள் நிமோனியா தாக்கி, சிறுநீரகம் செயலிழந்து செத்துப் போனார். சாதாரண காய்ச்சல் அறிகுறியோடுதானே வந்தார் என சந்தேகப்பட்டு, அவரைத் தாக்கிய வைரஸை ஆராய்ந்தார்கள்.

கிட்டத்தட்ட சார்ஸ் வைரஸ் போல இருந்தாலும், அதிலிருந்து தனித்துவமான வடிவத்தோடு வித்தியாசப்பட்டு இருந்தது இந்த வைரஸ். அடுத்தடுத்து அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், கத்தார் என வளைகுடா நாடுகளிலேயே இந்த வைரஸ் தாக்கியதால், ‘வளைகுடா வைரஸ்’ என நாமகரணம் சூட்டி விட்டார்கள். இதைத் தாண்டியும் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி என ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் சிலரைத் தாக்கியிருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதோ காரணத்துக்காக வளைகுடா வந்தவர்களாக இருந்தார்கள். இதுவரை இந்த வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை, 45. ஆனால் பிரச்னை என்னவென்றால், இந்த வைரஸ் தாக்கியதில் 60 சதவீதம் பேர் செத்துப் போய் விட்டார்கள். நோய் தாக்கி விட்டால், குணமடையும் சான்ஸ் குறைவு என்பதே இதை ஆபத்தானதாக மாற்றியிருக்கிறது.



குறிப்பாக வளைகுடாவில் தாக்கியதால், ‘ஒட்டகங்களிலிருந்து பரவியதா’ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், சில வௌவால்களில் இப்படி ஒரு வைரஸ் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனாலும், அதுவும் வளைகுடா வைரஸும் ஒன்றுதானா என்ற சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
‘‘ஏதோ விலங்குகளிடமிருந்து இது மனிதர்களுக்குத் தொற்றிக் கொண்டது. ஆனால், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது. அதனால் ஆபத்தில்லை’’ என உலக சுகாதார நிறுவனம் முதலில் சொன்னது. சவூதியில் இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பணியாளர்கள் பலருக்கும் தொற்றியது. இப்போது சிகிச்சை தரவே பயப்படுகிறார்கள்.

மக்கள் நெரிசல் இருக்கும் நாடுகளில் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவக்கூடும் என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது. வளைகுடா நாடுகளோடு தொடர்புடையவர்களுக்கு பாதிப்பு வருகிறது. நம்ம ஊரில் நிறைய பேர் வேலைச்சூழல் காரணமாக போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். அவர்கள் வழியாக இங்கும் அந்த நோய்த்தொற்று வந்தால்... நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது!
- அகஸ்டஸ்