குட்டிச்சுவர் சிந்தனைகள்




ஆல்தோட்ட பூபதி

வயதானவர்கள் எல்லாம் போங்கிரசை விட்டு வெளியேற வேண்டும்னு கோடிக்கணக்கான கோஷ்டிகளில் ஒரு கோஷ்டி தலைவரான கே.வி.கே.எஸ்.கிழங்கோவன் சொன்னதையொட்டி போங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் எப்படி யூத்தா மாறியிருக்காங்கன்னு கத்தியமூர்த்தி பவனிலிருந்து நமது சிறப்பு நிருபர், நேரலையாக...

இதோ ஒரு கார் வருது, கார் நின்னுடுச்சு, காரிலிருந்து யாரோ ஒருத்தர் ஸ்லீவ்லெஸ் டி-ஷர்ட்ல ஆர்ம்ஸ் காமிச்சுக்கிட்டே இறங்குறாரு... தலைமுடிய ‘அசல்’ பட அஜித் மாதிரி கலரிங் பண்ணி சீவி இருக்காரு... யாருன்னு தெரில... ஓ, அது நம்ம பூனைதேசிகன் சார். அடடா அவசரத்துல கூலிங் கிளாஸ்க்கு பதிலா கண் ஆபரேஷனுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல்ல தர்ற கறுப்புக் கண்ணாடியப் போட்டுட்டு வந்துட்டாரு.

இதோ இப்போ இன்னொரு கார் வருது... காதுல தோடு, தொப்புள் தெரியிற கட் ஷர்ட்னு யாரோ இறங்குறாங்க... விராட் கோஹ்லியோட கோலி வெளையாண்ட தோஸ்து மாதிரி கை முழுக்க டாட்டூ... ஆனா குளோஸப்ல உற்றுப் பார்த்தா பஞ்சரான பவர் ஸ்டார் மாதிரி இருக்கு... அட, நம்ம பொங்கபாலு சார்! செமையா இருக்கார்.

இப்போ, இப்போ ஒரு ஸ்கார்ப்பியோ வருது... கதவு திறந்த உடனே ‘ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன் லைட்’னு பாட்டு ஏரியாவை உலுக்குது. ஜீன்ஸ கிழிச்ச மாதிரி வாங்கிப் போடுறதுக்கு பதில், ஜீன்ஸை வாங்கி கிழிச்சுப் போட்டுட்டு ஒரு உருவம் இறங்குது. யாரு அவரு? அட, நம்ம பீட்டர் சில்பான்ஸ்!

அடுத்து ஒரு கார் வருது, ஃபுட்பால் ஷூவ கவுத்தி வச்ச மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல்ல, முக்கா பேன்ட்டோட யாரோ வராங்க! அட... நம்ம கிழங்கோவன் சார். எல்லாம் உள்ள போயிட்டாங்க, அரை மணி நேரமா சத்தத்த காணாம். கத்தியமூர்த்திபவன் ரத்தமூர்த்திபவனா ஆனாலும் இன்னைக்கு நல்ல விஷயம் என்னன்னா, வழக்கம் போல வேட்டி கிழியாது.
குட்டிச்சுவர் செய்திகளுக்காக உங்கள் ஆல்தோட்ட பூபதி.

இந்தியாவில் அரிய வகை உயிரினங்கள் அழிந்து, மறைந்து வருவதைப் பற்றி நிறைய செய்திகள் பார்க்கிறோம். காடை, கவுதாரி போன்ற பறவைகளில் ஆரம்பிச்சு, சிட்டுக்குருவிகள் வரை பல பறவை இனங்கள் அழியுது. இந்த தவளைகள் போன இடம் தெரியல. புலிகளின் எண்ணிக்கைய பெரும்பாடு பட்டு அதிகரிச்சு இருக்காங்க. சிங்கவால் குரங்கு, வரையாடு போன்ற பல இனங்கள் மேல பெரும் அக்கறையா இருக்காங்க. இப்படி காட்டுக்குள் இருக்கும் இனங்கள் மேல காட்டுற அதே அக்கறைய, நாட்டுக்குள் இருக்கும் இனங்கள் மேலயும் காட்டணும். அதாவது, கேரள மாநில பெண்ணினத்தைத்தான் நாங்க சொல்றது. இல்லன்னா, தமிழ் சினிமாவுக்கு ‘வெப்பம்’ நித்யா மேனன், ‘ஈரம்’ சிந்து மேனன், ‘மரியான்’ பார்வதி மேனன், ‘கும்கி’ லட்சுமி மேனன், ‘தாஸ்’ ரேணுகா மேனன், ‘சித்திரம் பேசுதடி’ பாவனா மேனன், ‘நான் அவனில்லை’ ஸ்வேதா மேனன் போன்ற எண்ணற்ற அழகு சிற்பங்களை யாரு தருவா?

