கூடிய மட்டும் இளைத்து காலேஜ் ஸ்டூடன்ட் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார் ஸ்ரீகாந்த். ‘‘உடம்பு இளைச்சிருந்தாலும் மனசளவில் தைரியமும், நம்பிக்கையும் கூடியிருக்கு சார். ஜெயிச்சே ஆகணும்னு ஒரு வைராக்கியம் உரமா பதிஞ்சிருக்கு’’ - திடம் நிறைந்த பேச்சால் வசீகரிக்கும் ஸ்ரீகாந்த், சொந்தப் பட நிறுவனம் தொடங்கி, ‘நம்பியார்’ படத்தைத் தயாரிக்கிறார்.
‘‘எல்லோருக்குள்ளேயும் நல்லவனும் இருப்பான்; கெட்டவனும் இருப்பான். சூழ்நிலைகளைப் பொறுத்து நமக்குள் இருக்கும் குறுக்கு புத்தி வெளிப்படும். அப்படி வெளிப்படும் குறுக்கு புத்தியால் விளையும் பிரச்னைகள்தான் ‘நம்பியார்’. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லனா திகழ்ந்தவரின் பெயரை டைட்டிலா வச்சதே படத்துக்கு பெரிய அட்ராக்ஷன். நம்பியாரோட மகன் மோகன் நம்பியார்கிட்ட, ‘இப்படியொரு தலைப்பு வைக்கப் போறோம்’னு கேட்டோம். தாராளமா வச்சிக்குங்கன்னு பச்சைக்கொடி காட்டியதோட வாழ்த்துக்களையும் சொன்னார். நம்பியாரின் ஆத்மாவும் எங்களை ஆசீர்வதிக்கும்னு நம்பிக்கையோட படத்தைத் தொடங்கியிருக்கோம்.’’

‘‘சொந்தப் படம்னு இறங்குற அளவுக்கு தைரியம் எப்படி வந்துச்சு?’’
‘‘வச்ச குறி தப்பாதுங்கற அளவுக்கு ஒரு டீம் அமைஞ்சதுதான் காரணம். ராஜமௌலியின் அசிஸ்டென்ட் கணேஷாதான் இயக்குனர். ராஜமௌலியோட ‘மகதீரா’, ‘நான் ஈ’ படங்கள் மாதிரி சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் ‘நம்பியார்’ இருக்கும். இந்தக் கதையை எப்படியும் மிஸ் பண்ணக்கூடாதுன்னுதான் நானே தயாரிக்கிறேன். ஒரு ஈ என்னவெல்லாம் செய்யுதுன்னு கதையா சொல்லும்போது, ‘இது எப்படி சாத்தியம்’னுதான் தோன்றியிருக்கும். ஆனா, அதைப் படமா பார்த்தப்போ எப்படி ரசனையோட ஆச்சர்யம் கலந்ததோ, அதே மாதிரிதான் ‘நம்பியார்’ கதையும் கேட்கும்போது மேலோட்டமாக தெரியும். ஆனா, கணேஷாவோட அற்புதமான இயக்கத்தில் அழகா வளர்ந்துட்டிருக்கு. ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு செதுக்குகிறார். விஜய் ஆண்டனி வழக்கம்போல ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கார்!’’
‘‘நீங்கதான் நம்பியார் கேரக்டரா?’’
‘‘சந்தானம்தான் நம்பியார். நான் ராமச்சந்திரனாவும் சுனைனா சரோஜாவாவும் நடிக்கிறோம். இதுவரை பார்த்த சந்தானமும் இதில பார்க்கப்போற சந்தானமும் வேறயா இருப்பாங்க. தூங்கறதுக்குக் கூட நேரமில்லாம சந்தானம் பிஸியா இருக்கார். இந்தக் கதையைக் கேட்டுட்டு ‘கண்டிப்பா இந்தப் படத்தில் நான் இருக்கணும். இந்தக் கேரக்டரை மிஸ் பண்ணமாட்டேன்’னு சொல்லி கால்ஷீட் கொடுத்தார். படத்தோட இன்னொரு ஹீரோ சந்தானம்தான். செம சேட்டைக்காரரா படம் முழுக்க கலக்குறார். அவரோட குரல்ல நான் பேசுறது, அவர் பாடும்போது நான் ஆடுறதுன்னு சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரி படத்தில சில வித்தியாசமான காட்சிகள் இருக்கு. வெறும் டிராக்கா இல்லாம, ஒவ்வொரு காமெடியும் கதையோடு ஒன்றி அர்த்தமுள்ளதா இருக்கும். சந்தானத்துக்கு மட்டுமில்லாம எனக்கும் இந்தப் படம் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைக்கும். சொந்தப் படம் என்பதற்காக செலவுகளை சுருக்காம, தாராளமாவே செலவு பண்ணி படத்தை எடுக்கறேன். நான் நினைத்தது நல்லபடியா நடந்தா, தொடர்ந்து படம் தயாரிப்பேன்!’’
‘‘அறிமுகமான ‘ரோஜா கூட்டம்’ படத்திலேயே நல்ல ஓபனிங் கிடைச்சும், அதன்பிறகு பெரிசா வரலையே?’’

‘‘சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்தவன் நான். முதல் படத்துக்கே நல்ல பெயர் கிடைச்சது. அடுத்து நான் நடிச்ச சில படங்களும் நல்லாவே போய்க்கிட்டிருந்தது. திடீர்னு அடுத்தடுத்து ரெண்டு விபத்துகள்ல சிக்கி தடுமாறி நின்றேன். நல்ல வாய்ப்புகளையெல்லாம் மிஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை. சுதாரிச்சு எழுவதற்குள் கொஞ்சம் பின்தங்கிப் போயிட்டேன். அந்த நேரத்தில்தான் ‘நண்பன்’ படத்தில் என் மேல் நம்பிக்கை வச்சு ஷங்கர் சார் வாய்ப்பு கொடுத்தார். அது என்னோட திருப்புமுனைக்கு வழி வகுத்துக் கொடுத்ததுன்னே சொல்லலாம்.
இனி, என் கேரியரை சரியா எடுத்துட்டுப் போகணும். அதில் கவனமா இருக்கேன். என்னோட முழு நடிப்புத் திறமையைக் காட்டும் படமா ‘நம்பியார்’ இருக்கும். ‘ஓம் சாந்தி ஓம்’ படமும் நல்ல கதை. இயக்குனர் ராஜேஷ்தான் எனக்கு இந்தக் கதையை சிபாரிசு பண்ணினார். இனி, எல்லாம்
நல்லபடியாவே நடக்கும்!’’
- அமலன்