‘க்ருங் தேப் மஹா நகோன் அமோன் ரத்தனா கோசின் மஹிந்தரா யுத்தயா மஹாடிலோக் போப் நுப் பராப்ட்ராட்சா தானிபுரி ரோம் உடோம் ராட்சானி வேட் மஹாசதான் அமோன் பிமான் அவடான் சதித் சகதத்தியா விஷ்ணுகாம் ப்ரசித்’.
- தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக்கிற்கு மன்னர்கள் வைத்த நீளமான பெயர் இதுதான். ‘தேவதைகளின் நகரம், அழிவற்றவர்களின் நகரம், நவரத்தினங்களின் நகரம், மன்னரின் தலைமையகம், அரண்மனைகள் இருக்கும் நகரம், இந்திரனின் கட்டளைப்படி விஸ்வகர்மா உருவாக்கிய கடவுள்களின் நகரம்’ என்று அர்த்தம். உச்சரித்தாலே நாக்கு சுளுக்கிக் கொள்ளும் இந்தப் பெயரை தாய்லாந்துவாசிகள் அநாயாசமாக சொல்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடலாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். இப்படி எத்தனையோ பெயர்கள் இருந்தாலும், ‘பாங்காக்’ என்பதே நிலைத்துவிட்டது. ‘நீரோடை அருகே இருக்கும் கிராமம்’ என அர்த்தம்.

ஆசிய நாடுகள் பலவற்றையும் பொறாமைப்பட வைக்கும் வளர்ச்சி அடைந்திருக்கிறது பாங்காக். ‘உலகின் சிறந்த சுற்றுலா நகரம்’ என்ற விருதை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வாங்கிய நகரம்; உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த நகரமாகவும் பெருமை பெற்றது. ஒரு குக்கிராமமாக இருந்து, இன்று இந்த நகரம் அடைந்திருக்கும் வளர்ச்சி அசாத்தியமானது.

தாய்லாந்தின் பெரிய ஆறான சோ ப்ராயா நதி கடலில் கலக்கும் முகத்துவாரம் பாங்காக். சதுப்பு நிலமாக இருந்த இடத்தை, கால்வாய்கள் வெட்டி விளைநிலமாக மாற்றினர் மக்கள். பர்மா அரசின் தொடர் தாக்குதல்களால், சாக்ரி வம்சத்தைச் சேர்ந்த தாய்லாந்து மன்னர்கள் பாதுகாப்பான தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தை தலைநகராக மாற்றினர். ஆற்றின் கரைகளிலும் கால்வாய்கள் ஓரமாகவும் வீடுகள் அமைந்தன. கடந்த நூற்றாண்டின் தொடக்கம் வரை பாங்காக்கில் பெரிதாக சாலைகள் கிடையாது. கால்வாய்களை ஒட்டி குடியிருப்புகள், கோயில்கள் இருக்கும். படகுகளில்தான் போக்குவரத்து. ‘கிழக்கின் வெனிஸ்’ என்பார்கள் பாங்காக்கை!

ஆரவாரமில்லாத எளிமையான நகரமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பிரிட்டிஷ், டச்சு, பிரெஞ்சு என எந்த ஆதிக்க சக்திகளாலும் அடிமைப்படுத்தப்படாத நாடு என்ற பெருமை தாய்லாந்துக்கு உண்டு. அதனால் தங்கள் பண்பாட்டைக் குலையாமல் காப்பாற்றி வர அவர்களால் முடிந்தது. விவசாயமும் மீன்பிடித்தலுமாக மக்கள் வாழ்க்கை நகர்த்த, அவர்களுக்கு பேராசைகள் ஏதும் தோன்றாமல் புத்தர் பார்த்துக் கொண்டார்.
எல்லாம் மாறியதற்குக் காரணம், வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த யுத்தம். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் ஆண்டுக்கணக்கில் வியட்நாமில் போர் செய்து களைத்துப் போனார்கள். மனதளவிலும் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டுமே! அவர்களுக்கு உற்சாகமூட்டும் இனிமையான சுற்றுலா தலத்தை அருகில் தேடினர் அமெரிக்க அதிகாரிகள். விமானத்தில் பறந்தபோது பாங்காக்கையும், தாய்லாந்தின் அழகிய பீச்களையும் பார்த்து திகைத்துப் போனார்கள். சுற்றுலா சொர்க்கமாகவும், செக்ஸ் டூரிசத்தின் மையப்புள்ளியாகவும் தாய்லாந்தை மாற்றியது அமெரிக்கர்கள்தான்!