இந்தியாவுல எல்லோருக்கும் ரெண்டு சர்டிபிகேட் நிச்சயம் உண்டு. ஒண்ணு பிறப்பு சர்டிபிகேட்; இன்னொண்ணு இறப்பு சர்டிபிகேட். இதைவிட முக்கியமா, வாழும்போதே நம்மை அலைக்கழித்து விடுகிறது ஜாதி சர்டிபிகேட். படிக்கிறப்போ
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓட்டப் பந்தயப்போட்டி, அந்த போட்டி, இந்த போட்டின்னு பல சர்டிபிகேட்கள் கிடைக்கும். இதையெல்லாம் விட பெரிய சர்டிபிகேட் எதுன்னா, நம்ம வாழ்க்கை முடியும்போது, ‘இவன் நல்லா வாழ்ந்தாண்டா’னு நாலு பேரு தர்ற சர்டிபிகேட்தான்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்(ஸ்)...
பள்ளிக்கூட மதிய உணவுல பூச்சி மருந்து கலக்கற அளவு அலட்சியமா இருந்து 23 மழலைகள் உயிரை காவு கொடுத்த பீகார் அரசும், அதன் முதலமைச்சரும்!

அன்புள்ள ஹன்சிகாவுக்கு,நீங்க நல்லா இருக்கீங்களான்னு கேட்க மாட்டேன். ஏன்னா, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ போன்ற படங்களில் சும்மா கும்முன்னு நல்லாத்தான் இருந்தீங்க. நான் உங்க ரசிகர்கள்ல ஒருத்தன். வருங்காலத்துல ‘ஹன்சிகா முன்னேற்ற மக்கள் கழகம்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, அதுக்கு பொதுச்செயலாளராக ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ அதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்தப் பதவிய ராஜினாமா பண்ணிக்கிறேன்.

எதுக்கா? அதான் ட்விட்டர்ல நீங்களும் சிம்பு சாரும் விரும்பறதா சொல்லி, உங்க கனவுக்கண்ணனாக வேண்டிய உண்மை ரசிகனை அண்ணனா ஆக்கிட்டீங்களே... அதனாலதான்! அதனால என்னவா? அந்த பவர்ஸ்டார துணையாக்கி உங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கறேன்... அப்படி என்கிட்டே இல்லாதது என்ன சிம்புகிட்ட இருக்கு? அவரு நல்ல பையன்னா, நான் ரொம்ப நல்ல பையன். சந்நியாசம் போறேன்னு சொன்ன சிம்பு சார் உங்களை கல்யாணம் பண்ணிக்கப் போறாரு... உங்களையே நினைச்சுக்கிட்டு இருந்த ரசிகர்கள்ல ஒருத்தனான நான், இப்போ சந்நியாசம் போலாம்னு இருக்கேன்.
வேண்டாமா? ஓ மை கடவுளே... ஓகே!
அப்போ உங்களோட நடிச்ச அனுஷ்காவோட
அட்ரஸ், போன் நம்பர் கொடுங்க!
கோபத்துடன்,
கோடி ரசிகர்களில் ஒருவன்

ரஜினியோ... இல்ல, விக்ரமன் பட ஹீரோக்களோ கூட பணக்காரன் ஆக அஞ்சு நிமிஷ பாட்ட முழுசா எடுத்துக்கறாங்க. ஆனா, நம்ம பசங்க இருக்காங்களே... அவிங்க ஒரு அழகான பொண்ணப் பார்த்தா போதும்... சாரி, ஒரு பொண்ணப் பார்த்தா போதும்... உடனே மனசுக்குள்ளயே ஒரு காதல் செஞ்சு, மனசுக்குள்ளயே டூயட் பாடி, மனசுக்குள்ளயே கல்யாணமும் பண்ணி, ஹனிமூன் போயி, மனசுக்குள்ளயே குடும்பமும் நடத்தி, ரெண்டு குழந்தைகளைப் பெத்து, அதுங்கள ஸ்கூலுக்கு அனுப்பி, காலேஜுக்கு அனுப்பி, அதுங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க. நம்மாளுங்களுக்கு விழிப்புணர்வு இருக்கோ இல்லையோ.. ‘விழி - புணர்வு’ ரொம்பவே இருக்கு!

ஒருத்தரு தன்னோட ஜாதியிலயே ஒரு பொண்ணத் தேடி, பொருத்தம் பார்த்து, குலம் கோத்திரம் பார்த்து, பேரம் பேசி, விலை படிஞ்சு, நிச்சயதார்த்தம் முடிச்சு, கல்யாணம் பண்றதுக்கு சமமானது வெளியூர் போறப்ப செல்போன் சார்ஜர வீட்டுல மறந்துட்டு போயிட்டு வெளியூர்ல தேடி வாங்கறதும்.
எப்படின்னா கேட்கறீங்க? இப்போ மீண்டும் படிங்க...

தன்னோட ஜாதியிலயே (அதே கம்பெனி) ஒரு பொண்ண (சார்ஜரை) தேடி, பொருத்தம் (சின்ன பின்னா, பெரிய பின்னான்னு) பார்த்து, குலம் கோத்திரம் (சார்ஜர் சேருதான்னு) பார்த்து, பேரம் (ரேட்) பேசி, விலை படிந்து (ரேட் ஓகே செஞ்சு) நிச்சயதார்த்தம் முடிச்சு (பில் போட்டு), கல்யாணம் பண்றது... (வாங்குறது)