கர்ணனின் கவசம்





‘‘வெளிநாட்டுக்காரங்க மாதிரி இருக்கீங்க... இங்க என்ன பண்றீங்க? உள்ள எப்படி போனீங்க..?’’ - ஃபாஸ்ட்டையும், சூ யென்னையும் பார்த்து ஆங்கிலத்தில் அதட்டினான் குள்ள மனிதன்.

‘‘எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம். கிணத்து நீர் மேல வந்துக்கிட்டு இருக்கு பார்...’’ - கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மத்திம உயரம் கொண்ட மனிதன் கத்தினான்.

அதன்பிறகு குள்ள மனிதன் தாமதிக்கவில்லை. தன் இரு கைகளாலும் ஃபாஸ்ட்டையும், சூ யென்னையும் உள்ளே தள்ளிவிட்டு தானும் நுழைந்தான். தொடர்ந்து மீதியிருந்த எட்டு பேரும் அந்த மரக் கதவினுள் பாய்ந்தார்கள். கடைசியாக மத்திம மனிதன் உள்ளே நுழையவும், கீழிருந்து மேலே ஏறிய கிணற்று நீர், அந்தக் கதவைத் தொடவும் சரியாக இருந்தது. சற்றும் தாமதிக்காமல் மரக் கதவை மூடினான்.

உள்ளே கும்மிருட்டு. தொலைவில் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது புள்ளியாகத் தெரிந்தது. சில நிமிடங்கள்தான். அதன் பின்னர், இருட்டு பழகியது. சுற்றுப்புறங்களையும் ஆராய முடிந்தது. கோவணம் போல் நீளமான பாதை. பாறையைக் குடைந்து யாரோ இதை உருவாக்கியிருக்க வேண்டும். கரடுமுரடாக இருந்தபோதும், நடைபாதை வழுவழு என்றே இருந்தது.

ஃபாஸ்ட்டும், சூ யென்னும் செய்வதறியாமல் கல் சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்கள். இருவரது சட்டையையும் தன் இரு கைகளாலும் குள்ள மனிதன் கொத்தாகப் பிடித்திருந்தான். எஞ்சிய எட்டு பேரும் அவர்களைச் சூழ்ந்திருந்தார்கள்.

ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை மீண்டும் தெளிவான ஆங்கிலத்தில் குள்ள மனிதன் கேட்டான். ‘‘இங்க எப்படி வந்தீங்க..?’’
‘‘தெரியலை...’’ தமிழிலேயே பதில் அளித்தான் ஃபாஸ்ட்.

‘‘உனக்கு தமிழ் தெரியுமா?’’ உயரமான மனிதன் கேட்டான்.
‘‘தெரியும்...’’
‘‘அப்ப பதிலை சொல்லு...’’ - தன் முஷ்டியை உயர்த்தினான்.
‘‘நிஜமாவே எங்களுக்குத் தெரியாது...’’ - அதுவரை மவுனமாக இருந்த சூ யென் பதில் சொன்னான்.
‘‘இவனுக்கும் தமிழ் தெரிஞ்சிருக்கு...’’ என்றபடி தன் பிடியைத் தளர்த்தினான் குள்ள மனிதன். ஃபாஸ்ட்டும், சூ யென்னும் கசங்கிய சட்டையை சரிசெய்தபடியே வாய் வழியாக மூச்சுவிட்டார்கள்.

அது அதிக நேரம் நீடிக்கவில்லை. மத்திம உயரம் கொண்ட மனிதன், ஃபாஸ்ட்டின் வலது கை மணிக்கட்டைப் பிடித்துத் திருகினான். அடுத்த நொடி ஃபாஸ்ட் தரையில் விழுந்தான். அவன் உதடுகள் கோணின. கை, கால்கள் இழுத்துக் கொண்டன. பேச்சு வரவில்லை. எச்சில் தன் போக்கில் ஒழுக ஆரம்பித்தது.

‘‘தெரியாமயா இங்க வந்தீங்க? உண்மையை சொல்லிடு. இல்லைனா இதே நிலைதான் உனக்கும்...’’ - சூ யென்னை ஏறிட்டபடி, பற்களை நறநறத்துக் கொண்டு சொற்களை உதிர்த்தான் குள்ள மனிதன்.

மெல்ல மெல்ல ஃபாஸ்ட் டின் கண்கள் சொருக ஆரம்பித்தன. ஓரக் கண்ணால் இதைப் பார்த்த சூ யென் நிலை குலைந்தான். ‘‘சத்தியமா எங்க ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. நாங்க கப்பல்ல பயணம் செஞ்சுட்டு இருந்தோம்...’’
‘‘எந்தப் பக்கமா?’’ - உயரமான மனிதன் அதட்டினான்.

