நிழல்களோடு பேசுவோம்





பெண்கள் படிப்பதால் என்ன பயன்?
பெண்களைப் பார்த்து கேட்கக்கூடாத கேள்வி ஒன்று இருக்கிறது. ‘‘நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க?’’ என்பதுதான் அந்தக் கேள்வி. அதுவும் படித்த, நகர்ப்புற தோற்றமுடைய பெண்களிடம் அந்தக் கேள்வி கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் இந்த உலகில் மனிதர்களிடம் கேட்க நமக்கு இரண்டே கேள்விகள்தான் இருக்கின்றன. குழந்தைகளாக இருந்தால், ‘‘என்ன படிக்கிறே?’’ பெரியவர்களாக இருந்தால், ‘‘என்ன பண்றீங்க?’’ மனிதர்களை மதிப்பிடவும் அவர்களுக்கான இடத்தை அளிக்கவும் இந்தக் கேள்வி எல்லோராலும் எல்லோரிடமும் எழுப்பப்படுகிறது. நானும் பெண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். ‘‘ஹவுஸ்ஒயிஃப்தாங்க’’ என்று சொல்லும்போது பலரிடம் அளவிடமுடியாத சோர்வும் சங்கடமும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். தமிழில் இதற்கு சாக்லெட் தடவிய இன்னொரு சொல் இருக்கிறது... ‘இல்லத்தரசி’. ஆங்கிலத்தில் அதை இன்னும் இனிப்பாக ‘ஹோம் மேக்கர்’ என்கிறார்கள்.

இல்லத்தரசிகளாக இருக்கும் பல பெண்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்று கேட்டால் அசந்து போவீர்கள். எம்.பி.ஏ, எம்.எஸ்சி., பி.ஈ. என்று சர்வசாதாரணமாகச் சொல்வார்கள். எங்கோ மனதில் சுருக்கென்று வலிக்கும். அவர்கள் கண்களையே உற்றுப் பார்ப்பேன். அந்தக் கண்களில் இயலாமையின் மயில்தோகை விரித்தாடிக்கொண்டிருக்கும். பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பது கடந்த ஒரு நூற்றாண்டில் இந்திய சமூகம் முன்வைத்த மிகப்பெரிய சமூக போர்ப் பிரகடனம். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பாரதி முழங்கியதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. பெண்கள் நிச்சயமாக பட்டங்கள் ஆண்டார்கள். ஆனால் சட்டங்கள் செய்ய முடிந்ததா என்பதுதான் கேள்வி. சட்டங்கள் என்று பாரதி குறிப்பிடுவது வக்கீலுக்குப் படிப்பதல்ல. பெண்கள் எல்லா துறையிலும் நிர்ணயிக்கும் அதிகாரமும் சுயேச்சையான தன்மையும் பெறுவதுதான். இந்திய சமூகத்தில் அது நடந்திருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.

இல்லத்தரசிகள் என்பவர்கள், போதிய கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் வீட்டில் இருப்பவர்கள் என்ற ஒரு கருத்து ஒரு காலத்தில் நிலவியது. ஆனால் கிராமம், நகரம் என்ற பாகுபாடின்றி கல்வி வளர்ச்சி பரவலாகிவிட்ட இந்தக் காலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்கள் அடிப்படைக் கல்வியை மட்டுமல்ல, உயர்கல்வியையும் பெற்று வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் அறிவும் ஆற்றலும் முறையான உழைப்புச் சக்தியாக மாற்றப்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

‘இந்தியாவில் மூன்றில் இரண்டு பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று உலக வங்கி வெளியிட்ட ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள். ‘பெண்களுக்குப் பணிபுரிய உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் உயரும்’ என்கிறார்கள். அதன் மூலம் இந்தியா பத்து சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலகின் மிகவேகமாக முன்னேறும் நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

‘இந்தியாவில் 48 சதவீத பெண்கள், தங்கள் கேரியரில் பாதிக் காலத்திலேயே வேலையை விட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்’ என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இது ஆச்சரியமல்ல. பெண்கள் திருமணமாவதற்கு முன்பு வேலைக்குச் செல்கிறார்கள்; அல்லது திருமணமாகி சில வருடங்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் கணிசமான ஆண்கள், பெண்கள் வேலைக்குச் செல்வதை விரும்புவதில்லை. குறிப்பாக நன்கு படித்த, அதிகம் சம்பாதிக்கும் ஆண்கள், தனக்கு சமமாக படித்த ஒரு மனைவி... வீட்டில் இருந்து தன்னையும் குடும்பத்தின் தேவைகளையும் மட்டும் கவனித்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். படிக்காத ஆண்களை விட படித்த ஆண்கள்தான் இதில் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். நமது நகர்ப்புறங்களில் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை 2000த்தில் 45 சதவீதமாக இருந்தது என்றால் 2010ல் அது 48 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. வேலைக்குப் போகும் கனவுடன் படித்த பல பெண்கள், கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் எந்த வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்களோ, அதே வாழ்வைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.



