பயணம்





சிடுசிடுவென்று
எரிந்து விழுந்துகொண்டே
இருப்பார்
சின்னமனூர் கண்டக்டர்
சின்னராசு

சரியான சில்லறை
வேண்டுமெனக் கேட்டு
சகட்டுமேனிக்கு
சண்டை போடுவார்
சத்திரப்பட்டிக்காரர்

‘‘அரை டிக்கெட்டு எல்லாம்
இந்த வண்டியில்
அனுமதியில்ல...
அடுத்த ஸ்டாப்ல
இறங்கிக்கோங்க’ என
அரற்றுவார்
அரவக்குறிச்சி நடத்துனர்

படியில் இளசுகள்
நின்றிருப்பதைக் கண்டால்
பயங்கர கோபம் வரும்
பாய்ச்சலூர் கண்டக்டருக்கு

சித்தப்பா, மாமா, ஆத்தா என்று
பயணிகள் பலரையும்
உறவுகொண்டு அழைத்து
சிரிப்பார்
உத்தமபாளையம் கண்டக்டர்

நல்லதோ... கெட்டதோ...
நாம போறது கொஞ்ச நேரம்
சத்தமில்லாம
சந்தோஷமா போவோமே
என்று
தத்துவம் சொல்லிக்கொண்டே
இருப்பார்
வாழ்க்கை கண்டக்டர்