பொறாமை : சுபமி





‘‘ஹய்ய்... அமெரிக்காவிலிருந்து பார்சல்! இந்த மாசம் எங்கப்பா என்னென்ன விளையாட்டுச் சாமான்கள் அனுப்பியிருக்காரோ...’’ என்று பெருமையுடன் நண்பன் வினோத்தைப் பார்த்தபடி பூரித்தான் அகிலேஷ்.
அகிலேஷின் அம்மா பார்சலைப் பிரித்தாள். உள்ளே ரோபோ மனிதர்கள், ராக்கெட் லாஞ்சர்கள். எல்லாமே இங்கு கிடைக்காத காஸ்ட்லி அயிட்டங்கள்!

‘‘டேய் வினோத்... இது எங்கப்பா அனுப்பி இருக்குற இருபத்தி நாலாவது பார்சல்டா! அமெரிக்கா போனதுல இருந்து ஒரு மாசங்கூட தவறலை! விதவிதமான இந்த வெளிநாட்டு டாய்ஸோட விளையாடுறது எத்தனை ஜாலி தெரியுமா?’’
வினோத் அமைதியாக இருந்தான்.
‘‘பாவம்டா நீ... ஓட்டை பந்துகளோடயே காலத்தை ஓட்டுறே! டேய் வினோத், உனக்கு என்னைப் பார்த்தா பொறாமையா இருக்குல்ல?’’

இப்போது வினோத் சிரித்தான். ‘‘நான் எதுக்குடா உன்னைப் பாத்துப் பொறாமைப்படணும்? நீ உங்கப்பா வாங்கியனுப்புற டாய்ஸ்களோடதானே விளையாடுறே... ஆனா, நான் தினமும் எங்கப்பாவோடவே விளையாடுறேனே’’ என்றவன், ‘‘பாரு... எங்கப்பா பைக் சத்தம் கேக்குது. நான் அவர்கூட விளையாடப் போறேன்டா... பை!’’ என்றபடி தன் வீட்டுக்குப்
பறந்தான் வினோத்.

அகிலேஷின் வயிற்றில் சுரீர்! பாவம், இப்போது அவனுக்குத்தான் வினோத் மீது பொறாமை!