காய்கறிக்கு 36 பைசா, மளிகை சாமானுக்கு 17 பைசா, விறகுக்கு 27 பைசா... இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகிற பள்ளி மதிய உணவுத் திட்டத்தில், ஒரு 10ம் வகுப்பு மாணவனுக்கு அரசு ஒதுக்குகிற தொகை இது. இந்த சத்துணவை சாப்பிட்டுதான் 2020ல் இந்திய வல்லரசை சுமக்கும் வலிமையோடு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் நம் பிள்ளைகள். அம்மா உணவகத்தில் விற்கப்படுகிற ஒரு இட்லிக்கு 86 பைசாவை மானியமாகத் தருகிற அரசு, ஒரு குழந்தையின் சத்துணவுக்கு செலவிடுகிற தொகை இவ்வளவுதான்.
பீகாரில் சத்துணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சோகத்தால், தேசம் பதைபதைத்தது. நெய்வேலி, ஆம்பூர் என இங்கும் அடுத்தடுத்து பகீர் சம்பவங்கள். பல லட்சம் மாணவர்களின் நம்பிக்கையாக இருக்கிற சத்துணவுத் திட்டத்தில் அலட்சியமும், முறைகேடுகளும் தொடர்கதையாக நீள்கிறது.
குழந்தைகளின் படிப்பார்வத்தை பசி குலைத்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கில் 1925ல் சென்னை மேயராக இருந்த சர்.பிட்டி தியாகராயர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழைகளின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட காமராஜர், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். எம்.ஜி.ஆர் அதை மேம்படுத்தி சத்துணவுத் திட்டமாக உருமாற்றினார். கலைஞர் ஆட்சியில் சத்துணவோடு வாரத்துக்கு 5 முட்டைகள் (அல்லது வாழைப்பழம்) சேர்க்கப்பட்டன. தற்போது, சாதம்-குழம்பு, தினசரி ஒரு முட்டை, வாரத்தில் ஒருநாள் கொண்டைக்கடலை அல்லது, பச்சைப்பயறு, ஒருநாள் உருளைக்கிழங்கு வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைத்து, ஊட்டச்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் 1975ல் உருவாக்கப்பட்டன அங்கன்வாடி மையங்கள். இங்கு வாரத்தில் 6 நாட்கள் கலவை சாதமும், 3 நாட்கள் முட்டையும், வாரத்தில் ஒரு நாள் உருளைக்கிழங்கு, ஒருநாள் கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்கள் சத்துணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் படிப்படியாக அத்திட்டம் தேய்ந்து வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

‘‘அங்கன்வாடிகள் தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. பல நூறு கோடி ரூபாய் செலவாகியுள்ளது. என்ன விளைவு ஏற்பட்டுள்ளது..? கடந்த ஜூன் 12ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங், ‘இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறார்கள். இது தேசிய அவமானம், நான் வெட்கித் தலைகுனிகிறேன்’ என்று பேசியிருக்கிறார். ஒரு குழந்தைக்கு சத்துணவு வழங்க அரசு ஒதுக்குகிற தொகை(?) வெறும் ஐம்பத்தைந்தரை பைசா. இதில் காய்கறி, விறகு, மளிகைச்சாமான்கள் வாங்கி சமைக்க வேண்டும். இதுதான் சத்துணவாம்’’ என்று குமுறுகிறார் குழந்தைகள் உரிமைக்கான ‘தோழமை’ அமைப்பின் நிறுவனர் தேவநேயன்.
‘‘பல பகுதிகளில் சத்துணவை பிள்ளைகள் சாப்பிடுவதே இல்லை. வாங்கி கோழிக்கு போடுகிறார்கள்; அல்லது கீழே கொட்டுகிறார்கள். ருசியே இல்லாமல் தண்ணீரைப் போல இருக்கிறது சாம்பார். சத்துணவை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் இருக்கின்றன. ஆனால், எதுவும் செயல்பாட்டில் இல்லை. கல்வி உரிமைச்சட்டப்படி அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு. ஆனால், எந்தப் பள்ளியிலும் முறையாக அந்தக் குழு அமைக்கப்படவில்லை’’ என்கிறார் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன்.
தமிழகத்தில் 65 ஆயிரம் பள்ளிகளும், 50 ஆயிரம் அங்கன்வாடிகளும் உள்ளன. சுமார் 40 லட்சம் குழந்தைகள் சத்துணவை நம்பி பள்ளிக்கு வருகின்றன. அவர்களுக்கு பல்லி விழாத, புழுக்கள் இல்லாத, கெட்டுப் போகாத சத்துணவு சாத்தியமே இல்லையா? தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிச்சாமியிடம் கேட்டோம். மனிதர் கொதித்து விட்டார்.
