வேலைக்குப் போகாதீர்கள்!




மனிதர்களின் வேலைகளைப் பறித்துக்கொள்ளும் புதிய புதிய மெஷின்களைக் கண்டுபிடிக்கும் திறமை நமக்கு இருக்கிறது என்றால், வேலையை இழந்த அந்த மனிதர்களுக்கு வேறு வேலைகளை உருவாக்கும் திறமையும் மனிதர்களுக்கு இருக்கிறது என நான் நம்புகிறேன்.
- ஜான் எஃப்.கென்னடி  

சிலர் இருக்கிறார்கள்... எப்போதும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தவிப்பார்கள். எதையும் உணர்வுபூர்வமாகவே அணுகுவார்கள். சென்டிமென்ட் பிடியில் சிக்கித் தவிப்பார்கள். பார்த்த உடனே நாம் முடிவு செய்துவிடலாம்... ‘இவர்கள் டாக்டர்களின் பொக்கிஷமாக மாறப் போகிறார்கள்!’

உதாரணமாக, இந்த நண்பரை வேறு ஒரு கிளைக்கு மாற்றிவிட்டார்கள். நண்பர் இன்று தற்போதைய பணி இடத்திலிருந்து விடுபடப் போகிறார். சென்டிமென்ட் போதையில் திளைத்திருக்கும் நம் நண்பர், ‘‘இதுதான் இந்த இடத்தில் நான் பார்க்கும் கடைசி ஃபைல்... இதுதான் நான் போடப்போகும் கடைசி பில்... இதுதான் நான் அட்டெண்ட் செய்யும் கடைசி கால்... நாளை காலை நான் இங்கிருக்க மாட்டேன்...’’ என்றெல்லாம் நினைக்கத் துவங்குவார்.

இந்த மென் உணர்வுகள் இதோடு அவரை விடாது. ‘‘இந்த டேபிள், பீரோ... இவற்றை நான் என்று பார்க்கப் போகிறேனோ? அழகாய் காற்று தருமே, இந்த மரங்கள்... இவற்றை மீண்டும் என்று பார்ப்பேனோ? நான் தினமும் வரும்போது, என்னைப் பார்த்து புன்னகைப்பாளே இந்தப் பெண்... இவளை மீண்டும் என்று பார்ப்பேனா? இனி, இந்தக் காட்சிகளைப் பார்க்கவே போவதில்லை... ச்சே, என்ன வாழ்க்கை இது!’’ என்பதாக அவரது புலம்பல்கள் நீளும்.

இந்தப் புலம்பல்களுக்கு என்ன அர்த்தம்? பணி புரிகிற இடத்தில் அதிகமாகப் பற்று வைத்து, அந்தப் பற்றால் சிரமப்படுகிறோம்!
இப்படி எல்லாம் வருத்தப்படத் தேவையே இல்லை. நம் பொருளாதார நலனுக்காக வேலைக்கு வந்தோம்... இங்கு இருந்த வரை பணியை நன்றாகச் செய்தோம்... அவ்வளவே! அடுத்து, பயணப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

எதுவுமே நிரந்தரம் அல்ல. ‘உறவுகள் எல்லாமே நீரில் மிதக்கும் மரக்கட்டைகள் போன்றவை. சந்தர்ப்பம் காரணமாக ஒன்றாக மிதக்கும். பின் நீரின் வேகத்திற்கு ஏற்ப அவை பிரிந்துவிடும். சில முன்னால் அடித்துச் செல்லப்படும்... சில கரையோரம் ஒதுங்கும்’ என்கிறது மகாபாரதம். மனித உறவுகளுக்கே இந்த கதி எனும்போது, பணிகள் தொடர்பான விஷயங்களில் அதிகப் பற்று தேவை இல்லை. எனவே, எங்குமே உங்கள் வேர்களை ஆழமாக ஊன்றி விடாதீர்கள். பிடுங்கும்போது அதிகக் காயம் ஏற்படும்.

ஆன்மிகக் கருத்துகள் உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பது முக்கியமில்லை. அவற்றை நடைமுறை வாழ்வில் எப்படி உபயோகிக்கிறீர்கள் என்பதில்தான் உங்களது நிம்மதியும், அமைதியும் அடங்கியிருக்கிறது. இதற்கு அர்த்தம், ‘வேலையை நேசிக்காமல் இரு’ என்பதல்ல. பணியை நேசிப்பது என்பது வேறு... அந்த நேசிப்பை முட்டாள்தனமாக்கி விடுவது என்பது வேறு. நமது நேசிப்பும், பற்றும் நம்மை உயர்த்தத்தான் பயன்பட வேண்டுமே தவிர, நம் முன்னேற்றத்தின் பாதையில் வேகத்தடை போட பயன்படக் கூடாது.

அதற்காக, ‘‘மனிதன் என்றால் உணர்வுக் கலவையாகத்தான் இருப்பான்... இவ்வளவு நாள் வேலை பார்த்த இடத்தை சட்டென மற என்றால் எப்படி? காசு, பணம் எவ்வளவு முக்கியமோ, கவிதைகளும் அவ்வளவு முக்கியம்தானே’’ என்று வாதிட வேண்டாம். நம் நல் உணர்வுகள் நம்மை பின்னோக்கித் தள்ளிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். பழைய இடத்தின் நினைவுகளில் சிக்கியிருந்தால், புதிய இடத்தின் நல்ல விஷங்கள் உங்கள் கண்ணில் படாது. அதில் கவனம் செலுத்த முடியாது.



