நியூஸ் வே





*  செல்வராகவன் ‘இரண்டாம் உலக’த்தோடு ரிட்டயர் ஆகப்போகிறார் என்று செய்தி அடிபடுகிறது. ‘‘வெறுப்பாக இருந்த சூழ்நிலையில் அப்படிச் சொன்னேன். நானாவது ரிட்டயர் ஆவதாவது’’ என புன்னகைக்கிறார் செல்வா. தம்பியை நடிக்க வச்ச மாதிரி ஆர்யாவையும் நடிக்க வச்சிட்டிங்களா?

*  டைரக்டர் விஜய் இயக்கத்தில் அடுத்த படத்தில் ஒரு கனமான ரோலில் நடிக்கப்போகிறார் ஆர்யா. ஆனால் அது அவரை மையப்படுத்திய படமல்ல. சாரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இருந்தபோதும் ‘சரி’ சொல்லி விட்டார் ஆர்யா.

*  அஜித் படமென்றால் எப்படிப் பெயர் வைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் அஜித்தோ, ‘‘என்னைப் பிரதானப்படுத்தக் கூடாது, கதை ஓட்டத்தைக் காட்டுவதாக இருக்க வேண்டும்’’ என்று கொண்டு வருகிற தலைப்புகளுக்கு ‘ஸாரி’ சொல்லி வந்தார். ‘தலைவா’ போல ‘தல’யாவது இருக்க வேண்டாமா என ரசிகர்கள் பரபரத்தார்கள். கடைசியில் ‘ஆரம்பம்’ என முடிவாகி இருக்கிறது. எதையோ உணர்த்தும் தலைப்பு இல்லை; கதைக்கு பொருந்தியதாம்!

*  இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மன்னர் பரம்பரையின் அடுத்த வாரிசுக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்து குவிகிறது. புதிய இளவரசருக்கு என்ன பெயர் வைப்பார்கள் என இப்போதே இங்கிலாந்தில் சூதாட்டம் தொடங்கிவிட்டது. ஜேம்ஸ், லூயிஸ், அலெக்சாண்டர், ஆர்தர் என ஆளாளுக்கு பெயர் சொல்கிறார்கள். அதிகம் பேர் பணம் கட்டும் பெயராக இருப்பது... ‘ஜார்ஜ்!’

*  பாண்டிராஜ் - சிம்பு கூட்டணி யில் எடுக்கும் படத்தின் தலைப்பு ரெடியாகிவிட்டதாம். இசையை சிம்புவின் தம்பி குறளரசன் கவனித்தாலும், படத்துக்கான எல்லா பாடல்களையும் எழுதுகிறார் சிம்பு. லண்டனில் இருந்தபோதே பாடல்கள் ரெடியாம்.

*  ஸ்டார் அந்தஸ்து ஹீரோக்களுடன் ஜோடி போடத் தொடங்கியதிலிருந்து மேனி அழகை நாளுக்கு நாள் மெருகேற்றி வருகிறார் அமலா பால். மும்பையில் இருக்கும் அழகுக்கலை நிபுணர்கள்தான் அமலாபாலின் ஆலோசனை மையம்.

*  டோனியின் அதிர்ஷ்ட வீரராக இந்திய அணியில் அறியப்படும் பியுஷ் சாவ்லாவுக்கு விரைவில் திருமணம். இளம் வயதிலிருந்து தோழியாக இருந்து காதலியாக மாறிய அனுபூதியை மணக்கிறார். சாவ்லாவின் சொந்த ஊரான மொராதாபாத்தில் எளிமையாக நடந்தது எங்கேஜ்மென்ட். ‘டோனி ஃபிரீயா’ எனப் பார்த்து திருமணத் தேதி நிச்சய மாகும்!



*  அதிசயம், ஆனால் உண்மை! இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவிற்காக ஒரு பாடலைச் சேர்ந்து உருவாக்க இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரையும் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் உடனே சம்மதமும் சொல்லவில்லை, அதேவேளை மறுக்கவும் இல்லை. அனேகமாக அந்த அதிசயம் நடக்கலாம்!

*  காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், காஜலின் தங்கை என்பதைவிட நிஷாவின் அக்காதான் காஜல் என்று பெயரெடுப்பதையே விரும்புகிறாராம். விரைவில் இந்திப் படமொன்றில் நடிக்க இருக்கும் நிஷா, இந்தி ஹீரோக்களின் நட்பு வளையத்துக்குள் நுழைந்து வாய்புகளை அள்ள முயற்சிக்கிறார்.

