விருப்பம் : உதயக்குமாரன்




வேறு வழியில்லை... தப்பிக்கவே முடியாது! தன் வலையில் சாரதா எப்படியும் விழுந்து விடுவாள் என்ற நம்பிக்கை மேனேஜர் பரசுராமனுக்கு.
அவள் திடீரென இரண்டு நாள் விடுப்பு எடுத்ததை சாக்காக வைத்து தன் அறைக்கு அழைத்தார்.
‘‘என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே நீ? ரெண்டு நாள் லீவ் எடுத்திருக்கே... ஒரு தகவலும் சொல்லலை’’ - முதலில் மிரட்டிப் பார்த்தார்.
‘‘சாரி சார், திடீர்னு உடம்புக்கு முடியலை. இனிமே நான் எப்பவுமே லீவ் எடுக்க மாட்டேன் சார்!’’ - பயந்தபடி உளறினாள் சாரதா.
‘‘இந்த ஆபீஸ்ல யார் யார் லீவ் போடுறாங்க... எங்கெங்கே போறாங்க... எல்லாம் எனக்குத் தெரியும். என்னை யாரும் ஏமாத்த முடியாது!’’ - கொஞ்சம் தன் பெருமையையும் எடுத்து விட்டார்.
‘‘ஐயோ, பெருசா எந்த முடிவும் எடுத்துடாதீங்க சார்! நான் வேணா வேலையை ரிசைன் பண்ணிடறேன்’’ என்றாள் அவள் கண்ணீரோடு.

‘‘சேச்சே... நோ பிராப்ளம். உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. உன் விருப்பத்தைத்தான் எதிர்பார்க்கறேன்’’ என பரசுராமன் சொன்னதும், சட்டென குதூகலமானாள் சாரதா.
‘‘தேங்க்ஸ் அங்கிள்... இவ்வளவு சீக்கிரம் நீங்க எங்களை சேர்த்து
வைப்பீங்கன்னு எதிர்பார்க்கல!’’
‘‘என்ன சொல்றே..?’’
‘‘நானும் உங்க பையன் ஸ்ரீதரும் லவ் பண்றோம். அந்த விஷயம்
தெரிஞ்சுக்கிட்டுத்தானே என்
விருப்பத்தைக் கேக்கறீங்க?’’
அதிர்ச்சியில் உறைந்தார் பரசுராமன்.