காய்கறி விலை எப்போது குறையும்





கடந்த சில வாரங்களில் காய்கறிகளின் விலை கற்பனைக்கு எட்டாத உச்சம் தொட்டிருக்கிறது. பீன்ஸ் செஞ்சுரியைத் தாண்டி எகிறுகிறது. போன மாதம் கிலோ 40 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் இப்போது 110 ரூபாய். சில வாரங்களுக்குமுன் வாங்க ஆளில்லாமல் கிலோ 2 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இப்போது கிலோ 60 ரூபாய். 

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த செல்வி, மூன்று பேர் கொண்ட தம் குடும்பத்துக்கு, வாரம் 300 ரூபாய்க்கு காய்கறிகள் வாங்குவார். கடந்த வாரம் அதே காய்கறி 650 ரூபாய். ‘‘இறைச்சியோ, மீனோ வாங்கலாம் என்றால் அவை தினமும் ஒரு விலை விற்கின்றன’’ என்று அலுத்துக் கொள்கிறார். ஏற்கனவே அரிசி முதல் தண்ணீர் வரை எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையும் எகிறிவிட்ட நிலையில், காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது குடும்ப பட்ஜெட்டை தடுமாற வைத்திருக்கிறது.

இந்த திடீர் விலையேற்றத்துக்குக் காரணம் என்ன? ‘‘திடீர்னு நேத்தோ இன்னைக்கோ உயரல. பிப்ரவரி மாசத்துல இருந்தே விலை உயர்வு ஸ்டார்ட் ஆயிடுச்சு. வழக்கமா சித்திரை, வைகாசி மாதங்கள்ல லேசான விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். ஆனால் இப்போ மூணு, நாலு மடங்கு அதிகமாயிருக்கு. காரணம், உற்பத்தி குறைவு. ஒருகாலத்தில தமிழ்நாட்டுல இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரி லாரியா காய்கறிகள் போகும். இப்போ ஆந்திரா, கர்நாடகா, கேரளா இல்லைன்னா நமக்குக் காய்கறி இல்லை. அங்கே விளைஞ்சாதான் இங்கே சாப்பிட முடியும். போன வருஷம் பருவமழை பெய்யலே. 50 கிலோ விளைஞ்ச இடங்கள்ல 20 கிலோதான் விளைஞ்சிருக்கு. முன்னாடி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 500 லாரி காய்கறிகள் வரும். இப்போ 200 லாரிகள் வந்தாலே அதிகம். பாதிக்குப் பாதி குறைஞ்சிடுச்சு. ஒரு லோடு வந்தா எல்லா வியாபாரியும் மொய்க்கிறாங்க. டிமாண்ட் இருக்கதால விலை அதிகமாயிடுது’’ என்கிறார் கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் தியாகராஜன்.

ஒருகாலத்தில் மேட்டுப்பாளையம், ஊட்டி, திண்டுக்கல், வாணியம்பாடி, மாதனூர், மதுரை, தர்மபுரி பகுதிகளிலிருந்து கோயம்பேட்டுக்கு காய்கறிகள் வரும். இப்போது இந்தப் பகுதிகளில் இருந்து வெறும் 10 சதவீதம் மட்டுமே வருகிறது. ஆந்திரமும், கேரளமும்தான் 70 சதவீத காய்கறிகளை அனுப்புகின்றன. நியாயமாகத் தரவேண்டிய தண்ணீரை தர மறுத்து விவசாயத்தை வளப்படுத்திக்கொண்ட அம்மாநிலங்கள், இப்போது காய்கறிகளை அனுப்பி காசு பார்க்கின்றன.

மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு கிட்டத்தட்ட வழக்கொழியும் நிலையில் இருக்கிறது. டில்லியும், கான்பூரும் இல்லாவிட்டால் நாம் உருளைக்கிழங்கே சாப்பிட முடியாது. கேரளா இல்லையென்றால் இஞ்சி இல்லை. கர்நாடகா, ஆந்திரா இல்லையென்றால் தக்காளி இல்லை. கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் எல்லாம் கர்நாடகாவில் இருந்துதான் வருகின்றன. பெரிய வெங்காயத்துக்கு மகாராஷ்டிராவையே நம்பியிருக்கிறோம். முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், அவரைக்காய், முருங்கைக்காய், சின்ன வெங்காயம் போன்ற காய்கறிகள் மட்டும் ஓரளவுக்கு இங்கே விளைகின்றன.