*  இப்போதைக்கு அடுத்த இரண்டு வருடத்திற்கு சிங்கம் கிடையாது. அதற்குப் பிறகு ‘சிங்கம் - 3’ நிச்சயமாம். ‘‘காரண காரியங்களோடு காட்சிகள் வரவேண்டும். ஆனால் எனக்கு இதில் கல்யாணம் நடந்துவிட வேண்டும்’’ என புன்முறுவலோடு சொல்லியிருக்கிறார் சூர்யா.

*  அசினின் ஜெராக்ஸ் என்று வர்ணிக்கப்படும் பூர்ணாவுக்கு ‘காதலுக்கு மரியாதை’ ஸ்டைலில் நான்கு அண்ணன்கள். கடைக்குட்டியான தான், காதலில் விழுந்து அண்ணன்களின் மனசைக் காயப்படுத்த மாட்டேன் என்று பாசம் பொழிகிறார்.

*  புரூஸ் லீ இறந்து 40 ஆண்டுகள் முடியப் போகிறது. உலகெங்கும் ஹீரோவாக அறியப்பட்டாலும், ஹாங்காங் அரசு அவர் நினைவாக எதுவும் செய்யவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அந்த ரசிகர்களுக்காக புரூஸ் லீ கண்காட்சி ஒன்றைத் துவக்கியிருக்கிறார், அவரது மகள் ஷானன் லீ. ஹாங்காங்கில் இந்தக் கண்காட்சி 5 ஆண்டுகளுக்கு நடக்கும்!

*  சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலியின் கவலையெல்லாம், மகன் பாலாஜி மீதுதான் இருந்தது. மகனுக்குத் திருமணம் செய்து வைக்கவில்லையே என்ற கவலை அவர் மனதை அரித்தது. ‘குழந்தை உள்ளம் கொண்ட அவரை எனக்குப் பிறகு யார் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்’ என்ற வேதனைதான் கடைசி நாட்களில் அவரை வாட்டியிருக்கிறது. அக்கறையோடு நெருங்கிய நண்பர்களைக் கூட்டி சில பொறுப்புகளைக் கொடுத்தாராம் வாலி.

*  தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரையுலகிற்கும் பாலம் போட்டிருக்கிறார் ஆண்ட்ரியா. ‘அன்னயும் ரசூலும்’ படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் மலையாளப் படத்தின் பெயர் ‘லண்டன் பிரிட்ஜ்’.

*  ‘விஸ்வரூப’த்தின் தொடர்ச்சி போல் ‘விஸ்வரூபம் 2’ இருக்காது. இரண்டாம் பாகம் போலவும் இருக்காதாம். படம் பார்க்கும்போது மட்டும் ‘விஸ்வரூபம்’ படம் பார்த்த உணர்வுகள் இருக்குமாம்.

சைலன்ஸ்

வாசனை நகைச்சுவை நடிகர், காதல் நடிகையை படப்பிடிப்பின் இடைவேளையில் இடுப்பில் செல்லமாகக் (!) கிள்ளியிருக்கிறார். நகைச்சுவை நடிகருடன் எல்லாம் ஜோடியாக நடிக்கவேண்டியிருக்கிறதே என ஏற்கனவே நொந்து போயிருந்த நடிகை, இதில் டென்ஷனாகி டைரக்டர் வரைக்கும் புகார் செய்துவிட்டார். ‘சும்மா விளையாட்டாக செய்ததுதான்... அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை’ என நடிகையை யூனிட் சமாதானப்படுத்தி விட்டாலும், ‘முதல் தடவையாக கறுப்புப்புள்ளி விழுந்துவிட்டதே’ என நடிகர் நொந்து விட்டார். அதன்பிறகு சிரிக்க முடியாமல் தவிக்கிறார்.
அடுத்து இனிஷியல் டைரக்டர் எடுக்கும் படத்தில் சூப்பர் நடிகரை நடிக்கக் கேட்டாராம். ‘‘உங்களுக்கு செய்யணும், அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இரண்டு படம் செய்யலாம் என்றிருக்கிறேன். எப்படிப்பட்ட படமா அது இருக்கணும்னு யோசிச்சிட்டு இருக்கேன். உங்க படத்தில் கௌரவ ரோல் பண்றேன்’’ என்று மட்டும் சொல்லியிருக்கிறாராம்.