ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்




‘‘என்னுடைய முதல் படம் ‘கேங்ஸ்டர்’. முதுகு முழுசாகத் தெரிவது போல உடை அணிந்து நடித்தேன். நிறைய முத்தக் காட்சிகளும் இருந்தன. படத்தைப் பார்த்ததும் என் அப்பா பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிட்டார். இப்போது பரவாயில்லை... அவருக்குப் பழகிவிட்டது’’ என்கிறார் கங்கணா ரனாவத்.

‘சைஸ் ஜீரோ’ மோகம் பாலிவுட் நடிகைகளைப் பிடித்து ஆட்டுகிறது. ஆனால் ஹுமா குரேஷி இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. ‘‘சற்றே பூசின மாதிரி இருப்பதை பிரச்னையாகவும் நினைக்கலாம்; பெருமையாகவும் நினைக்கலாம். நான் பெருமையாக நினைக்கிறேன். இதுதான் என் பர்சனாலிட்டி. நடிகை என்பவள் பட்டினி கிடந்து இளைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை’’ என விளாசுகிறார் ஹுமா.

‘சூப்பர் மாடல்’ படத்தில் பல்வேறுவிதமான பிகினி உடைகளை அணிந்து தோன்றுகிறார் வீணா மாலிக். ‘‘இதற்கு முன்பு எந்தப் படத்திலும் இத்தனை பிகினி அணிந்து நடித்ததில்லை. திரும்பத் திரும்ப பிகினியில் தோன்றி போரடித்துவிட்டது. இனிமேல் பிகினி அணிய வேண்டாம் என நினைக்கிறேன்’’ என்று அதிர்ச்சி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் வீணா.

தனது மூன்று வருடக் காதலர் ராபர்ட் பேட்டின்சனை பிரிந்துவிட்டார் கிறிஸ்டன் ஸ்டூவர்ட். இதனால் விரக்தியில் இருக்கும் கிறிஸ்டன், புத்த மத போதனை நூல்களைத் தேடித் தேடிப் படிக்கிறார். பிரிவின் காயங்களை ஆற்றுவதற்கு இந்த போதனைகள் உதவுகிறதாம்.

‘‘நான்கு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடும் ஹீரோயினாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை’’ என்கிறார் வனேசா ஹட்ஜன்ஸ். பாப் பாடகியாக இருந்து, டி.வி நடிகையாக மாறி, 15 வயதில் சினிமாவுக்கு வந்து 13 படங்களில் நடித்து முடித்துவிட்டார் வனேசா. இப்போது அவருக்கு 24 வயது. ‘‘நீண்ட காலத்துக்கு நான் நடிகையாக இருக்க வேண்டும். எனது ரோல் மாடல், நடிகை மெரில் ஸ்ட்ரீப். இப்போது ஹீரோயினாக நடிப்பது போலவே 60 வயதிலும் ஹீரோயினாக இருக்க ஆசைப்படுகிறேன்’’ என்கிறார் வனேசா.