கடல் சார்ந்த மீனவக் காதலர்களின் குளிர் காதலைச் சொல்லும் கதை. மீனவர்களின் வாழ்வியலை முடிந்த மட்டும் சொல்ல முயற்சித்து அதில் சராசரியான வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
நீரோடி... மீனவ குப்பமான இதில் கடல் ராசாவாக சுற்றித் திரியும் தனுஷ் மீது பார்வதிக்கு காதல். ஒரு கட்டத்தில் தனுஷுக்குள்ளும் மணக்கிறது காதல். பொருளாதாரத்தை சரி செய்ய சூடான் போனவர் திரும்பினாரா, காதல் கை கூடியதா என்பதுதான் பின்கதைச் சுருக்கம்.
‘வந்தே மாதரம்’ புகழ் பரத்பாலாவின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாலிவுட் வரை கொடி நாட்டியிருக்கும் தனுஷ் ஹீரோ என்ற எதிர்பார்ப்புகளுடன் தியேட்டருக்குள் நுழைகிறோம். நடந்தது என்ன?
முதல் பாதி ஈரம் நிறைந்த கடல் கிராமம், இரண்டாம் பாதியில் ஆப்ரிக்காவின் வறண்ட முகம் என வெவ்வேறு சூழ்நிலை. முதல் பாதியில் காதலும் ஈரமும் கலந்த கலவையில் ஆரம்பக் காட்சிகள் எதிர்பார்ப்பைத் தூண்டுவது நிஜம். காதலியிடம் விறைப்பும், முறைப்பும் காட்டும் தனுஷ், பிரமாதம். சலம்பித் திரியும் அசல் கடல்புரத்து இளைஞனின் முகபாவத்தில், உருவத்தில், தேகத்தில் அட்டகாசமாகப் பொருந்துகிறார். நடிகராக அவர் ஒவ்வொரு அங்குலமும் தேர்ச்சி பெற்று வருவது கண்கூடு. தீவிரவாதிகள் போடும் பட்டினியில் கூட, காதலி உணவு பரிமாறுவதாக கற்பனை செய்து நடிப்பது அழகு.

‘பூ’ பார்வதி, இதில் மலர்ந்து விரிந்து மணம் பரப்புகிறார். காதலையும் அன்பையும் அவர் வெளிப்படுத்திய விதம் அசத்தல். அதிலும் தனுஷுக்குத் தருகிற அந்த முத்தம்... அப்பப்பா! தனுஷின் நீரோடி நண்பர்களாக அப்புக்குட்டி, இமான்... அம்மா உமா, சலீம்குமார், ஜெகன் ஆகியோர் கேரக்டர்களில் நியாயம் செய்கிறார்கள்.
பெரிய சுறாக்களையே தனி ஒருவனாக வேட்டையாடிப் பிடிக்கும் வல்லமை உள்ளவராகக் காட்டப்படும் தனுஷ், வாரத்துக்கு ஒரு சுறா பிடித்தாலே பணத்தில் புரள வாய்ப்பிருக்கும்போது, சொற்ப சம்பளத்துக்கு சூடான் போவது நெருடல். பிற்பகுதியில் நிலவப்போகும் தனுஷ்-பார்வதி அன்பிற்கு முற்பகுதியில் ஆதாரக் காட்சிகள் மிஸ்ஸிங். ஆளில்லா வனாந்தரத்தில் தீவிரவாதிகள் சுடுவது, உயிரின் கடைசி சொட்டோடு தனுஷ் பாலைவனத்தில் திரிவது என எல்லாமே நம்மை பதைபதைப்போடு படத்தின் உள்ளே இழுத்துப் போகாமல் வெறும் காட்சிகளாகத் தங்கி விடுவது பெரும் பலவீனம். ஜோ டி குரூஸ் வசனங்கள், சமயங்களில் கூர்மை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘நெஞ்சே எழு’, ‘இன்னும் கொஞ்ச நேரம்’ எனப் பாடல்கள் மனதின் ஆழம் தொடுகிறது. குறிப்பாக, ‘கொஞ்ச நேரம்’, விஜய் பிரகாஷ் - ஸ்வேதா மேனன் குரலில் தேன்.
கடலின் அழகை, பாலைவனத்தின் சுட்டெரிப்பை, காதல் உயிர்களின் பரிதவிப்பை ஆழப்படுத்தி பதிவு செய்கிறது மார்க் கோனின்க்ஸ் கேமரா. சூடான் சம்பவங்கள், கடத்தல் பரபரப்பாக வந்திருக்க வேண்டியது... ஏனோ அதை இயக்குநர் செய்யவில்லை. ‘மரியான்’ மிக எளிமையாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. அடர்த்தியும், நுட்பமும் வரவேண்டிய தருணங்களும் எளிமையாக அமைந்துவிட்டதுதான் பிரச்னை. திறமையான தொழில்நுட்பமும், ஏ.ஆர்.ரஹ்மானும், தனுஷும் இருந்தும் இன்னமும் கதைதான் தேவைப்படுகிறது.
ஆரம்ப ரசனையை படம் முழுக்கத் தூவியிருந்தால், ‘மரியான்’ இன்னும் கவர்ந்திருப்பான்.
- குங்குமம் விமர்சனக் குழு