அரை விநாடி மௌனமாக இருந்த சூ யென், வேறு வழியின்றி உண்மையைச் சொன்னான். ‘‘துவாரகை பக்கமா...’’
ஒன்பது பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘பொக்கிஷத்தை தேடி வந்த நீங்க தஞ்சாவூர்ல சண்டை போட்டுட்டு இருந்தீங்க. அப்படியிருக்கிறப்ப ஏன் துவாரகை பக்கமா போனீங்க?’’ - கேட்டபடியே மத்திம உயரம் கொண்ட மனிதன், சூ யென்னை நெருங்கினான்.

சீனனுக்கு வியர்த்தது. எல்லாம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் வேறு கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இவர்கள் உதவியில்லாமல் இங்கிருந்து நகர முடியாது. எனவே நடந்ததை மறைக்காமல் சொல்லிவிட வேண்டியதுதான்.

‘‘சத்தியமா தெரியாது. என்னை நம்புங்க. மயக்கம் தெளிஞ்சு கண்விழிச்சப்ப கப்பல்ல நானும் இவனும் படுத்துட்டு இருந்தோம். கடற்கொள்ளையர்கள் எங்க கப்பலை தாக்கினாங்க. அப்ப அஞ்சு தலை நாகத்தோட வால் எங்க கப்பலை சுத்திச்சு...’’
‘‘காளிங்கனை சொல்றான்...’’ - குள்ள மனிதன் இடைமறித்ததை மற்றவர்கள் ஆமோதித்தார்கள்.
‘‘மேல சொல்லு...’’ உயரமான மனிதன் கட்டளையிட, சூ யென் தொடர்ந்தான்.

‘‘நாங்க கப்பலோட மூழ்கினோம். எங்க ரெண்டு பேருக்கும் நினைவு தப்பிடுச்சு. கண்விழிச்சு பார்த்தப்ப இங்க இருந்தோம்...’’ என மரக்கதவை ஒட்டிய பகுதியை சுட்டிக் காட்டினான்.
‘‘அப்புறம் வெளில வர்றதுக்காக கதவைத் திறந்தீங்க
ளாக்கும்...’’ அலட்சியத்துடன் கேட்டான் குள்ள மனிதன்.

‘‘ஆமா...’’
‘‘நீ சொல்றது உண்மைனு நாங்க எப்படி நம்பறது?’’ - சூ யென்னின் வலது கை மணிக்கட்டை பிடித்தபடியே மத்திம உயரம் கொண்ட மனிதன் கேட்டான். சூ யென்னின் முகத்தில் அச்சம் படர ஆரம்பித்தது.
‘‘அவன ஒண்ணும் பண்ணாத. இப்போதைக்கு அவன் சொல்றது உண்மைன்னே நம்புவோம். இவனையும் எழுப்பிடு. முதல்ல இங்கேர்ந்து தப்பிக்கிற வழியைப் பார்ப்போம்...’’ என்றான் குள்ள மனிதன்.

‘‘அதுவும் சரிதான். நம்ம ஒன்பது பேரை மீறி, இவங்க ரெண்டு பேரால என்ன செஞ்சுட முடியும்?’’ என்றான் உயரமான
மனிதன்.
இதன் பிறகு சூ யென்னின் மணிக்கட்டிலிருந்து தன் கைகளை எடுத்த மத்திம உயரம் கொண்ட மனிதன், கீழே குனிந்தான். ஃபாஸ்ட்டின் இடது கை மணிக்கட்டைப் பிடித்துத் திருகினான். உறக்கத்திலிருந்து விழித்ததுபோல் ஃபாஸ்ட் கண் திறந்தான்.
‘‘எழுந்திரு. மரக்கதவை திறந்து நம்மால வெளில போக முடியாது. அதனால விளக்கு பக்கமா போய்ப் பார்ப்போம். நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க...’’ - குள்ள மனிதன்
கட்டளையிட்டான்.

மறுபேச்சு பேசாமல் ஃபாஸ்ட்டும், சூ யென்னும் விளக்கை குறி வைத்து முன்னால் நடந்தார்கள். ஒன்பது பேரும் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள். ஆனால், நிமிடங்கள்தான் கரைந்ததே தவிர, விளக்கு இருக்கும் இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை. மரக்கதவுக்கு அருகிலிருந்து பார்த்தபோது சற்றுத் தொலைவில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அதை நோக்கி அவர்கள் நகர நகர, அந்த விளக்கும் நகர்ந்து கொண்டிருந்தது.