பணி வாழ்வில் வெற்றி அடைந்தவர்களைப் பாருங்கள்... அவர்கள் மேலே செல்லும் அளவு லேசாக இருப்பார்கள். சுமைகளை சுமக்கும் பறவையால் உயரச் செல்ல முடியாது என்பதை அறிந்தவர்களாக இருப்பார்கள்!

நீங்களே கூட, ‘‘இவ்வளவு விஷயம் தெரிந்தும் நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்? இவன் ஒரு முட்டாள். ஆனா எப்படி முன்னேறிட்டான்’’ என்று யாரையோ பார்த்துப் புலம்பியிருப்பீர்கள். முன்னேற்றம் தடைப்பட தேவையற்ற சென்டிமென்ட்டும் ஒரு காரணம்!

நிறைய பேர் திட்டமிட்டிருப்பார்கள். ‘வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன், நண்பர்களுடன் நேரம் செலவிடப் போகிறேன்... என் தோட்டத்தில் செடி நடப் போகிறேன்... நேரமின்மை காரணமாக விட்டிருந்த புத்தகம் படிக்கும் வழக்கத்தைத் தொடரப் போகிறேன்... எழுதாமல் விட்டிருந்த கவிதைகளை எழுதப் போகிறேன்... ஓவியம் வரையப் போகிறேன்... சுற்றுலா செல்லப் போகிறேன்... செஸ் விளையாடப் போகிறேன்... கோயில்களுக்கு செல்லப் போகிறேன்’ என்றெல்லாம் அந்தத் திட்டம் நீளும். அதாவது, இப்போது இவற்றை எல்லாம் செய்வதற்கு இவர்களுக்கு நேரம் இல்லையாம்!

உறுதியாகச் சொல்ல முடியும்... இவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகும் நேரம் கிடைக்கப் போவதில்லை. இவ்வளவு நாள் சும்மா இருந்து விட்ட நீங்கள், இனிமேல் ஓய்வுக்குப் பிறகா சுறுசுறுப்பாக பொழுதுபோக்குகளில் ஈடுபடப்போகிறீர்கள்?

உங்களிடம் மேற்கண்ட பழக்கங்களை மேற்கொள்ள உண்மையான ஆர்வமும், ஈடுபாடும், ஏன்... திறமையும் இருந்திருந்தால் நீங்கள் எவ்வளவு பிஸியான வேலையில் இருந்திருந்தாலும், அதற்கெல்லாம் நேரம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். விதிவிலக்குகள் தவிர, நம்மில் யாருமே எப்போதுமே 24 மணி நேரமும் பிஸியானவர்கள் கிடையாது. பிஸியானவர்களாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்! ஏதோ ஒரு நாள் கூடுதலாக வேலை பார்த்துவிட்டு, அதைச் சொல்லியே காலம் தள்ளுவோம். இரண்டு மணி நேரம் கூடுதலாக உழைத்துவிட்டு, அதற்காக இருபது மணி நேரம் ஓய்வெடுப்போம்.

உங்களிடம் முயற்சி இல்லை. எனவே, நேரமும் இல்லை. ஏனென்றால் நேரம் என்பது ஆகாயத்திலிருந்தோ, கடைகளிலிருந்தோ வாங்கப்படும் பொருள் அல்ல. நமக்கு டி.வி பார்க்க நேரம் இருக்கிறது, சினிமா க்யூவில் நிற்க நேரம் கிடைக்கிறது, தேவையின்றித் தூங்க நேரம் கிடைக்கிறது, நெட்டில் மேய டைம் பிரச்னையில்லை... ஆனால், உபயோகமான பொழுதுபோக்கிற்கு நேரம் ஒரு பிரச்னையாகி விடுகிறது.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... பொழுதுபோக்கிற்கு என்று, உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ளும் எனர்ஜி தரும் விஷயங்களுக்கு என்று தனியாக நேரம் கிடைக்கப் போவதில்லை. அதை நாம்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பணி நாட்களில் கிடைக்கிற ஓய்வு தினங்களில் பொழுதுபோக்கிற்கென்று சில நிமிடங்களேனும் ஒதுக்கியே தீர வேண்டும். இல்லாவிட்டால், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்காமலாவது இருக்க வேண்டும்.

ஏனென்றால் அந்தப் ‘பின்னால்’ ஒரு நாளும் வரப் போவதில்லை. ஒருவேளை வந்தாலும், அந்தத் துறையில் அப்போதைய நவீன வளர்ச்சிகளுக்கு ஏற்றபடி நீங்கள் அப்டேட் ஆகிப் பொருந்த முடியாது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் திணறிப் போவீர்கள். உங்கள் துறையில் உங்களுக்குத் தெரிந்தவை காலாவதி ஆகியிருக்கும். ‘‘நாங்கல்லாம் அந்தக் காலத்துல...’’ என்று சொல்லிக்கொண்டு திரிய வேண்டியதுதான்!

நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் ஓய்வுபெற்ற பிறகு, இப்போது இருப்பதை விட பிஸியாக இருக்க நேரிடலாம். வயதாகி விடுவதால் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம்... எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் உண்டு!
ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளால் பல நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு பொழுதுபோக்கில் முழுமையாக ஈடுபட்டுவிட்டு, உங்களை ரிலாக்ஸ் செய்துகொண்டு வேலையைத் தொடருங்கள்... பிரமிக்கத்தக்க ரிசல்ட் கிடைக்கும். வேலை சார்ந்த உங்கள் மன இறுக்கம் குறையும்.
நமது மூளை வேலை வாங்க வாங்க சுறுசுறுப்பாக செயல்படும். இதனால் நம் செயல் திறன் அதிகரிக்கும்.
உண்மையிலேயே உங்கள் ஓய்வுக்காலத்தின் சுவை கூடும்!
(வேலை வரும்...)