ஆசியாவின் மையமான ஒரு புள்ளியில் பாங்காக் இருப்பது அதன்பின் எல்லோருக்கும் புரிந்தது. பல சர்வதேச நிறுவனங்கள், தங்களது ஆசிய கண்டத்துக்கான தலைமை அலுவலகத்தை பாங்காக்கில் அமைத்தன. இப்படியாக பாங்காக் செல்வச் செழிப்போடு வளர்ந்தது. இப்போது இந்த நகரத்தின் பரப்பு 1568 கிலோமீட்டர். நம் சென்னையைவிட எட்டரை மடங்கு பெரிய நகரம். கிட்டத்தட்ட 82 லட்சம் பேர் வாழ்கிறார்கள். தாய்லாந்துவாசிகளில் எட்டில் ஒருவர் பாங்காக்கில் வசிக்கிறார்.
பொருளாதார வலிமை பெற்ற நகராகிவிட்டாலும், சுற்றுலா நகரம் என்ற தனது அந்தஸ்தை பாங்காக் இழந்துவிடவில்லை. நானூறுக்கும் மேற்பட்ட புத்தர் கோயில்கள், கிராண்ட் பேலஸ் உள்ளிட்ட எத்தனையோ அரண்மனைகள், மியூசியங்கள், கோல்ஃப் மைதானங்கள், ஷாப்பிங் மால்கள், தாய் மசாஜ் சென்டர்கள் என உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இங்கு நிறைய விஷயங்கள் உள்ளன.

குழந்தைகளோடு சுற்றுலா வருபவர்களை குதூகலப்படுத்துவதற்காக பாங்காக்கின் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான கேளிக்கை பூங்காக்கள் வந்துவிட்டன. ‘சஃபாரி பார்க்’ அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆப்ரிக்க நாடுகளில் இருப்பதைப் போல ஏராளமான விலங்குகளை இங்கு வளர்க்கிறார்கள். சிங்கம், புலியில் ஆரம்பித்து மான்கள் வரை ஏராளமான இனங்கள். நம்ம ஊர் உயிரியல் பூங்காக்களில் ஒன்றிரண்டு என்ற எண்ணிக்கையில் பார்க்கிற ஒட்டகச்சிவிங்கிகள் ஏதோ ஆட்டுக்கூட்டம் போல நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இயல்பாக உயிரியல் பூங்காக்களில் இருக்கும் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என எதுவும் இல்லை. ஒட்டகச்சிவிங்கிக்கு உணவு தரலாம், புலிக்குட்டிக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் தரலாம், உராங் உட்டானுடன் தோளில் கை போட்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் காசு, பணம், துட்டு, மணி, மணி! டால்பின் ஷோவும், சினிமாவில் வருவது போன்ற சண்டைக்காட்சிகளை நேரடியாக நிகழ்த்திக் காட்டும் சாகச ஷோவும் இங்கு ஸ்பெஷல்!
‘சயாம் ஓஷன் வேர்ல்ட்’ தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நீர்வாழ் உயிரியல் பூங்கா. சுறா, ஆக்டோபஸ், கடல் டிராகன் என நானூறுக்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களைப் பார்க்கலாம். தண்ணீருக்கு அடியில் பத்தரை மீட்டர் அகலத்தில் இருக்கும் பாதைவழியே போய் பார்த்தால், நம் கண்களுக்கு அருகில் இவை தென்படும்.

இருபதே ஆண்டுகளின் அசுர வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, குறுகலான சாலைகளும் போக்குவரத்து நெரிசலும் இங்கே பெரும் பிரச்னை. சென்னை போலவே அடிக்கடி டிராஃபிக் ஜாம். ஆனால் யாரும் அநாவசியமாக ஹார்ன் அடிப்பதில்லை. அதுதான் ஒரே வித்தியாசம். சிக்கலைத் தவிர்க்க ‘எக்ஸ்பிரஸ் வே’ அமைத்து சுங்கச்சாவடிகள் வைத்திருக்கிறார்கள். காசு தருபவர்கள் நெரிசலில் சிக்காமல் போய்க்கொண்டே இருக்கலாம். இதுதவிர சுரங்க ரயில், ஸ்கை டிரெயின் என எல்லா வசதிகளும் இருந்தும் சமாளிக்க முடியவில்லை. சோ ப்ராயா நதியிலும் அதன் மூன்று கால்வாய்களிலும் ‘வாட்டர் பஸ்’ எனப்படும் படகு சர்வீஸும் உண்டு. டவுன் பஸ் போல வழியில் பல நிறுத்தங்களில் நின்று செல்லும். தினமும் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதிலும் எக்ஸ்பிரஸ், சாதாரண கட்டணம் என வித்தியாசங்கள் உண்டு. படகில் பறக்கும் கொடியின் கலரைப் பார்த்துக் கண்டுபிடிக்கிறார்கள்.

நெரிசல் இருந்தாலும் இங்கே குற்றங்கள் மிகக் குறைவு. இதனாலேயே உலக சுற்றுலாப் பயணிகளின் டார்லிங் ஆக இருக்கிறது பாங்காக். சுற்றுலா என்பது பாங்காக்கின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள், அவற்றில் பணிபுரிபவர்கள், அவர்களின் தேவைகளுக்காக பணிபுரிபவர்கள் என இது சங்கிலித் தொடராக நீள்கிறது. எந்த நேரத்திலும் ரோட்டோரக் கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் தாய்லாந்துவாசிகளையும், துணி வாங்க பேரம் பேசும் சுற்றுலாப் பயணிகளையும் இங்கே பார்க்கலாம். சுமார் ஒரு லட்சம் பிளாட்பாரக் கடைகள் இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். மட்டன் வறுவல் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் விற்கிறார்கள்.