‘‘இது என்ன மாயம்?’’ - ஃபாஸ்ட் வியப்புடன் திரும்பினான்.
‘‘எதுவா இருந்தா உனக்கென்ன? முன்னாடி பார்த்து நட...’’ என்றான் உயரமான
மனிதன்.

நடந்தான். நடந்தார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு விளக்கு நகர்வது நின்றது. அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்கள் விளக்கை நெருங்கினார்கள்.
ஆனால் -
தொட முடியவில்லை. விளக்கு அப்படியே மேல் நோக்கி உயர்ந்து கூரையைத் தொட்டு நின்றது. சட்டென்று முன்னோக்கி வந்த குள்ள மனிதன், தன் இரு கைகளையும் விரித்தான். ‘‘மேற்கொண்டு யாரும் நகராதீங்க...’’ என கத்தினான்.
ஃபாஸ்ட்டுக்கும்,சூயென்னுக் கும் குள்ள மனிதன் ஏன் இப்படிச் சொல்கிறான் என்று புரியவில்லை. ஆனால், மற்ற எட்டு பேருக்கும் அந்தக் கூற்றுக்குப் பின்னால் இருந்த பொருள் நன்றாக விளங்கியது.

எட்டு பேரின் பார்வையும், குள்ள மனிதன் ஏறிட்ட திசையையே நோக்கியது. கூரையைத் தொட்டு நின்ற விளக்கைச் சுற்றிலும் ஏழு இரும்புச் சங்கிலிகள் குறிப்பிட்ட இடைவெளியில் தொங்கிக் கொண்டிருந்தன. ஆம், அவை
யனைத்தும் ஆலமர விழுதைப் போல் கீழ் நோக்கி இறங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தன. கூர்மையான பற்களைக் கொண்ட ஏழு சின்ன சக்கரங்கள், அந்த ஏழு சங்கிலிகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் பிணைக்கப்பட்டிருந்தன. ஒன்று மேலே என்றால், அடுத்தது கொஞ்சம் தள்ளி கீழே. மூன்றாவது சக்கரம், மூன்றாவது சங்கிலியின் நடுப்பாகத்திலும், நான்காவது சக்கரம் சற்றுத் தள்ளியுமாக அமைந்திருந்தது. இதனடிப்படையில் ஏழாவது சக்கரம், ஏழாவது சங்கிலியின் நுனியில் இருந்தது.
‘‘புரிஞ்சுதா?’’ குள்ளமான மனிதன் கேட்டான். எட்டு பேரும் தலையசைத்தார்கள். ஃபாஸ்ட்டும், சூ யென்னும் மட்டும் திருதிருவென விழித்தார்கள். அவர்கள் இருவரையும் மற்றவர்கள் பொருட்
படுத்தவில்லை.

குள்ள மனிதன் சுற்றிலும் பார்த்தான். பாறைகளாலான வட்டமான கூடம். அந்த ஏழு சங்கிலிகளுக்கும், தாங்கள் நிற்கும் இடத்துக்கும் எவ்வளவு தூரமிருக்கும்?
‘கோபி பாக்யா மதுவ்ரதா; சிருங்கிசோ தாதி சந்திகா; கால ஜீவிதா கடவா; கால ஹலா ரசந்தரா...’ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, விட்டத்தை அளந்தான். அவன் கண்கள் பளிச்சிட்டன.
‘‘ஆரம்பிக்கலாம்...’’ என்றபடி மத்திம உயரம் கொண்ட மனிதனிடம் செய்கை செய்தான். தலையசைத்தவன், மெல்ல அடியெடுத்து வைத்து குள்ள மனிதனின் அருகில் வந்தான். தன் தலையிலிருந்து ஒரு உரோமத்தை மிக கவனமாக வேருடன் பிடுங்கி, தனக்கு முன்னால் அந்தக் கூடத்தில் எறிந்தான். அந்த உரோமம், சட்டென்று ஒரு மனிதனின் வடிவத்தை எடுத்தது.

