கடைசி பக்கம்

இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. கடைவீதியில் மக்கள் நடமாட்டம் பெரிதும் குறைந்துவிட்டிருந்தது. அக்கம்பக்க கடைகளில் விளக்குகளை அணைத்துக் கொண்டிருந்தார்கள். நாமும் கடையை மூடிக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பலாமா என யோசித்தான் அந்த காய்கறிக் கடைக்காரன். சமீப நாட்களாக காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டிருந்ததால், பகலிலேயே வியாபாரம் அவ்வளவாக இல்லை. மொத்த விலை மார்க்கெட்டிலிருந்து தினம் தினம் வாங்கி வரும் காய்கறிகளை வீணாகாமல் விற்றுத் தீர்ப்பதற்குள் ‘போதும்... போதும்...’ என்றாகி விடுகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், பெரிதாக எதுவும் மிஞ்சுவதில்லை. விலைவாசி மீதும், மக்கள் மீதும் அவனுக்கு எரிச்சலாக வந்தது.
இப்படியே சிந்திப்பதை விட வீட்டுக்குப் போகலாம் என அவன் கடையை மூடுவதற்கு எழுந்தான். அப்போது தான் அவசரமாக கடைக்குள் நுழைந்தார் அந்தப் பெண்மணி. ஆபீசிலிருந்து லேட்டாக வீடு திரும்புகிறவர் போல! ‘‘தக்காளி கிலோ என்ன விலை?’’ என்றார். ‘‘நாற்பது ரூபாய்’’ என்றான் இவன்.
‘‘தெருமுனையில இருக்கற கடையில இருபது ரூபா சொன்னாங்க. நீங்க ரெண்டு மடங்கு சொல் றீங்களே?’’ - பெண்மணி அதிர்ச்சி காட்டினார். அவனுக்குள் இருந்த எரிச்சல் பொங்கி வெடித்தது... ‘‘அப்போ அங்கேயே வாங்கிக்க வேண்டியதுதானே! இங்கே ஏன் வந்தீங்க?’’ ‘‘அந்தக் கடையில தீர்ந்து போச்சாம்!’’ இப்போது அவன் நிதானமாகச் சொன்னான். ‘‘என் கடையிலும் தக்காளி தீர்ந்து போயிருந்தா, கிலோ பத்து ரூபாய்னு சொல்லியிருப்பேன். நீங்க பக்கத்து கடையில போய் சண்டை பிடிச்சிருக்கலாம்!’’ இல்லாத பொருளின் விலை, எப்போதுமே மலிவுதான்!
|