‘‘தமிழகத்தில் விளைச்சல் நன்றாக இருந்தபோது தட்டுப்பாடே வந்ததில்லை. லாரி வாடகை உள்ளிட்ட இதர செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். இப்போது வெளிமாநிலங்களில் இருந்து வருவதால் இடைப்பட்ட செலவுகள் அதிகரித்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, இடைப்பட்ட வியாபாரிகளின் கமிஷன் என எல்லா செலவும் காய்கறிகளின் தலையில்தான் விழுகிறது. பிற பொருட்களைப் போல காய்கறிகளை பதுக்கி வைத்தெல்லாம் விற்க முடியாது. தமிழகத்தில் உற்பத்தி அதிகமானால் மட்டுமே விலை குறையும்’’ என்கிறார் கோயம்பேடு உரிமம் பெற்ற காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்திரன்.

அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், மிளகாய், சின்ன வெங்காயம், சுரைக்காய் போன்ற காய்கறிகள் ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் விளைகின்றன. சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் அங்கிருந்து காய்கறிகள் செல்கின்றன. கடந்த சில வாரங்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களையிழந்து விட்டதாகச் சொல்கிறார் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் நலச்சங்க செயற்குழு உறுப்பினர் ராசியப்பன்.

‘‘தண்ணீர் பிரச்னை பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. போதாக்குறைக்கு மின்தடை வேறு. பெரிய விவசாயிகளே தாக்குப் பிடிக்க முடியாமல் விவசாயத்தை விட்டு விலகிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கமாக இங்கிருந்து தினமும் 400 லாரி லோடு போகும். இப்போது வெறும் 40 லாரிகள் கூட அனுப்ப முடியவில்லை. தண்ணீர் பிரச்னை தீர்ந்து, சிறு விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டால்தான் விலையில் மாற்றம் சாத்தியம்’’ என்கிறார் ராசியப்பன்.

‘‘விவசாயத்தின் மீது அரசுகள் பாராமுகம் காட்டி வந்ததன் விளைவுதான் இந்த விலையேற்றம்’’ என்கிறார் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம். ‘‘தண்ணீர் பற்றாக்குறையைத் தீர்த்து, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காய்கறி விவசாயத்திற்கு அதிக பராமரிப்பு தேவை. ஆனால் ஆட்கள் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அதனால் ஒரு தலைமுறை விவசாயத்தை விட்டே நகர்ந்துவிட்டது. தற்காலிகமாக விலையைச் சமன்படுத்த, அரசே வெளிமாநிலங்களிலிருந்து காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம். காய்கறி விவசாயத்தை ஸ்பெஷல் கேட்டகிரியில் கொண்டுவந்து விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளின் தோட்டத்திற்கும் வேலைக்கு அனுப்ப வேண்டும். கூலியை விவசாயியும், அரசும் பகிர்ந்து கொள்ளலாம். தற்போது ஏற்பட்டுள்ள விலையேற்றம் தற்காலிகமானதல்ல. தீர்க்கமான செயல்திட்டங்கள் இல்லாவிட்டால் இது நிரந்தரமாகிவிடும்’’ என்கிறார் செல்வம்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்

1 கிலோ விலை (ரூபாயில்)
(கோயம்பேடு மார்க்கெட்டில்)
\போன மாதம்    இந்த மாதம்

பீன்ஸ்        25    100
சின்ன வெங்காயம்    40    110
தக்காளி        16    60
குடைமிளகாய்        25    65
கேரட்        20    45
இஞ்சி        50    200
சௌசௌ        22    45
புடலங்காய்        15    30
சேனைக்கிழங்கு        15    25
பாகற்காய்        20    30
வெண்டைக்காய்        8    20