இடுப்பைக் குனிந்து மத்திம உயரம் கொண்ட மனிதனை வணங்கிய அந்த உரோம மனிதன், முன்னோக்கி ஓரடி எடுத்து வைத்தான். அடுத்த மைக்ரோ நொடியே அந்த விபரீதம் நடந்தது. விழுதைப் போல் தொங்கிக் கொண்டிருந்த அந்த ஏழு இரும்புச் சங்கிலிகளும் கரகரவென சுற்ற ஆரம்பித்தன. வேகம் அதிகரிக்க அதிகரிக்க... தரையில் உராய்ந்து கொண்டிருந்த இரும்புச் சங்கிலிகள் மெல்ல மெல்ல உயரத் தொடங்கின. ஒரு கட்டத்துக்குப் பிறகு தரையில் சுற்றும் சங்கு சக்கரம் போல் அந்த ஏழு சங்கிலிகளும் அந்தக் கூடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஒவ்வொரு சங்கிலியிலும் பிணைக்கப்பட்டிருந்த கூர்மையான பற்கள் கொண்ட சின்னச் சின்ன சக்கரங்கள், உரோம மனிதனின் உடலை உராய்ந்து அவனைக் கூறுகூறாக வெட்டிப் போட்டன.
இதைப் பார்த்த ஃபாஸ்ட்டும், சூ யென்னும் நிலை குலைந்தார்கள். ஏன் யாரையும் நகர வேண்டாம் என குள்ள மனிதன் எச்சரித்தான் என்பது தெளிவாகப் புரிந்தது. தரையுடன் இணைக்கப்பட்ட எந்திரப் பொறி. அதனால்தான் விளக்கும் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போதும் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் சங்கிலிகள் சுற்றுவதும் அந்தப் பொறி அமைப்பால்தான்.

இனி என்ன செய்வது என அச்சத்துடன் குள்ள மனிதனை ஏறிட்டார்கள். அவன் இவர்கள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சங்கிலிகளின் சுழற்சியையும், சக்கரங்களின் இடைவெளியையும் மனதுக்குள் கணக்கிட்டான். உரோம மனிதன் துண்டு துண்டாக வெட்டுப்பட்டு கீழே விழுந்த நேரத்தில் முற்றிலுமாக சங்கிலிகளின் வேகத்தையும், பற்சக்கரத்தின் தூரத்தையும் வேகத்தையும் அறிந்துவிட்டான். அதன் பிறகு இமைப்பொழுதும் தாமதிக்கவில்லை.

அம்பைப் போல் சங்கிலிகளின் இடைவெளியில் பாய்ந்த குள்ள மனிதன், விளக்கை அடைந்து அதை அறுத்தான். செங்குத்தாகக் கீழ் நோக்கிச் சென்ற விளக்கு நேராக முரசு ஒன்றின் மீது விழுந்தது. இதனால் அதிர்ந்த முரசின் ஒலி, கூடமெங்கும் எதிரொலித்தது. இதனையடுத்து அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சங்கு சக்கரம் போல் சுற்றிய சங்கிலிகளின் வேகம் குறைந்து, பழையபடி அவை ஆலமர விழுதைப் போல் கொத்தாக அந்த முரசைச் சுற்றி அணைத்து நின்றன. அதே நேரம் கூடத்தின் நாற்
புறமும் விளக்குகள் சுடர் விட்டு எரிந்தன.
‘‘வாங்க...’’ என்று அழைத்தான் குள்ள மனிதன். பயத்துடன் ஃபாஸ்ட்டும், சூ யென்னும் குள்ள மனிதனை நோக்கிச் சென்றார்கள். ஆனால், அவர்களைப் பின்தொடர்ந்த எட்டு பேரும் அச்சமில்லாமல் நடந்தார்கள்.
முரசைச் சுற்றிலும் சுருள் வட்டப் பாதையில் கீழ் நோக்கிச் சென்ற படிக்கட்டில் முதலில் குள்ள மனிதன் இறங்கினான். அவனைத் தொடர்ந்து ஃபாஸ்ட், பிறகு சூ யென், அடுத்து உயரமான மனிதன் என மற்றவர்களும் ஒவ்வொருவராக இறங்கினார்கள். இருநூற்றியொரு படிக்கட்டுகளுக்குப் பிறகு செவ்வக வடிவிலான அறையொன்றை அடைந்தார்கள்.

அந்த அறையின் மறு மூலையில் ஒரு மனிதர் பத்மாசனமிட்டு தியானத்தில் அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்டதும் குள்ள மனிதன் நெகிழ்ந்தான். கண்கள் பனிக்க மண்டியிட்டபடியே, ‘‘இந்திரன் முன்னாடி நாம நின்னுக்கிட்டிருக்கோம்...’’ என்றான்.
ஃபாஸ்ட்டும், சூ யென்னும் கண்கள் விரிய ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘இந்திரனா?’’ - உயரமான மனிதன் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
‘‘ஆமா. தேவர்களின் தலைவர். கர்ணன்கிட்டேர்ந்து கவசத்தை வாங்கியவர் இவர்தான்!’’
(தொடரும்)