ஒரு பெண் தான் கற்ற கல்வி அனைத்தையும் மறந்துவிட்டு தனது மனத்தையும் மூளையையும் ஒரு வெள்ளைக் காகிதமாக்கிக்கொண்டு வீட்டு வேலைகளுக்காக மட்டும் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பது மிகப்பெரிய வன்முறை. அந்த வன்முறைக்கு ஆளான பெண்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, எவ்வளவு நேரம்தான் வீட்டை ஒழுங்குபடுத்த முடியும்? தொலைக்காட்சியையோ மோட்டுவளையையோ பார்த்துக்கொண்டு எவ்வளவு காலம் உட்கார்ந்திருக்க முடியும்?

வேலைக்குப் போவது பணம் சம்பாதிப்பதற்கான ஒன்றுதானா? உண்மையில், வேலை என்பது ஒருவருடைய ஆளுமை. ஒருவருடைய முகம். ஒருவருடைய சுதந்திரம். ஒருவருடைய தன்னம்பிக்கை. வீட்டிலேயே இருத்தி வைக்கப்படும் பெண்களிடமிருந்து இவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன. இல்லத்தரசி என்பது ஒரு முகமற்ற அடையாளம். நிறைய பெண்கள் இவ்வாறு முகமற்றவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். வேலைக்குப் போவது பெண்களுடைய அடிப்படை மனித சுதந்திரம் என்பதை நம்முடைய குடும்பங்களோ ஆண்களோ புரிந்துகொள்வதில்லை. மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு ஆணால், ஐந்தாயிரம் ரூபாய் வேலைக்குப் போக விரும்பும் மனைவியைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்தக் காசுக்கு ஏன் போய் அலைய வேண்டும் என்று மட்டுமே அதை சுருக்க விரும்புகிறான். இது இந்திய கணவர்களின் தீர்க்க முடியாத மனநோயாக இருக்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதை ஒரு கௌரவமாக நினைக்கும் ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள். நமது சாதி, மத அமைப்பு சார்ந்த பண்பாட்டிலேயே பெண்கள் வீட்டிற்கு வெளியே வேலை செய்வதற்கு ஆழமான எதிர்ப்பு உள்ளது.

ஒரு பெண் உயர்கல்வி பெறும்வரை படிப்பதற்கு தன் வாழ்வின் சிறந்த பருவத்தை அளிக்கிறாள். மிகக் கடுமையான உழைப்பை அளிக்கிறாள். கல்வி என்பது தன்னைப் பற்றி அவள் காணும் மாபெரும் கனவு. ஆனால் திடீரென ஒரு நாள் அந்தக் கல்வி அவளிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்டுவிடுகிறது. குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுக்கவும் பொது இடங்களில் நாகரிகமாக நான்கு வார்த்தை ஆங்கிலம் பேசவும் அல்லாமல் அந்தக் கல்வி எந்தப் பயனும் அற்றுப் போகிறது. இது உண்மையில் ஒருவர் தனது ஒரு பகுதியை இழப்பதற்கு சமம்.
பெண்களை வேலைக்கு அனுப்புவதில் உள்ள மனத்தடைகள் ஓரளவுக்கு தளர்ந்திருக்கின்றன. ஆனால் பெண்களுக்கான வேலைகள் இன்னொருபுறம் வேகமாகச் சுருங்கி வருகின்றன. நமது சமூகம் பெண்களுக்கு என்று சில வேலைகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. கிராமப்புற அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அவர்கள் விவசாய வேலைக்கோ, கட்டுமான வேலைக்கோ, கால்நடை பராமரிப்பிற்கோ, வீட்டு வேலைகளுக்கோ செல்வார்கள். படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள் என்றால் மருத்துவம், தொலைத்தொடர்பு, தையல், ஆசிரியப் பணி, அலுவலக உதவியாளர்கள், கடைகளில் விற்பனையாளர்கள் இப்படித்தான் பெண்களுக்கான வேலை ஒதுக்கீடுகள் நடந்து வந்திருக்கின்றன. கிராமப்புறங்களில் விவசாயத்தில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, பெண்களின் வேலையின்மையைக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புறங்களிலும் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பல வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. பொருளாதார மந்த நிலையின் காரணமாக அவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

ஒரு காலத்தில் பெண்கள் ஏராளமாக டீச்சர் டிரெயினிங் படித்தார்கள்; அப்புறம் டைப்ரைட்டிங் படித்தார்கள்; அப்புறம் கம்ப்யூட்டர் படித்தார்கள். இந்தத் துறைகள் எல்லாமே சிறு சதவீதம்கூட பெண்களுக்கான நியாயமான வேலைவாய்ப்புகளை வழங்கவில்லை. பெண்களை பொத்தாம் பொதுவாகப் படிக்க வைத்து அவர்களை வீட்டில் அடைப்பது மிகப்பெரிய அநீதி. பெண்கள் பெரிய அளவிற்கு வேலைகளுக்கு வராமல் அவர்களுக்குக் கல்வி அளிப்பதில் ஒரு சமூகம் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை. ‘பெண்களுக்கான வேலைகள்’ என்ற அடையாளங்கள் தகர்க்கப்பட்டு, ஆண்களுடைய எல்லா வேலைகளிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கும்போதே இந்த அநீதியை ஓரளவு சரி செய்ய முடியும்.
(பேசலாம்...)