‘‘5ம் வகுப்பு வரையிலான மாணவனுக்கு 70 பைசாவும், 6 முதல் 10 வரை படிக்கும் மாணவனுக்கு 80 பைசாவும் அரசு ஒதுக்குகிறது. விற்கிற விலைவாசியில் இதை வைத்து என்ன வாங்க முடியும்? 1 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள். அது வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், உப்பு, பயறு, கொண்டைக்கடலை போன்ற பொருட்கள் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் இருந்து வருகின்றன. இறக்கும்போதே 5 முதல் 8 கிலோ குறைவாக இருக்கின்றன. புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. 45 நாட்களுக்கான பொருட்களை ஸ்டாக் வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சில நாட்களிலேயே பூச்சி பிடித்து விடுகிறது.

ஒரு மாணவனுக்கு 150 கிராம் அரிசியும் 15 கிராம் பருப்பும் தருகிறார்கள். மூன்று வேக்காடு போட்டால்தான் அரிசியை வேக வைக்கவே முடியும். பருப்பும் தரமற்றதாக இருக்கிறது. எவ்வளவு வேக வைத்தாலும் விழித்துக்கொண்டே கிடக்கிறது. சில மையங்களுக்கு கேஸ் அடுப்பு கொடுத்தார்கள். சிலிண்டர் தீர்ந்தால் வாங்கித் தருவதில்லை. மீண்டும் விறகைத் தேட வேண்டும். முட்டையின் எடை 45 கிராம் இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலும் 25 கிராம்தான் இருக்கிறது. உற்பத்தியாகும் இடத்திலிருந்து பள்ளிக்கு வர 20 நாட்களுக்கு மேலாகிவிடுகிறது. தரமற்ற முட்டைகள் இந்த இடைவெளியை தாக்குப் பிடிப்பதில்லை. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கச் சொல்கிறார்கள். ஒரு குழந்தைக்கு ஒன்னே கால் ரூபாய். இந்த விலைக்கு எந்த ஊரில் வாழைப்பழம் விற்கிறது?
பல மையங்களில் கட்டிட வசதிகூட இல்லை. மரத்தடியில் சமைக்கிறார்கள். பல இடங்களில் சமையலறையும், ஸ்டாக் ரூமும் ஒன்றுதான். மின்சார வசதி கூட இல்லை. சுவரில் கரி படிந்துவிடுவதால் பல்லி இருந்தாலும் தெரியாது. ஒரு மையத்துக்கு 1 அமைப்பாளர், 1 சமையலர், 1 உதவியாளர் இருக்க வேண்டும். ஆனால் 27 ஆயிரம் பணியிடங்கள் காலி. ஒரு அமைப்பாளர் 3-4 மையங்களை பார்க்க வேண்டியுள்ளது. பல மையங்களில் உதவியாளர்கள் இல்லை. இதில் 32 வகையான பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். இவ்வளவு நெருக்கடிகளையும் கடந்துதான் சத்துணவு ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சிலர் தப்பு செய்யக்கூடும். ஆனால் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. மத்திய அரசு சத்துணவுக்காக அனுப்பும் நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. அதைத் தவிர்த்து, ஒரு மாணவனுக்கு 3 ரூபாய் ஒதுக்கினால் மட்டுமே தரமான சத்துணவை வழங்க முடியும்’’ என்கிறார் பழனிச்சாமி.
அன்புள்ள அதிகாரிகளே... இந்த உணவை உங்கள் குழந்தை சாப்பிடுமா? அம்மா உணவகத்தில் காட்டும் ஆர்வத்தில் பாதியையாவது சத்துணவு மையங்களின் மீது காட்டலாமே!
- வெ.நீலகண்டன்
13 வகை கலவை சாதம், 5 வகை முட்டை என சத்துணவு மேம்படுத்தப்படும்’’ என்று முதல்வர் அறிவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திட்டம் சில பள்ளிகளில் பரீட்சித்துப் பார்த்ததோடு அப்படியே நிற்கிறது. நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. பெருமளவு ஊழியர் பற்றாக்குறை உள்ள நிலையில், நவீன சாதனங்கள் இல்லாத பழமையான சமையலறை மூலம் இந்தத் திட்டம் சாத்தியமில்லை என்கிறார்கள் சத்துணவு ஊழியர்கள். அதனால் கர்நாடகாவில் உள்ளதைப் போல ‘சென்ட்ரல் கிச்சன் சிஸ்டம்’ மூலம் ஒரே இடத்தில் சமைத்து சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்ப பரிசீலனை நடக்கிறது.