மைக்கும் வாயுமாக ‘சொன்னா புரியாது’ படத்தில் சிவாவுடன் சேர்ந்து டப்பிங் கலைஞர் கேரக்டரில் கலக்கிய பிளேடு சங்கர், நிஜத்திலும் வாயாடுபவர்தான். யெஸ்! சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜே, ஆதித்யா சேனலில் வி.ஜே என இரட்டை சவாரி இவருக்கு. தற்போது சினிமா ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பால் குஷியில் இருந்தவரிடம் கை குலுக்கினோம்...
‘‘சென்னையில் பிறந்து தூத்துக்குடியில் வளர்ந்து மறுபடியும் சென்னையில் செட்டில் ஆனவன் நான். ஆரம்பமே உல்டாவா இருக்குன்னு பார்க்குறீங்களா? நம்ம சினிமா என்ட்ரியும் அப்படித்தான். அஜ்மல், சுனைனா நடிச்ச ‘கதிர்வேல்’தான் என்னோட முதல் படம். அதில், நான் வில்லன். அதுக்கு அப்புறம், ‘சகுனி’யில் நடிச்சேன். ‘துருப்பிடிச்ச தலையா’ன்னு சந்தானம் ‘வர்ணிப்பாரு’ல்ல... அது அடியேன்தான். அதுக்குப் பிறகு, சி.எஸ்.அமுதனோட ‘ரெண்டாவது படம்’. நாலாவதா நான் நடிச்ச படம்தான் ‘சொன்னா புரியாது’. நாலாவதா நடிச்ச படம்தான் ரெண்டாவது படமா ரிலீஸ் ஆகியி ருக்கு. மூணாவதா நடிச்ச படம், 4வது படமாக ரிலீஸ் ஆகப்போகுது. இதெல்லாம் உங்களுக்கு ‘சொன்னா புரியாது’ சார்’’ - எனத் தொடங்கிய ‘பிளேடு’ சங்கரின் பெயர்க் காரணம் நமக்கே புரிந்தது.
‘‘சின்ன வயசிலிருந்தே எனக்குள் டைரக்ஷன் ஆசை இருந்துச்சு. காலேஜ் முடிச்சுட்டு அதுக்கான முயற்சியில் இறங்கினப்போ, டைம் செட் ஆகல. அந்த நேரத்தில் சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜே வாய்ப்பு கிடைச்சது. நிஜப் பெயர் சங்கர்நாராயணன். ‘பிளேடு நம்பர் ஒன்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால் பிளேடு சங்கர் ஆகிட்டேன். அந்த நிகழ்ச்சிக்காக இந்தியன் ரேடியோ ஃபோரம் அமைப்பின் விருதை ரெண்டு தடவை வாங்கியிருக்கேன். அப்புறம் கோல்டன் மைக் விருதையும் வாங்கி யிருக்கேன்.’’
‘‘ ‘சொன்னா புரியாது’ அனுபவம்...’’
‘‘சி.எஸ்.அமுதனின் அசோஸியேட்தான் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ். ‘ரெண்டாவது பட’த்தில் நடிச்சப்போ, ‘ரொம்ப நல்லா பண்றாப்ல’ன்னு அமுதன்தான் என்னை கிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார். அப்படி வந்த வாய்ப்புதான் அது. ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவா என்னை கலாய்ச்சிட்டே இருப்பார். கோபிச் செட்டிப்பாளையத்தில் ஷூட்டிங் நடந்தப்போ ஒருநாள் ஷாப்பிங் போனோம். சிவாவைப் பார்த்த சில பெண்கள், அவருக்கு கை காட்டி பேசிக்கிட்டிருந்தாங்க. ‘பக்கத்துல வர்றாரே... அவர் யாரு?’ன்னு ஒரு பொண்ணு கேட்க, ‘அவர்தான் செகண்ட் ஹீரோ’ன்னு யாரோ சொல்லப்போக, அதையே பிடிச்சிக்கிட்டு, ‘செகண்ட் ஹீரோ வந்துட்டாருப்பா’ன்னு கலாய்க்க ஆரம்பிச்ச சிவா, இன்னிக்கும் நிறுத்தலை. பட், ஸ்வீட் ஃபிரண்ட்!’’
‘‘அடுத்து ஹீரோதானா?’’

‘‘இதுக்கு சிவாவே பரவாயில்லைன்னு நினைக்கிறேன். அந்தப் பேராசையெல்லாம் இல்லை. நல்ல நல்ல கேரக்டரில் நடிக்கணும்... அவ்வளவுதான். ஆர்.ஜே நாற்காலியில் உட்கார்ந்துக்கிட்டு சினிமா நட்சத்திரங்களைப் பேட்டி எடுக்கும்போது, ‘படம் ரிலீஸ் ஆகப்போகுதே... உங்க வயித்துல பட்டாம்பூச்சி பறக்குதா?’ன்னு கேட்டிருக்கேன். ஆனா, இப்ப நான் நடிச்ச படம் ரிலீஸ் ஆகும்போது என் வயித்துல பாம்பு, தவளை எல்லாம் கூட பறந்தது. கிட்டத்தட்ட பயந்துட்டேன். அடுத்ததா விதார்த், அஜ்மல் நடிக்கும் ‘உலா’ படத்தில் நடிக்கிறேன்.’’
‘‘அப்போ டைரக்ஷன் ஆசை..?’’
‘‘அதுக்கு இன்னும் பல கிலோ மீட்டர் இருக்கு. இப்போதைக்கு நடிக்க கிடைக்கிற வாய்ப்பை தக்கவச்சிக்கணும்னு நினைக்கிறேன். அனிமேஷன் படம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். எதிர்காலத்தில் நல்ல அனிமேஷன் படத்தை இயக்கற ஆசை இருக்கு!’’
- அமலன்