கைராசி : எஸ்.ராமன்
 ‘‘மகளோட வளைகாப்புக்கு அக்கம்பக்கத்தில் எல்லாரையும் கூப்பிட்டே. எதிர் வீட்டு மாடியில புதுசா குடி வந்திருக்கிறவளை மட்டும் விட்டுட்டியே... மறந்து போச்சாக்கா..?’’ - மங்காவிடம் கேட்டாள் தோழி.
‘‘இல்லடி, கல்யாணமாகி எட்டு வருஷமா அவளுக்குக் குழந்தை இல்லைன்னு அரசல் புரசலா கேள்விப்பட்டேன். அதனால நான் பழக்கமே வச்சுக்கல. அவ கையால எதுக்கு என் பொண்ணைத் தொட்டு, மஞ்சள் தடவி, வளை அடுக்கணும்... கைராசின்னு ஒண்ணு இருக்குல்ல? அதான் கூப்பிடாம விட்டுட்டேன்’’ என்றாள் மங்கா. நடுநிசியில் மங்காவின் பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்தது. ‘‘அடடா, சொன்ன தேதிக்கு முன்னாடியே வலி எடுத்துடுச்சே! நாம நம்பியிருந்த டாக்டர் திடீர்னு வெளியூருக்குப் போயிருக்காராமே...’’ எனப் புலம்பியவள், மகளை அரசு மருத்துவமனைக்கு பயத்துடனே அழைத்துப் போனாள்.
‘‘சுகப் பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. எல்லாம் கங்கா நர்ஸின் கைராசிதான். உங்க அதிர்ஷ்டம் அவங்க இன்னைக்கு நைட் டியூட்டியில் இருந்தாங்க’’ என்று ஆயா சந்தோஷமாக அறிவித்தவுடன், ஆனந்தக் கண்ணீரோடு நர்ஸுக்கு நன்றி சொல்ல காத்திருந்தாள் மங்கா.
பிரசவ வார்டிலிருந்து வெளியே வந்தது... சாட்சாத் எதிர் வீட்டுப் பெண்தான். ‘‘நீ... நீங்க நர்ஸா? உங்க கையால என் பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்ததுக்கு ரொம்ப நன்றிங்க!’’ என்றாள் மங்கா. எந்தச் சலனமும் இல்லாமல், புன்சிரிப்போடு நகர்ந்தாள் கங்கா நர்ஸ்.
|