நெஞ்சில் நின்ற வரிகள்

கடந்த வாரம் ஒரு கோயில் வாசலில் மழைக்கு ஒதுங்கி நின்ற நேரத்தில் வாலியின் மறைவுச் செய்தியை யாரோ தொலைபேசியில் தெரிவித்தார்கள். ஒரு கணம் மனம் கரைந்தது. 60 ஆண்டுகள் நான்கு தலைமுறைக் கவிஞர்களோடு சளைக்காமல் போட்டியிட்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்ட கவிஞர். தமிழ்த் திரையிசைக்கு வாலியின் பங்களிப்பு வண்ணமயமானது. காமத்தையும் காதலையும் மனத்தடையின்றி பொங்கிப் பிரவகிக்கச் செய்தவர். ஆன்மிகம், சமூகம் என எதிலும் பளீரென ஒளிரும் வரிகளை எழுதினார். எம்.ஜி.ஆரின் அரசியல் சரித்திரத்தை வாலியின் வரிகளை விட்டுவிட்டு எழுத முடியுமா? வாலி ஒரு தலைசிறந்த குணச்சித்திர நடிகனைப் போல தமிழ் சினிமாவின் எல்லாத் தேவைகளையும் நிர்ப்பந்தங்களையும் ஏற்று, அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டார். ஒரு திரையிசைக் கவிஞனுக்குரிய முக்கியமான தகுதி இது.
தமிழக மீனவர்கள் இன்று படும் வரலாற்றுத் துயரத்தை நினைக்கும்போதெல்லாம் வாலியின் இந்த வரிகள் நினைவுக்கு வராமல் போவதில்லை. ‘உலகத்தின் தூக்கம் கலையாதோ’ என்று அவர் எழுப்பிய கேள்வி, இன்றும் அப்படியேதான் இருக்கிறது...
‘தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்...’
என்ற பாடலில்
‘கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ’
என்ற வரிகள் காட்டும் நிராதரவு எல்லையற்றது.

மனுஷ்ய புத்திரன் பதில்கள்
அந்தக் கால நடிகைகளுக்கும் இந்தக் கால நடிகைகளுக்கும் என்ன வித்தியாசங்கள்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பணம், துணிச்சல், டயட்.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்புகள் எப்படி..?
- அ.குணசேகரன், புவனகிரி
மழைபெய்து சாலையில் நீர் தேங்கினால்கூட உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கினால்தான் சரியாகும் என்கிற நிலைக்கு நமது அரசாங்க அமைப்புகள் வந்துவிட்டன.   
ஸ்னோடனிடம் அமெரிக்கா பயப்படுகிறதா?
- இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
ஸ்நோடன் திருடனின் பர்ஸில் ஒளிந்திருந்த தேள். கொஞ்ச நேரம் கடுக்கத்தான் செய்யும்.
மேற்கு வங்கத்தில் மலிவு விலை சிக்கன், மீன் விற்கும் திட்டத்தை மம்தா துவங்கியுள்ளாரே?
- மு.மதிவாணன், அரூர்
‘அம்மா’க்கள் என்று ஒரு இனம் உண்டு. அவர்களுக்கென்று ஒரு குணம் உண்டு.
வங்கதேசத்தில் 1971ல் இனப்படுகொலையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளி குலாம் ஆசாமுக்கு இப்போது 90 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது பற்றி?
- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ராஜபக்ஷே முறை வருவதற்கு நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புரிகிறது.

(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப் பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email: editor@kungumam.co.in)

இணையத்தின் கைகள்
இரா.முருகன் தமிழின் முக்கியமான புனைகதை ஆசியர்களில் ஒருவர். சுஜாதாவின் எழுத்து நடையால் பாதிக்கப்பட்ட தலைமுறைப் படைப்பாளிகளில் முக்கியமானவர். அவரது ஃபேஸ் புக் பதிவிலிருந்து...

‘பேனா நிப் பட்டையடித்து மசித் துளிகள் காகித நடுவில் சின்னத் தீவுகளாகக் குளம் கட்டின’ - இந்த வாக்கியத்தை எழுதிவிட்டுப் பார்த்தால் புரிவது, இது 1870களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கே விளங்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுத்தாணி பரம்பரை. இருபதாம் நூற்றாண்டின் கடைசி இருபது வருடமாக பால்பாயின்ட் பேனா வம்சம். இடையில் வந்த மசிப் பேனா (யீஷீuஸீtணீவீஸீ ஜீமீஸீ) என்ற ஒரு சிறு தொழில்நுட்பம் சமூக வாழ்க்கையைப் பாதித்துப் போயிருக்கிறது.
புனைகதையும் அபுனைகதையும் ஓவியமும் புகைப்படமும் காலத்தைப் பதிவு செய்வது ஏன் அவசியம் என்று புரிகிறது.
https://www.facebook.com/ERA.MURUKAN?fref=ts